புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

4.மாதவியின் பதினோர் ஆடல்
(விஞ்சை வீரன் தன் காதலியிடம்,மாதவியின் பதினோர் ஆடல்களையும் காட்டி மகிழ்ந்தான்.)

madhavidancenm
மாயோன் பாணியும்,வருணப் பூதர் 35

நால்வகைப் பாணியும்,நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப்,பின்னர்ச்-
சீர்இயல் பொலிய,நீர்அல நீங்கப்-
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்,
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, 40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்,
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்; 45
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்;அவுணன் கடந்த
மல்லின் ஆடலும்;மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து,நிகர்த்துமுன் நின்ற 50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்;
படைவீழ்த்து,அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்;
வாணன் பேரூர் மறுகிடை நடந்து,
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்; 55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்;
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்;
செருவெம் கோலம் அவுணர் நீங்கத், 60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்;
வயல்உழை நின்று,வடக்கு வாயிலுள்,
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-
அவரவர் அணியுடன்,அவரவர் கொள்கையின்,
நிலையும் படிதமும்,நீங்கா மரபின், 65

பதினோர் ஆடலும்,பாட்டின் பகுதியும்,
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்;
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய 70
மேதகு சிறப்பின் விஞ்சையன்-அன்றியும்,

(கடவுள் வாழ்த்து)

“திருமாலைப் புகழும் தேவபாணியும்,வருணபூதம் நால்வரை புகழும் நால்வகைப் சிறுதேவபாணியும்,பல உயிர்களும் தம் ஒளியால் நலம்பெற வேண்டும் என்ற குறிக்கோளினை உடையதாக வானிலே ஊர்ந்து செல்லும் நிலவை வாழ்த்தும் சிறுதேவபாணியும் ஆடி,மாதவி நாட்டியத்தைத் துவங்குவதைக் காணாய்!

பின்னர்,ஒவ்வாத தாளங்கள் நீங்கவும்,பொருத்தமான தாள இயல்பு பொலிவு பெறுமாறும்,

(1.கொடுகொட்டி)

‘அசுரர்களின் திரிபுரத்தை எரித்துத் தம்மைக் காக்க வேண்டும்’,என்னும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று,தீ அம்பை செலுத்தி திரிபுரத்தை எரித்தவரும்,உயர்வுடன் விளங்கும் தேவருமான சிவபெருமான்,பைரவி அரங்கமாகிய சுடுகாட்டிலே உமையவளை ஒரு பக்கமாகக் கொண்டு,வெற்றிக் களிப்பாற் கைகொட்டி நின்று ஆடிய,கொடுகொட்டி என்ற ஆடலையும் ஆடுதல் காணாய்!

(2.பாண்டுரங்கக் கூத்து-பாண்டுரங்கம்)

தேரின் முன்னர்,தேர்ப்பாகனாய் நின்றிருந்த நான்முகன் காணுமாறு,பைரவி வடிவம் பூண்டு,தம் உடலெங்கும் வெண்ணீற்றை அணிந்து,சிவபெருமான் ஆடிய பாண்டுரங்கக் கூத்தினையும் அதோ பாராய்!

(3.அல்லி கூத்து-அல்லியம்)

கம்சனுடைய வஞ்சனையை வெல்ல நினைத்து,கார்நிற வண்ணனாகிய திருமால் ஆடிய ஆடல்களுள்,யானையின் கொம்பை ஒடித்து மகிழ்ச்சியோடு ஆடிய ஆடல்களுள் ஒன்றான அல்லித் தொகுதியையும் அதோ காணாய்!

(4.மல்லாடல்-மல்)

திருமால் மல்லனாய் வாணாசுரன் என்னும் அசுரனை வெல்ல ஆடிய மல்லாடல் அதோ பாராய்!

(5.துடிக் கூத்து-துடி)

பெரிய கடலில்,நீர் அலைகளை அரங்கமாகக் கொண்டு நின்று,தன்னை எதிர்த்து நின்ற சூரபத்மனின் வலிமையை வென்ற முருகன்,ஆடிய துடிக் கூத்தினையும் அதோ காணாய்!

(6.குடைக் கூத்து)

அசுரர்கள் தம் படைக்கலங்களைக் கிழே போட்டுவிட்டு வருத்தமுற்ற அளவிலே,குடையை முன்னே சாய்த்து அவர்முன் முருகன் ஆடிய குடைக் கூத்தினையும் அங்கே காண்பாய்!

(7.குடக்கூத்து-குடம்)

காமனின் மகனான அநிருத்தன்,வாணனின் மகளான உஷையைக் கடத்திச் சென்று விட்டதனால்,அவனைப் பிடித்துச் சிறை செய்துவிட்டனர்.அவனை விடுவிப்பதற்காக,வாணாசுரனது பெருநகர வீதியில்,நீண்ட  நிலத்தைத் தன் பாதங்களில் தாவி அளந்து,மாயவன் தந்திரமாக ஆடிய குடக்கூத்து என்னும் கூத்தையும் காண்பாய்!

(8.பேடிக் கூத்து-பேடியாடல்)

வாணனுடைய சிறையிலிருந்து தனது மகனை விடுவிப்பதற்காகக,தன் ஆண்த் தன்மையில் இருந்து மாறுபட்டுப் பெண்க் கோலத்தோடு காமன் சோநகரில் ஆடிய பேடிக் கூத்து என்னும் ஆடலை பாராய்!

(9.மரக்காற் கூத்து-மரக்காலாடல்)

கொதிக்கின்ற சினம் கொண்ட அசுரர்கள்,தேள்,பாம்பு,பூரான்,நட்டுவக்காலி போன்ற உருவெடுத்து நெளிவதைக் கண்டதும்,வஞ்சத்தால் செய்யும் கொடுஞ்செயல் பொறுக்காதவளாக,துர்க்கை மரக்கால் அணிந்து அவைகளை நசுக்கிக் கொல்லும்போது ஆடிய மரக்கால் ஆடல் காணாய்!

(10.பாவைக் கூத்து-பாவையாடல்)

அசுரரின் உக்கிரமான போர்க்கோலம் ஒழியச் செய்பவளாக,ஒரு அழகான கொல்லிப்பாவை உருவில் திருமகள் ஆடிய பாவைக் கூத்தினையும் காணாய்!

(11.கடையக் கூத்து-கடயம்)

வாணாசுரனின் நகராகிய சோ நகரத்தின் வடக்கு வாயிலுள்,வயலிடத்தே நின்று,உழவர்குலப் பெண்போல் வடிவம் கொண்டு இந்திராணி ஆடிய கடையக் கூத்தினையும் அதோ பாராய்!

இந்த எல்லா ஆடல்களையும்,அவரிற்கு ஏற்ற அணிகளுடனும்,கோட்பாடுடனும், நின்றாடலும் படிந்தாடலுமாகிய அவற்றின் தக்க மரபுகளுடனும்,இம் மாதவி ஆடிய பதினோர் ஆடலையும் காணாய்!அவ்வாடல்களுக்கு இசைந்த பண்களின் கூறுபாடுகளையும் கேளாய்!அவ்வற்றிற்கெனக் கூத்து நூல்கள் விதித்த கொள்கையோடு அவை விளங்குவதும் அறிவாய்!தாதுவிழும் பூம்பொழிலிலே இருந்து நான் உன்னிடம் கூறினேனே,அந்த மாதவி மரபினளான மாதவி இவளேதான்!”,

எனத் தன் காதலிக்கு மாதவியின் நாட்டியத்தைக் காட்டி,தானும் மகிழ்ந்தான்,மேன்மை தங்கிய சிறப்பினை உடையவனான தேவலோக இளைஞன்.

குறிப்பு

 1. தேவபாணி-தெய்வத்தை புகழும் கடவுள் வாழ்த்து பாடல்.பெருந் தேவபாணி,சிறு தேவபாணி என இருவகைப்படும்.
 2. பாணி-பாட்டு
 3. மாயோன்-திருமால்
 4. நால்வகை வருண பூதம்-
  பிராமண பூதம்
  அரச பூதம்
  வணிக பூதம்
  வேளாண்பூதம்
 5. மதியம்-நிலவு
 6. பாரதி-பைரவி
 7. பாரதியரங்கம்-சுடுகாடு
 8. திசைமுகன்-நான்முகன்,பிரமன்
 9. வாணன்-வாணாசுரன்
 10. கஞ்சன்-கம்சன்
 11. அயிராணி-இந்திரனின் மனைவி இந்திராணி
 12. நின்றாடல்-நின்றுகொண்டு ஆடுவது.
  அல்லியம்,கொட்டி,குடை,குடம்,பாண்டரங்கம்,மல் என்னும் ஆறுவகை ஆடல் வகைகள் இதனுள் அடங்கும்.
 13. படிந்தாடல்-தரையில் வீழ்ந்து ஆடுவது.
  துடி,கடையம்,பேடு,மறக்காலே,பாவை வடிவு என்னும் ஐந்துவகை ஆடல் வகைகள் இதனுள் அடங்கும்
 14. விஞ்சையன்-வித்தியாதரர்,வானவர்

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>