புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

5.கடிதம் அனுப்புதல்

mis2

‘மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்;
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும், 60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்,
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅ·து அறிந்தீமின்’ என,
எண்-எண் கலையும் இசைந்துஉடன் போக;
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள்,படர்உறு மாலையின்
வசந்த மாலையை,’வருக’ எனக் கூஉய்த்,
‘தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் 70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு’ என-

மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற்;கோவலற்கு அளிப்ப-

“உலகிலுள்ள எல்லா உயிர்களையும் அவர்கள் மனம் விரும்பும் துணையோடு சேர்த்து வைக்க,இனிய இளவேனில் இளவரசன் மன்மதன் வந்தான்.அவன் அரசனைப்போல் எதையும் நெறிப்படச்செய்பவன் அல்ல.அந்திப் பொழுதாகிய அவ்வேளையிலே,அவனுக்குத் துணையாய் யானையின் அரிய பிடரியில் ஏறித் திங்கள் செல்வனும் வானிலே வந்து தோன்றினான்.அவனும் நடுநிலைமை உடையவன் அல்ல.

தம்முள் கலந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,பிரிந்து சென்றோர் தம் துணையினை மறந்து வாராது போயினும்,நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு அவர்களைத் தாக்கி நிற்பான் அந்த மன்மதன்!இதுவும் நீங்கள் அறிந்த ஒன்று தான்,இதில் புதுமை இல்லை.இதனைத் தாங்கள் அறிந்து,இங்கு வந்து அருள் செய்யுங்கள்” என்று வேண்டி எழுதினாள் மாதவி.

தான் பயின்ற அறுபத்து நான்கு கலைகளும் தொடர்ந்து தன்னைவிட்டு அகன்று போய்விட,அவற்றின் பண்ணும்,திறனும் இவள் நாவிற்கு ஒவ்வாமல் நிற்க,கட்டவிழ்ந்த ஆசையில் மழலை மொழிகள் பலவும் சொல்லிக் கொண்டே மடல் எழுதினாள்.பசலை படர்ந்த மேனியளான மாதவி,கோவலன் நினைவு மிகுந்து துன்பம் வருத்தும்,அம் மாலைக் காலத்தில்,தன் தோழியான வசந்தமாலையை,வருமாறு அழைத்தாள்.

வந்த வசந்தமாலையிடம், “தூய மலர்மாலை போன்ற இக்கடிதத்தில் நான் எழுதியவற்றின் பொருள் அனைத்தும் கோவலனுக்குப் புரியுமாறு அளித்து,அவரை என்னிடம் அழைத்து வருவாயாக”,என்று ஆணையிட்டாள்.

மாதவி கொடுத்த மாலையை வாங்கிய,குருதிக்கறை படிந்த வேல்முனை போன்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,புகாரின் கூலக்கடை வீதியில் இருந்த கோவலனைக் கண்டு,அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.

குறிப்பு
—————–

 1. இறும்பூது-அதிசயம்
 2. தணந்த-பிரிந்த
 3. செவ்வியன்-நடுநிலை உடையவன்
 4. வாளி-அம்பு
 5. கோடல்-விடுதல்
 6. எண்ணெண்-அறுபத்து நான்கு
 7. தளைவாய்-பிணைப்பு கட்டவிழ்ந்து
 8. படர்-நினைவு
 9. உறு-மிகுதி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

2 Responses to புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

 1. பொன்முடி says:

  நன்று!

  ஆயினும்,

  ‘மன்னுயிர்’ ‘இன்னிள’ என்னும் சீர்களை
  ‘மன்உயிர்’ ‘இன்இள’ என்றெல்லாமெழுதியிருப்பது தவிர்க்கப்படவேன்டியவொன்று.

  இலக்கியங்கற்போர் மன்னுயிரென்பதையும் இன்னிளவென்பதையும் அறிந்துதானிருப்பர். அறியாதோர் அறிந்துகொள்லவேண்டுமேயன்றி அவர்களுக்காக ஒரு சீரின் இடையில் உயிரெழுத்துவருமாறெழுதுதல் முறையன்று.

  காற்புள்ளிவந்தவிடங்களிலும் முற்றுப்புள்ளிவந்தவிடங்களிலும் சொற்களுக்கிடையேயான இடம்விடுதல் காணப்படவில்லை. அங்கெல்லாம் இடம்விடுதல் செய்யவேன்டியவொன்றாகும்.

  “அவன் அரசன் போல் எதையும் நெறிப்படச் செய்பவன் அல்ல.”

  என்றிருக்கிறது. ‘அரசனைப்போல்’ என்பதில் ‘ஐ’ என்னும் இரண்டாம்வேற்றுமைக்கான உருபு வெளிப்பட்டது. இந்த உருபை நீக்கியெழுதும்போது சொற்களை பிரித்தெழுதுவது குற்றம். எனவே, ‘அரசன்போல்’ என இங்கே சேர்த்தெழுதியிருக்கவேண்டும்.

  ‘நெறிப்படச் செய்பவன்’ என்பதில் ‘நெறிப்படச்’ என்பது ஒரு தனிச்சொல்லைப்போலுள்ளது. இதுவும் குற்றமே. வல்லினமெய் சொல்லுக்கு ஈற்றெழுத்தாகாது. எனவே இதை, ‘நெறிப்படச்செய்பவன்’ என சேர்த்தேயெழுதவேண்டும்.

  ‘செய்பவன்’ என்பது வினைமுற்றாதலால் இத்துடன் பொருள் முடிந்துவிட, ‘அல்ல’ என்பது இந்த வாக்கியத்தோடு ஒட்டாமல் தனித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, ‘அல்ல’ என்பது பலவின்பாலுக்கானது. ‘செய்பவன்’ என்பது உயர்திணைக்குரியதும் ஆண்பாலைக்குறிப்பதுமாகும். எனவே, ‘நெறிப்படச்செய்பவனல்லன்’ என்றேயிருக்கவேண்டும்.

  • admin says:

   வணக்கம்,

   கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி அய்யா.

   மீனாட்சி தேவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>