வீடு பேறு உணர்த்தும் மணிமேகலை – வாசுகி கண்ணப்பன் எம்.ஏ.,எம்.பில்.

தோற்றுவாய்;
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பல்வகையான இலக்கிய நூல்களில் ஐம்பெரும் காப்பியங்களும் பெரிதும் போற்றத்தக்கதாகும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பட்டது. பெளத்த மதத்தின் முதல் பெரும் காப்பியமாக போற்றப்படுவது. தலைசிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்துடன் இணைந்த காப்பியமாகும். அதனால் இது இரட்டைக் காப்பியத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, உலகிலேயே மிகக் கொடுமையான பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற உயர் நோக்கம் கொண்ட காப்பியம். மானுட நேயமும், மாதர்குல மேன்மையையும் விளக்கும் காப்பியமாகும். புத்த மதத் தருமங்களையும் பல சமயக் கருத்துக்களை விளக்கும் உன்னதக் காப்பியமாகும். பரத்தமைச் சமுதாயத்தை ஒழிக்க நினைத்த சாத்தனார் மாதவி என்று விலைமகள் பரம்பரையில் பத்தினியாய் வாழ்ந்த மாதவிக்கு தவப்புதல்வியாய் பிறந்த மணிமேகலையே காப்பியத்தின் தலைவியாய் ஆக்குகின்றார்.

காப்பிய பெருமை;

இக்காப்பியம் திரு.வி.க. அவர்களை உருக்க, உரைக்க மொழிகள் “யான் இலக்கிய உலகத்துடன் உறவு கொண்டபோது மணிமேகலையைக் கண்டேன். அக்காட்சியை என்னென்று கூறுவேன் ! அது தமிழ் அமுதமா? அற ஆழியா? சீல இமயமா? பெளத்த நிதியா? எல்லாஞ் சார்ந்த ஒன்றா? அச்செல்வ நூலை யாத்த ஆசிரியரை – தமிழ்ப் பெருமானை – என்போன்றோர் உய்யும் பொருட்டு பெளத்த தர்ம சாரத்தை தமிழில் இறக்கிய வள்ளலை அறவோரை எம்மொழியால் வழுத்த வல்லேன்! என்று தன் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து கூறியதிலிருந்து இதன் பெருமைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென உணரலாம்.

காப்பிய சுருக்கம்;

காவிரிப்பூம்பட்டினத்தில் வருடா வருடம் கொண்டாடப்படும் இந்திரவிழாவில் ஆடலரசி மாதவியின் நடனம் தனிச் சிறப்புடன் இடம் பெறும். கோவலன் இறப்பின் காரணமாக மாதவி தன் மகளுடன் பெளத்த துறவியானதால் ஆட வரவில்லை. மாதவியின் தாய் சித்திராபதி, வயந்த மாலையை தூதனுப்பியும் ஏற்கவில்லை. மாதவி கூறிய தெய்வீக வார்த்தை எண்ணுதற்குரியது. தன் மகளை, மா பெரும் பத்தின் கண்ணகியின் மகள், இத்தீந்தொழில் படாள் என்று கூறி, தன்னுடையப் புனிதத்தையும் வெளிப்படுத்துகின்றாள். தந்தையின் இறப்பைச் சொல்லக்கேட்ட மணிமேகலை, கண்ணீர் விட அவள் கட்டிக் கொண்டிருந்த மாலை தூய்மை இழக்க, புதுமலர் கொணர மாதவி மகளைப் பணிக்க, தோழி சுதமதியுடன் உவவனம் செல்வறிந்து, அவளைக் காதலிக்கும் சோழ இளவரசன் உதயகுமரன் வர, வருகையை அறிந்த மணிமேகலை பளிக்கறைக்குள் புகுந்து விடுகிறாள். மணிமேகலா தெய்வம் மயக்கமுறச் செய்து, இவளைக் காப்பாற்றி மணிபல்லவத் தீவுக்குக் கொண்டு செல்கிறது. விழித்தவளுக்கு பழம் பிறப்புணர்த்தி, வேற்றுரு கொள்ளவும், வான்வழிச்செல்லவும், பசியின்றி வாழவும் மூன்று மந்திரங்களைப் கூறி மறைகிறது தெய்வம். அத்தீவின் காவல் தெய்வமான தீவதிலகை கோமுகிப் பொய்கையில் வைகாசிப் பூர்ணிமையில் அமுதசுரபி என்னும் பாத்திரம் வெளிவரும், அப்பாத்திரத்தில் இடும் உணவு அள்ள அள்ளக்குறையாது என்றும், அது நின் கைப்படும் என்று கூறி, மேலும் சிறப்பிணை அறவண அடிகள்பால் அறிவாயாக என்று கூற,அதே போல் வணங்க ஆபுத்திரனின் அமுதசுரபி கைவரப்பெற்றாள். அதைப் பெற்று மந்திரத்தின் மகிமையால் வான் வழியில் தாயையும், தோழியையும் அடைந்து நடந்த்தைக் கூறினாள். யானைப் பசித்தீயால் அவதியுற்ற காயசண்டிகை வித்தியாதர மகள் கற்பரசி ஆதிரை கையால் அமுதசுரபியில் பிச்சையிட அறிவுறுத்தி, அதன்மூலம் தன் பசி தீரப்பெற்றாள். மணிமேகலை ஆற்றா மாக்களைக் கூவி அழைத்து பசிப்பிணி தீக்கினாள். காதல் வயப்பட்ட உதயகுமரனுக்கு, காயசண்டிகை உருவில் மணிமேகலை அறிவுரை கூற, உதயகுமரன் சந்தேகத்தின்பேரில் இரவு நேரத்தில் அவள் யார் என அறிய வந்தபோது, அங்கு வந்த காயசண்டிகையின் கணவன் காஞ்சனன், அவனை வாளால் வெட்டிக் கொன்றான். கொலைக்குக் காரணம் மணிமேகலை என்று கருதி அவளைச் சிறையிலிட மன்னி என்பவளின் கொடுமைகளுக்கு ஆளானாள். மணிமேகலை சாவக நாட்டின் ஆபுத்திரனைக் கண்டு பழம் பிறப்பினை உணர்த்தி அறம் செய்ய அறிவுறுத்தினாள். வஞ்சியில் கண்ணகி கோட்டத்தை வழிபட எதிர்காலம் அறிகிறாள். மாதவன் உருவம் பெற்று பல சமய வாணர்களின் திறம் அறிகிறாள். காஞ்சி சென்றுபசிப்பிணி நீக்கினாள். அறவண அடிகளிடம் புத்த தரும உரைகளை அறிகிறாள். தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுக என நோற்றாள் என காப்பியம் முற்றுகிறது.

பாத்திரத்தின் பெருமை ;

காப்பியத் தலைவியின் பெயரால் மணிமேகலை என பெயர் அமைக்கப்பட்டு காப்பியம் பெருமை அடைகிறது. கன்னிப் பருவத்தின் மன வளர்ச்சியையும் சமய முதிர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதே இக்காப்பியம். கட்டாயத்துறவை ஏற்றுக் கொண்டவள், சமண அறிவும், வாழ்வின் பட்டறிவுகளும் பெற்று தானாகவே பவத்திறம் அறுவதற்கு, நோற்கின்ற நிலை பெறுவதற்கு விளக்குகின்ற காப்பியமாக அமைகின்றது. மிக முக்கியமாகப் பரத்தையர் குலத்தில் பிறந்த ஒருத்தி சிறிது சிறிதாக இறைப் பண்புகளை உற்று அறவணடிகளால் சமய அறிவு பெற்று தெய்வ நிலைக்கு உயரும் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதே இக்காப்பியம். இக்கருத்து வள்ளுவரின் கருத்தான,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’ – குறளூ 972 என்ற திருக்குறளுக்கு வலு சேர்க்கிறது.
மணிமேகலையின் துறவு;

சிலப்பதிகாரத்தில் மாதவியின் மகளுக்குப் பெயரிட விளைந்தபோது கோவலன் “விஞ்சையிற் பெயர்த்து விழுமம் தீர்த்த எங்குல தெய்வப் பெயரிடுக’’ என்று கூற மணிமேகலை என்று பெயர் வைத்ததாக இளங்கோவடிகள் பாடினார். ஆனால் பெயர் வைத்த அன்றிரவு மணிமேகலா தெய்வம் தோன்றி,
“காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருந் தவக்கொடி யீன்றனை யென்றே’’

என்று பிறப்பிலேயே, பின் நடக்கவிருக்கும் துறவறத்தை உணர்த்துகிறார் சாத்தனார். அழகே உருவானவள் மணிமேகலை. தந்தை இறந்த செய்தி கேட்டு, சிந்தை வருந்திய நிலையிலும் அவள் அழகை,

“பணிமேக லைதன் மதிமுகந் தன்னுள்
அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய

கடைமணி யுகுநீர் கண்டன னாயிற்
மனையிட்டு நடுங்குங் காமன் பாவையை
ஆடவர் கண்டா லகறலு முண்டோ
பேடிய ரன்றோ பெற்றயி னின்றிடின்’’

என்று வர்ணிக்கின்றார் சாத்தனார். இவளுடைய தவநிலைகண்டு சித்ராபதி மட்டுமின்றி ஊரே வருந்தியது. அதற்குக் காரணமாக தாயைக் கொடியவள் என்றனர். மணிமேகலையும் விரும்பி துறவு ஏற்றுக் கொண்டதாக நூலில் தகவலில்லை. “மாமெரும் பத்தினி கண்ணகி மகள், திருந்தாச் செய்கை தீத்தொழில் படா ஆள்’’ என்று வயந்தமாலையிடம் கூறிய வாய்மொழியே மணிமேகலையின் வாழ்வை மாற்றிய வரிகளாகும்.

தான் பிறந்த இழிகுலத்தில் மீது வெறுப்பு கொண்ட மாதவி, தாயையும் வெறுத்தாள். கண்ணகிக்குத் துரோகம் புரிந்து விட்டதாகப் புழுங்கினாள். தான் பெற்ற மகளைக்கூட தன் மகளெனக் கூற விரும்பவில்லை. தன் மகள் மீதும் பரத்தையர் குலப் பெயர் சுமத்தப்பட்டு விடுமோ என்று அஞ்சினாள். அதனால் பிள்ளைப் பேறில்லா கண்ணகிக்குத் தான் பெற்ற மகளையே சேயாக்கினாள். கண்ணகி கோவலன், இறப்பிற்குப் காரணம் தானென மருகினாள். துடித்தாள். கோவலனை மட்டுமே விரும்பிய மாதவி பரத்தமைச் சேற்றில் தள்ளப்பட்டு விடுவோமோ என்று நடுங்கினாள். மகள் மணிமைகலை கற்பைக் காக்க அலளையும் துறவியாக்கினாள்.

மணிமேகலையை விரும்பிய உதயகுமாரனிடமிருந்து காக்க தெய்வமே அவளை மணிபல்லத்திற்குத் தூக்கிச் சென்று மந்திரங்களைப் போதித்து தவ நெறிக்கு துணை செய்ததுடன், புத்த பீடிகையின் பெருமைகளைக் கூறி அமுத சுரபியைப் பெறச் செய்து, துறவுக்கு நிறைவு சேர்த்தது. உதயகுமரன் இறந்தபோது முற்பிறவி எண்ணமேலீட்டால் நெருங்கிய போதும், “செல்லல், செல்லரி சேயரி நெடுங்காணய், அல்லியந்தாரோன்பால் செல்லல், செல்லல்’’ எனத் தடைவிதித்தது. இவ்வகையில் மணிமேகலையின் துறவு வாழ்க்கைக்குத் தெய்வங்களும் துணை நின்றன.

இக்காப்பியத்தில் மாதவி, மணிமேகலை, சுதமதி, ஆபுத்திரன், மாசாத்துலான், இராசமாதேவி, விசாகை, தருமத்தன் ஆகிய அனைவரிலும் இளமையில் துறவை ஏற்றவள் மணிமேகலை. மற்றவர்கள் சூர்நிலையால் வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டார்கள். ஆனால் மாதவியால், மணிமேகலை துறவியாக்கப்பட்டாள். மற்றவர்கள் இல்லறத்தில் இன்பம் அனுபவித்தவர்கள். ஆனால் மணிமேகலை வாழ்க்கை ஏதென்று அறியாதவள். மற்றவர்கள் துறவு வாழ்க்கையில் அமைதியாக வாழ்ந்தார்கள். அனால் மணிமேகலை சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் பல. மற்றவர்கள் துறவு தன்னல நோக்கம் கொண்டது. பிறருக்கு பயன்படாதது. ஆனால் மணிமேகலையின் துறவு மன்பதைக்கே உரியது. பெளத்த சமயத்திற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் பயன்பட்ட துறவு என்ற பல்வேறு நிலைகளில் மணிமேகலையின் துறவு வாழ்க்கை கூறும் அறம் பெரிதும் போற்றுவதற்குரியது.

மணிமேகலை காதல்;

மணிமேகலையின் முற்பிறப்பின் காரணமாக காதலும் தொடர நேர்ந்தது. உதயகுமரன் பழித்தபோதுகூட அவன்பால் அன்பு மேலோங்குகின்றது. மணிமேகலா தெய்வம் இந்நிலை குறித்து கேட்கும் போது கூட மறுக்காது அமைதி காக்கின்றாள். தீபதிலகையிடம் தன் முற்பிறப்பின் கணவன் இராகுலன் என்றே கூறுகின்றாள். உதயகுமரன் தவத்திற்கான காரணம் கேட்கும் போது கூட மற்றவர் காலில் விழக்கூடாத துறவி என்ற எண்ணமில்லாது இராகுலன் என்ற எண்ணத்தில் அடி வணங்குகின்றாள். கொலையுண்ட போதும்,
“நின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடிவானேன் காதல!’’ என்றுதான் அரற்றுகிறாள்.
சாத்தனார் முற்பிறவிக் கொள்கைகளை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் புத்தன் திருவடிகளை அடைவதற்கு நிர்வாணம் பெறுவதற்கு – முற்பிறவியை அறுக்க வேண்டும் என்னும் பெளத்தக் கொள்கையை வலியுறுத்துகிறார்.

மணிமேகலை மூலம் காட்டப்படும் பெளத்த அறங்கள்;
அழிபசி தீர்த்தல்;

உணவு, உடை, உறையுள், மருந்து அகிய நான்கும் ஒரு பிட்சுவின் தேவையென்று “திசவியாதானம்’’ என்னும் மகாயாண பெளத்த நூல் கூறினாலும் சாத்தனார் உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் எல்லோரும் பெறுதல் வேண்டும் என்றார். இன்றைய பொதுவுடைமைக் கொள்கை அன்று அறமாகக் கருதப்பட்டது. பசியின் கொடுமை பற்றியும், அதனைப் போக்கியவர்களின் பெருமையைப் பற்றியும் திபிலிகை கூறுவதாகப் பாடல்கள் உள்ளன. அமுதசுரபியைப் பெற்றவளிடம் அறவணடிகள் மக்கள், தேவர் இருவருக்கும் பொருந்தக்கூடிய அறம் பசிப்பிணி தீர்த்தலே என்றார். மணிமேகலை ஆபுத்திரனிடம் மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும், உடைநும், உறையுளும் அல்லது கண்டது இல் எனக் கூறுகிறாள். அவனும் உறுதி கூறுகிறான். முதன் முதல் அமுதசுரபியில் உணவு படைக்கும் ஆதிரை “பாரகம் அடங்கலும் பசிப்பிணி யறுக’’ என்று சொல்லி சோறை இடுகிறாள். ஆபுத்திரனுக்குப் பாலூட்டி வளர்த்தால், அப்பசு மறுபிறவியில் உயர் பேறு பெறுகிறது. எல்லோருக்கும் உணவு கொடுத்து அரும்பசி தீர்த்ததால் ஆபுத்திரன் அமுதசுரபியைப் பெற்றான். அடுத்த பிறவியில் அரசனாகும் பேறு பெற்றான். சாத்தனார் உணவிடும் பெளத்தக் கொள்கையை அறமாகக் காப்பியத்தில் குறிப்பிடுகின்றார். இக்கொள்கை எல்லா மதங்களும் வலியுறுத்தும் கொள்கையாகும். வள்ளலார் பசிப்பிணி நீக்க அன்று ஏற்றிய அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

நிலையாமை;

பெளத்தமதம் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமைக் கொள்கைகளைக் கூறி மனிதனை அறம் செய்யத் தூண்டுகிறது. காம்ப்பசி நீக்குதலை வலியுறுத்தும் வகையில் காயசண்டிகை வடிவில் உதயகுமாரனுக்கு அறிவுரை கூறி இளமை நிலையாமையை விளக்குகின்றாள். இதே போல் சுமதியும் கூறுகின்றாள். மணிமேகலை கூறும் வகையில்,
“பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
அறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம்’’
வலியுறுத்துகின்றாள். இவ்வாறு ஆசையை வேரறுக்க நிலையாமை உணர்வு ஒரு சாதனமாகவும், அறம் புரிவதற்கும் தூண்டுகோலாகிறது. மதம் தழுவாத திருக்குறள் கூட, நிலையாமைக்கென ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளது.

வினைக்கோட்பாடு;

வினைக்கொள்கை பெளத்த மதத்தில் முக்கியமானதாகும். இன்ப, துன்பத்திற்கும் ஏற்ற தாழ்விற்கும் அவரவர் செயல்களே காரணமாகும் என்கிறது. அதைத்தான் “தன்வினைத் தன்னைச் சுடும்’’ என்று எல்லோராலும் கூறப்படுவது. அதே போல் வைதிக சமயம் போல பெளத்தமும் சுவர்க்கம், நகரம் பற்றி கூறுகிறது. அதனால் தீங்கு செய்ய பயப்படுவர் என்ற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டது. நல்வினையை குசலம் என்றும், தீவினையை அகுசலம் என்று பெளத்தம் அழைக்கின்றது. மனம், மொழி, மெய்களால் செய்யும் தீவினைகளை அகிசலகம்மம் என்றார் புத்தர்.

நல்வினை;

அகுசல கம்மம் நீக்கி, சீலங்களைக் கடைபிடித்து, இரபோர்க்கு இல்லையெனாது கொடுத்து நல்வாழ்வு நடத்துதல் நல்வினை எனப்படும். இதனை நல்லறம் என்று சாத்தனார் பகர்கின்றார். அத்தகையோரே பேரின்பம் துய்ப்பர் என்கிற பெளத்த கொள்கை அனைத்து மதங்களும் ஏற்கும் கொள்கையாகும்.

நிறை களம்;

மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் சாத்தனார், அனைத்து துன்பங்களுக்கும் காரணம் காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றுமாகும் என்று உலகிற்கு உணர்த்துகிறார். காமத்தை அநித்தம், துக்கம், அநான்மா, அகசியெனத் தனித்துப் பார்த்து, பற்றறுக்கும் அசுப பாவனையால் கெடுத்தல் வேண்டும். வெகுளியை மைத்திரி, பாவனை, மூத்த பாவனை ஆகியவற்றால் கெடுத்தல் வேண்டும். மயக்கத்தை ஞான நூல் கேட்டல், சிந்தித்தல், பாவனை, தரிசனை ஆகியவற்றால் கெடுத்தல் வேண்டும் என்று அறவாணர் மணிமேகலைக்கு அறிவுறுத்தினார். அவர், அவளுடைய மனத்திருள் நீங்க வேண்டுமென்று, மங்கல மொழியினால் ஞான தீபத்தை நன்றாகக் காட்டினார். இவ்வகையில் இக்காப்பியம் கூறும் அறவழிகள், எல்லா சமயங்கள் கூறும் அறவழியோடு ஒத்தகொள்கையை உடையதாக உள்ளது. இருப்பினும் மணிமேகலைக் காப்பியம் வீடுபேறு அடைவதற்கான வழியை மட்டுமே கூறுகின்றது. பொதுவாக அனைவரும் கூறும் நல்லறம், அறம், பொருள், இன்பம், என்ற மூன்றும் அறவழியில் எய்தப்படும்போது இன்பம் என்ற வீடுபேறு தானே வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் திருவள்ளுவரும் திருக்குறளை முப்பாலாய்ப் பிரித்தார். ஆனால் பெளத்தம் மட்டும் வீடுபேற்றை மட்டும் பெறுவதை பெரிதாக போற்றும் வகையினை இக்காப்பியத்தின் மூலம் சாத்தனார். உணர்த்துகின்றார். அதில் கூட பரத்தமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்காப்பியத்தைப் படைத்துள்ளார்.

முதலில் கூறியது போல் இரட்டைக் காப்பியத்தில் ஒன்றான சிலப்பதிகாரம் அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பொருள் பற்றி கூறுகின்றது. சிலம்புடன் மேகலையும் சேர்த்தே நாற்பொருள் பயக்கும் நடைநெறி ஏற்படுகிறது என உரையாசிரிகள் கருதுகின்றது. ஆகவே வாழ்க்கை என்பது நல்லது, கெட்டது நிறைந்தது. இரவும், பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள். நிலத்தில் நெல்லும் முளைக்கிறது, தேவையற்ற களையும் முளைக்கின்றது. அன்னப்பறவை போல பிரித்துப் பார்த்து அல்லதைத் தவிர்த்து நல்லதை ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இக்காப்பியம் வலியுறுத்துவதாகும். ஆகவே நல்ல விளைவுகள் நடக்க மனம், மொழி மெய்யால் நல்லதை நினைப்போம், நல்லதைப் பேசுவோம், நல்லதையே செய்வோம்.

- வாசுகி கண்ணப்பன் எம்.ஏ.,எம்.பில்.

This entry was posted in சிலப்பதிகார கட்டுரைகள், மணிமேகலை, வாசுகி கண்ணப்பன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>