வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி,
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்,
செம்பகை,ஆர்ப்பே,கூடம்,அதிர்வே,
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30
பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி
இணை,கிளை,பகை,நட்பு என்று இந்நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி,
குரல்வாய்,இளிவாய்க் கேட்டனள்,அன்றியும்; 35
வரன்முறை மருங்கின் ஐந்தினும்,ஏழினும்,
உழைமுதல் ஆகவும்,உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும்;குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்,
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், 40
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி-
மாதவி,வலக்கையினைப் பதாகையாக(பெருவிரல் வளைத்து,மற்ற விரல்களை நிமிர்த்தி) யாழின் கோட்டின் மீது வைத்து,கெட்டியாகப் பிடித்தாள்.இடக்கையின் நான்கு விரல்களால் மாடகம் என்னும் நரம்பினை இசைக்கும் கருவியைத் தழுவினாள்.செம்பகை,ஆர்ப்பு,அதிர்வு,கோடம் என்னும் பகை நரம்புகள் நான்கும் புகுந்துவிடாமல் நீக்கும் முறையறிந்து வாசித்தாள்.
பிழையில்லாத மரபு சார்ந்த ஈரேழ் கோவையாய் அமைந்திருந்த அந்தச் சகோடயாழை,உழை நரம்பு முதலாகவும் கைக்கிளை நரம்பு இறுதியாகவும் கட்டினாள்.இணை,கிளை,பகை,நட்பு என்னும் நான்கு நரம்புகளின் வழியே இசை கூடும் சரியான நிலையைப் பொருந்த அமையுமாறு நோக்கினாள்.குரல்,இளி என்னும் இரு நரம்புகளின் இசை ஒத்திருப்பதை இசைத்து,தன் செவியால் அளந்தே அறிந்திட்டாள்.
இப்படி அளந்ததோடு,இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்,ஐந்தாம் நரம்பான இளியைக் குரலாய் நிறுத்தி ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.
உழை குரலாகவும்;உழை தாரமாகவும்;குரல் குரலாகவும்;குரல் தாரமாகவும்,அகநிலை,புறநிலை,அருகியல்,பெருகியல் எனப்படும் மருதத்தின் நால்வகைச் சாதிப் பண்களையும் அழகுற இசைத்தாள்.வலிவு,மெலிவு,சமம் எனும் மூவகை இயக்கமும் முறையாகப் பாடினாள்.அதன் பின்பு அவற்றின் இனத்தைச் சார்ந்த திறப்பண்புகளுடன் பாடும் தருணத்தில்,கோவலன் தன்னைப் பிரிந்தது நினைவுக்கு வந்தது.இதனால் பூங்கொடி போன்ற மாதவி சற்றே மயங்கியதன் விளைவாக,எடுத்துப் பாடிய பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
குறிப்பு
—————–
- பதாகை-நாட்டியத்தில் பெருவிரல் வளைத்து,மற்ற விரல்களை நிமிர்த்தி செய்யும் ஒருவகை முத்திரை.
- மாடகம்-நரம்புக் கருவிகளுக்கு சுருதி கூட்டுவதற்கான பகுதி
- விரகுளி-முறை
- இறுவாய்-இறுதி
- குறிநிலை-சரியான நிலை
- புணரும்-சேரும்
இப்பகுதியில் வரும் இசை குறிப்புகள்
- செம்பகை,ஆர்ப்பு,அதிர்வு,கூடம்-
என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள்.- செம்பகை-தாழ்ந்த இசை
- ஆர்ப்பு-தனக்கியன்ற மாத்திரை யிறந்த இசை. அஃதாவது மிக்கிசைத்தல்.
- கூடம்-பகைநரம்பின் இசையினுள் மறைந்து தனதிசை புலப்படாமை. அஃதாவது ஓசை மழுங்குதல்.
- அதிர்வு-இசை சிதறுதல்
- இணை,கிளை,பகை,நட்பு-
என்னும் சுரப்பொருத்தத்தின்படியே ஒவ்வொரு இராகமும் பாடப்படவேண்டும்- இணை-நின்ற நரம்பிற்கு ஏழாவது இடத்தில் வரும் பஞ்சமம்.
- நட்பு-நின்ற நரம்பிற்கு நாலாவது இடத்தில் வரும் சுரம் நட்புச் சுரம்.
- கிளை-நின்ற நரம்பிற்கு ஐந்தாம் இடத்தில் வரும் சுரம் கிளைச்சுரம்.
- பகை-நின்ற நரம்பிற்கு மூன்றாம் இடத்தில வரும் சுரமும், ஆறாம் இடத்தில் வரும் சுரமும் பகைச் சுரங்களாகும்.
- அகநிலை,புறநிலை,அருகியல்,பெருகியல்-
இவை நாலும் மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை என்னும் நால்வித யாழ் பேதத்தால் பதினாறு வகையாகும்.அவை அகநிலை மருதம்,புறநிலை மருதம்,அருகியல் மருதம்,பெருகியல் மருதம்,அகநிலைக்குறிஞ்சி புறநிலைக் குறிஞ்சி என்றாற்போல அந்தந்த யாழின் பெயர்களை அடுத்து வரும்.- அகநிலை-ஒவ்வொரு யாழின் ஆரம்ப சுரத்தில் வரும் இராகம்.
- புறநிலை-நால்வகை யாழ்களின் ஆரம்ப சுரத்திற்கு நாலாவதான நட்பு நரம்பில் தொடங்கும் இராகம். ச-க வைப்போல்.
- அருகியல்-நால்வகை யாழின் ஆரம்ப சுரத்திற்கு ச-பவைப்போல் இணையாக வரும் சுரத்தில் ஆரம்பிக்கும் இராகங்களாம்.இது ச-ப முறையாம்.
- பெருகியல்-நால்வை யாழ்களில் ஆரம்பிக்கும் சுரத்திற்கு முடிந்த சுரமாக வரும் சுரத்தில் துவங்கும் ராகங்களாம்.ப-நி யைப்போல்.
- வலிவு,மெலிவு,சமம்-
மக்கள் பாட இயலும் முறைகள் மூன்று.- வலிவு-எல்லாவற்றிலும் அதிக (வலிந்த) ஓசையுடையது.
- மெலிவு-எல்லாச் சுரங்களிலும் மெலிந்த ஓசையுடையது.
- சமன்-வலிவு மெலிவு மின்றிச் சமத்துவமான ஓசையுடையது.
-மீனாட்சி தேவராஜ்