வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

vtklogo வரந்தரு காதை

2.சித்திராபதியின் கேள்வி

vtk2

மையீ ரோதி வகைபெறு வனப்பின்

ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்
அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள்
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த
நித்தில விளநகை நிரம்பா வளவின

புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது
தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது
குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ
நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின
தலைக்கோ லாசான் பின்னுள னாகக்

குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்
யாது நின்கருத் தென்செய் கோவென
மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப

‘மணிமேகலையின் கருமையான ஈர கூந்தல் பகுதியாக அழகான ஐந்து வகை ஒப்பனை செய்யும் பருவத்தைப் பெற்றது.சிவந்த வரிகள் படர்ந்த செழுமையான கடை அமைந்த கருமையான விழிகள் வஞ்சத்தை உணர்ந்தன.அதையும் அறியாதவளாக இருக்கிறாள்.தனக்குள் ஒத்து விளங்கும் இரு பவளத்துக்கு உள்ளே ஒளி மிகுந்த முத்துக் கோவை போலச்,சிவந்த இதழ்களின் இடையில் தோன்றும் இளநகை முதிராத நிலையில் இருக்கிறது.நெருங்கிய முலைகள் நேராக எழவில்லை.தழுவப்படும் மார்பு பரந்து அகன்றது.தளருகின்ற இடை சிறுத்து விட்டன.அழகுடைய அல்குல் பரந்து விட்டது.இரண்டு துடைகளும் திரண்டன. அழகு செய்வதைப் பொறுக்காதவாறு,வண்ணம் நிறைந்து விளங்கும் சிறிய அடிகள் நெய் தோய்த்த தளிர் போல் உள்ளன.தலைக்கோல் பட்டம் பெற்ற ஆசான் முன் வராததால்,உயர்குடியில் பிறந்தோர் அவளைக் கணிகையாக கருத மாட்டார்கள்.அதனால் உன் எண்ணம் என்ன?என்ன செய்யலாம்?’,என்று மாதவியைப் பெற்ற தாயான சித்திராபதி மாதவியிடம் கேட்டாள்.

குறிப்பு

 1. மை-கருமை
 2. ஈர்-ஈரமுள்ள
 3. ஓதி-கூந்தல்
 4. வனப்பு-அழகு
 5. ஒழுகிய-ஓடிய
 6. செழுங்கடை-செழுமையான கடை
 7. அவ்வியம்-வஞ்சகம்
 8. நித்தில(ம்)-முத்து
 9. புணர்-சேர்க்கை
 10. புல்-கீழான
 11. நுணுகல்-நுண்ணியதாகல்,குறைதல்
 12. தகை-சிறந்த
 13. குறங்கு-தொடை
 14. கோலம்-அழகு
 15. நிறங்கிளர்-வண்ணம் ஒளிரும் (கிளர்-ஒளி)
 16. தலைக்கோல்-நன்றாக நாட்டியப் பயிற்சி பெற்ற பெண்கள்,அரசு அவை அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும் ‘தலைக்கோல் அரங்கில்’ நடனம் புரிவர்.அப்போது அவர்களுக்கு ‘தலைக்கோல்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.அவர்களை ‘தலைக்கோலி’ என்றும் அழைத்தனர்.
 17. குலத்தலை-உயர்குடியில் பிறந்தோர்
 18. மாக்கள்-மக்கள்
 19. நற்றாய்-பெற்ற தாய்

3.துறவறம் மேற்கொள்ளச் செய்தாள்

வருகவென் மடமகள் மணிமே கலையென்
றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு

விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக்
கோதைத் தாமங் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்

‘என் இளமகளே!மணிமேகலை!என்னிடம் வா’,என்று மணிமேகலையை மாதவி தன்னிடம் அழைத்தாள்.உருவமில்லாத மன்மதன் ஒரு பெரிய வில்லோடு,மணம் நிறைந்த மலர் அம்புகளையும்,வெறுத்து நிலத்தில் எரிந்து விடுமாறு,ஒழுகாகக் பின்னப்பட்ட ‘தாமம்’ என்னும் மாலையோடு,கூந்தலையும் களைத்து,புண்ணியத் தானங்கள் செய்து மணிமேகலையைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தாள்.

குறிப்பு

 1. மடமகள்-இளைய மகள்
 2. உருவிலாளன்-உருவம் இல்லாதவ மன்மதன்
 3. சிலை-வில்
 4. விரை-மணம்
 5. வாளி-அம்பு
 6. கோதை-ஒழுங்கு
 7. தாமம்-மாலை
 8. குழல்-கூந்தல்
 9. போதித் தானம்-போதி மாதவரான புத்தர் முன் செய்யும் புண்ணிய தானம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>