வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

vtklogo வரந்தரு காதை

1.மணிமேகலை யார்?

vtk1

வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்
தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி
வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்
யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக்

கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி
நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி
அணிமே கலையா ராயத் தோங்கிய
மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும்

வடதிசையில் உள்ள மன்னர்கள் பணிந்து வணங்கிய,பண்புகளில் பெரியவரான சேரன் செங்குட்டுவன்,கண்ணகி கடவுளின் வடிவத்தைத் தம் கண்ணாரக் கண்டார்.பின்,கண்ணகியின் தோழியான தேவந்தியை நேராகப் பார்த்து,”நீ வாய்விட்டு உரக்கச் சொன்ன மணிமேகலை என்பவள் யார்?அவள் துறவு மேற்கொண்டதற்குக் காரணம் என்ன?இந்த இடத்தில் சொல்”,என்று கேட்டார்.

“மன்னரின் வெற்றி என்றும் குறையாமல் உயர வேண்டும்,நாட்டில் மிகுந்த வளம் சுரக்க வேண்டும்”,என்று தேவந்தி வாழ்த்தினாள்.பிறகு,அழகிய மேகலை அணிந்தப் பெண்கள் கூட்டத்தில்,அவர்களை விட உயர்ந்த மணிமேகலை சிறந்த துறவறம் பூண்டதைப் பற்றிக் கூறத் தொடங்கினாள்.

குறிப்பு

 1. பெருந்தகை-பண்புகளில் பெரியவர் (தகை-பண்பு)
 2. கட்புலம்-கண் பார்வை
 3. செவ்வி-நேராக
 4. வாய்எடுத்து-வாய்விட்டு
 5. அரற்றிய-உரக்கச்சொன்ன
 6. கோமகன்-மன்னன்
 7. கொற்றம்-வெற்றி
 8. ஏத்தி-போற்றி
 9. அணி-அழகு
 10. மேகலையார்-மேகலை என்னும் இடை அணி அணிந்தவர்கள்
 11. ஆயம்-கூட்டம்
 12. வான்துறவு-சிறந்த துறவு (வான்-சிறந்த)

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>