வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

vklogoவாழ்த்துக் காதை

1.செங்குட்டவனின் பெற்றோர்
kaatchi2

குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை

குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை உள்ள இடைப்பட்ட நிலத்தைத்,தன் ஆணை என்னும் ஒரு மொழியால் ஆண்டு வந்தவர் இமயவரம்பன் சேரலாதன்.அவருக்கும் ஒளியுடன் திகழும் சூரியக் குல மரபினரான சோழரின் மகளுக்கும் பிறந்தவர் செங்குட்டுவன்.

செங்குட்டுவன்,கொங்கர்களுடன் இரத்தத்தால் சிவந்த கொடியப் போர்க்களத்த்தில் வெற்றி பெற்றவர்.அத்தகைய அவர் கங்கை என்னும் பெரிய ஆற்றின் கரைவரைச் சென்று,கோபம் கலந்த அகங்காரத்துடன் வஞ்சி நகரில் வீற்றிருக்கிறார்.

குறிப்பு

 1. ஞாயிற்று-சூரியன்
 2. செங்களம்-இரத்தத்தால் சிவந்த போர்க்களம்
 3. செருக்கி-அகங்காரத்துடன்

2.வடநாட்டு மன்னர்கள் கூறியது
nk1

வட ஆரிய மன்னர்,ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு,புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில்,புலி,கயல்,பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து
அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்,
‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
என்ற வார்த்தை இடம் துரப்ப;

வடநாட்டில் ஒரு பெண்ணுக்கு மாலை சூட்டும் சுயம்வரம் நடந்துக் கொண்டிருந்தது.அதில் கலந்துக் கொண்ட வடநாட்டு ஆரிய மன்னர்கள்,’தென் திசையில் உள்ள தமிழ்நாட்டை ஆளும் அரசர்கள் போரின் மேல் உள்ள ஆசையால் ஆணவத்துடன் எழுந்து,மின்னும் கொடிகள் தவழும் இமயமலை நெற்றியில் சிறப்பாக தங்களின் சின்னங்களான வில்,புலி,கயல் ஆகியவற்றைப் பொரித்தக் காலத்தில்,நம்மைப் போன்ற முடி சூடிய மன்னர்கள் இங்கு இல்லை போலும்’,என்று அனைவரும் கூடி இருந்த அவையில் தென் திசை மன்னர்களை இகழ்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வார்த்தையை,அங்கு வாழ்ந்து வந்த முனிவர்கள் கேட்டுவந்து செங்குட்டுவனிடம் அறிவுறுத்தினார்கள்.

எளிதாக உருள்கின்ற மாணிக்க ‘வட்டை’ என்னும் சக்கரத்தைக் குறுந்தடியால் தட்டிச் செலுத்துவது போல’,கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை செய்ய இமயம் என்னும் பெரிய மலையின் கல்லே சரியானது’,என்று அறிந்தவர்கள் சொன்ன வார்த்தை செங்குட்டுவனை வஞ்சி நாடு விட்டு வடநாடு நோக்கிப் போர் தொடுக்க தூண்டியது.

குறிப்பு

 1. மடவரல்-ஒன்றும் அறியாப் பெண்
 2. செருவேட்டு-போரை விரும்பி (செரு-போர்:வேட்டு-விரும்பி)
 3. வட்டை-சக்கரம்
 4. மாதவர்-முனிவர்
 5. குணில்-குறுந்தடி
 6. துரந்து-துரத்தி
 7. துரப்ப-துரத்த
 8. மால்-பெரிய
 9. வரை-மலை

3.செங்குட்டுவனின் வெற்றி

ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி,
பெயர்ந்து போந்து;நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து,
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி;
வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால்
பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக்
கடவுள்-மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி-

செங்குட்டுவன் தான் மேற்கொண்ட போரில்,ஆரிய நாட்டு மன்னர்களை வென்றார்.அந்த மன்னர்களின் முடிசூடிய தலையின் மீது,பெரிய இமயமலையில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட,தெய்வமான கண்ணகிக்குச் சிலை செய்யத் தகுதியானக் கல்லைச் சுமக்குமாறு செய்தார்.தான் விரும்பியபடி,கண்ணகிக்காக எடுத்து வந்த கல்லை,கங்கை ஆற்றின் நீரால் நீராட்டித் தூய்மை செய்து ‘நீர்ப்படை’ செய்து முடித்தார்.இதனால் அவரின் கொடியக் கோபம் தந்த வெப்பம் அடங்கி,தன் பெரிய நகரான வஞ்சி நகரத்துக்குப் போய் சேர்ந்தார்.நிலத்தை ஆளும் அரசர்கள் தங்களின் உயர்ந்த முடி சூடிய தலைகளால் வணங்கும்படி கல்லை தெய்வ வடிவம் கொண்ட சிலையாகச் செய்தார்.தன் பெரிய முலையால் சண்டையிட்ட கண்ணகியைப் பிரதிட்டை செய்தார்.அடுத்த நாள்,கண்ணகியின் கோயிலுக்கு மண்ணை ஆளும் அரசர்கள் செலுத்த வேண்டிய திறையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

குறிப்பு

 1. அணங்கு-தெய்வம்
 2. போந்த-தகுந்த
 3. நயந்த-விரும்பிய
 4. வெஞ்சினம்-கொடியக் கோபம் (வெம்-கொடிய:சினம்-கோபம்)
 5. வெம்மை-வெப்பம்
 6. படிமம்-உருவம்
 7. கடவுள் மங்கலம்- பிரதிட்டை
 8. பின்னாள்-அடுத்த நாள்
 9. கோட்டம்-கோயில்
 10. கேட்புழி-கேட்டும் இடம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>