வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

vklogoவாழ்த்துக் காதை

14.உலக்கைப் பாட்டு
vk10

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்;

பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்;

சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாற்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்
பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்;

 

இனிய கரும்பை நல்ல உலக்கையாகக் கொண்டு,வளமான முத்தைப் பொலிவான காஞ்சி மரத்தின் நிழலில் புகார் நகரப் பெண்கள் குற்றுவார்கள்.வலிமையான சக்கரம் உடைய,கொடி கட்டிய உறுதியான தேரை உடையவன் செம்பியனான சோழன்.அவனின் மணம் பரந்த மாலை சூடிய வலிமையான பெரிய மலை போன்ற தோளை,உலக்கைக் குற்றும்போதும் புகார் நகரப் பெண்கள் பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாகும்!அந்தப் பெண்கள் ஒலிக்கும் பாடலே சிறந்த பாடல் ஆகும்!

பவளத்தால் ஆன உலக்கையால் புகழ்மிக்க முத்தை,மாடங்கள் உடைய மதுரை நகரப் பெண்கள் குற்றுவார்கள்.அவ்வாறு அவர்கள் குற்றும்போது,வானவர்களின் அரசனான இந்திரனின் ஆரம் விளங்கிய தோளை உடைய பஞ்சவனான பாண்டியனின் மீன் கொடியைப் புகழ்ந்துப் பாடும் பாடலே சிறந்த பாடல்!உள்ளத்தை வாட்டுகின்ற பாண்டியனின் வேப்ப மாலையை அவர்கள் பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாகும்!

தகுதியான அழகிய முத்தைச் சந்தன மரத்தால் ஆன உரலில் போட்டுச் சிறந்த யானையின் தந்தத்தால் வஞ்சி நகரப் பெண்கள் குற்றுவார்கள்.பகைவரைக் கடந்துப் போகாமல்,எதிர்நின்று கொல்பவன் மாலை அணிந்த சேர மன்னன்.அவன் கடம்ப மரத்தை அழித்த புகழ்,பரந்த இந்த உலகை மூடிக்கொண்டதைப் புகழ்ந்து,உலக்கைக் குற்றும்போதும் வஞ்சி நகரப் பெண்கள் பாடும் பாடலே சிறந்த பாடல்! உள்ளத்தைக் கவரும் சேரனின் பனந்தோடை வஞ்சி நகரப் பெண்கள் பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாகும்.

இவ்வாறு ‘வள்ளைப் பாட்டு’ என்னும் உலக்கைக் குற்றும் போது பாடும் பாடல்கள் மூலம் மூவேந்தர்களைப் போற்றிப் பாடினார்கள்.

குறிப்பு

 1. தீம்-இனிய
 2. செழு-வளமான
 3. பூம்-பொலிவு
 4. நீழல்-நிழல்
 5. அவைப்பார்-குற்றுவார்
 6. ஆழி-சக்கரம்
 7. திண்-வலிமை
 8. செம்பியன்-சோழன்
 9. வம்பு-மணம்
 10. அலர்-விரிந்த
 11. தார்-மாலை
 12. பாழி-வலிமை
 13. தடவரை-பெரிய மலை தட-பெரிய:வரை-மலை)
 14. ஆரிக்கும்-ஒலிக்கும்
 15. பாடல்சால்-பாடும்படி அமைந்த
 16. பவழ-பவளம்
 17. குறுவரே-குற்றுவரே
 18. வானவர்கோன்-வானவர் அரசனான இந்திரன்
 19. வயங்கிய-விளங்கிய
 20. பஞ்சவன்-பாண்டியன்
 21. உணக்கும்-வாட்டும்
 22. சந்து-சந்தனம்
 23. தகைசால்-பண்பில் சிறந்த (தகை-பண்பு:சால்-மிகுந்த)
 24. அணி-அழகு
 25. முத்தம்-முத்து
 26. வான்-சிறந்த
 27. கோடு-யானை தந்தம்
 28. அடு-கொல்

15.கண்ணகி வாழ்த்தினாள்

ஆங்கு,நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது சூளொழிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி
செங்குட் டுவன்வாழ்க என்று.

 

நீண்ட நிலத்தை ஆளும் மன்னர்கள்,நீண்ட வில் பொருந்திய மலை நாட்டை உடைய பொறையனான சேரனின் நல்ல தாளை வணங்குவது இல்லை.ஒளி சூழ எங்கள் தலைவியான கண்ணகி,’செங்குட்டுவன் நீடூழி வாழ்க!’,என்று அவனை வாழ்த்திப் போற்றினாள்.

குறிப்பு

 1. நீணில(ம்)-நீண்ட நிலம்
 2. பொறையன்-மலை நாட்டை உடையவன் (பொறை-மலை)
 3. ஏத்தினாள்-போற்றினாள்

வாழ்த்துக் காதை முடிந்தது
dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>