7.செங்குட்டுவனின் வியப்பு
என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல்
பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை
நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்;
“என்ன இது!என்ன இது!என்ன வியப்பு!
தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த தங்கத் தோடையும்,’நாவலம்’ எனப்படும் சாம்பூநதம் என்னும் தங்கத்தால் ஆன ஆபரணங்களையும் அணிந்த,மின்னும் கொடி போன்ற பெண் ஒருத்தி மேலே வானத்தில் தோன்றுகிறாளே!”,
என்று வியந்தான் சேரன் செங்குட்டுவன்.
குறிப்பு
- தென்னவன்-பாண்டியன்
- என்னே-என்ன
- இஃது-இது
- கொல்-வியப்பு
- புனை-அலங்காரம்
- மேகலை-இடுப்பில் அணியும் நகை,ஒட்டியாணம்
- நாவலம் பொன்-சாம்பூநதம் என்னும் பொன்
- தோட்டு-தோடு
- இழை-ஆபரணம்
- மீ-மேலிடம்
- விசும்பு-வானம்
8.கண்ணகி பேசியது
தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில்
நல்விருந் தாயினான் நானவன் றன்மகள்
வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்;
“தென்னவனான பாண்டியன் குற்றம் அற்றவர்.தேவர்களின் மன்னனான இந்திரனின் கோயிலில் உயர்ந்த விருந்தாளி ஆகிவிட்டார்.நான் அந்தப் பாண்டியனின் மகள் ஆவேன்.வெற்றி வேளுடைய முருகனின் மலையில் விளையாடியதை நான் என்றும் மறக்க மாட்டேன்.தோழிமார்கள்,அனைவரும் என்னிடம் அடிக்கடி வாருங்கள்!”,என்றாள் வானில் தோன்றிய கண்ணகி.
குறிப்பு
- தீதிலன்-குற்றம் அற்றவன்
- கோன்-மன்னன்
- வென்-வெற்றி
- வேலான்-வேல் ஏந்தியவன்
- குன்றில்-மலையில்
- அகலேன்-அகல மாட்டேன்
- தோழிமீர்-தோழிமார்களே
- எல்லீரும்-எல்லோரும்
- வம்-வாருங்கள்
படம் மூலம்-
https://commons.wikimedia.org/wiki/File:Kannagi_statue_in_Poompuhar_1_JEG6142.jpg
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in