புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

6.கோவலன் கடிதத்தை மறுத்தல்
mis1

‘திலகமும்,அளகமும்,சிறுகருஞ் சிலையும்,
குவளையும்,குமிழும்,கொவ்வையும் கொண்ட 75

மாதர் வாள் முகத்து,மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்து,நிலா உதவிய 80

நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி,
வருக என வந்து,போக’ எனப் போகிய,
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக், 85

கிளிபுரை கிளவியும்,மடஅன நடையும்,
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும், 90

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்,
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும்,குழலும்,தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும்,திருமுலைத் தடமும், 95

‘மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி-உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்,
தளர்ந்த சாயல்,தகைமென் கூந்தல் 100

கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி,
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி,அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின்,ஆயிழை!
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்கு என- 110

(கண்கூடு வரி)

நெற்றியில் திலகத்தையும்,அதன் மேல் கூந்தலையும்,புருவம் எனச் சிறிய கரிய வில்லையும்,கண்கள் எனக் குவளை மலரையும்,மூக்கு எனக் குமிழ் மலரையும்,வாய் எனக் கொவ்வைக் கனியையும் கொண்டவள் மாதவி.அவள் தன் அழகிய ஒளிவீசும் முகத்திலே என் மேல் காதல் கொண்டவள் போல் வலிய எண்ணத்தோடு,என் முன்னே அன்றொரு நாள் தோன்றி நடித்தாள்.அதுதான் அவள் நடித்த ‘கண்கூடு வரி’.

(காண் வரி)

கூந்தல் என மேகத்தைச் சுமந்து,அதன் சுமையால் வருந்திய நிலா போன்ற முகத்தில்,கண்கள் எனக் கயல்மீன்கள் உலாவித் திரிகின்ற தன் அழகை வெளிப்படுத்தி,தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து,ஒளியைத் தருகின்ற இள முத்தினைப் போன்ற தன் புன்னகையைக் காட்டி,நான் ‘வா’ என்றழைத்தால் வந்து,‘போ’ என்று சொன்னபோது சென்ற,அந்தக் கரிய நீண்டக் கண்களை உடையவளின் ‘காண் வரி’ என்னும் நடிப்பினையும் கண்டேன்.

(உள் வரி)

அந்திமாலை வந்தால் பிரிவால் வருந்தி,சிந்தனையில் நோய் பெருகும் என் வருத்ததைக் கண்டு,அவள் தன் கிளி மொழிகளையும்,அன்னம் போன்ற மென்னடையையும்,களிப்புடைய மயில் போன்ற சாயலையும் மறைத்து வைத்து,போர்புரியும் வேல்போன்ற நெடியக் கண்களையுடைய ஏவல் பெண் போன்ற உருவம் புனைந்து,தனியாக என்னருகே பணிவுடன் வந்து நடிப்பாளே,அவளின் ‘உள்வரி’ என்னும் நடிப்பினையும் நான் உணர்வேன்.

(புற வரி)

கால் சிலம்புகள் கணீர் என ஒலிக்கவும்,மேகலை அசைந்து ஒலி எழுப்பவும்,அணிகலன்கள் பூண்ட சுமையை தாளாத மெல்லிடையாள்,என்மீது காதல் கொண்டவள் போல் என்னை நோக்கி,அவளை நான் பிரிந்து வருந்துவதை அறிந்திருந்தும் கூட மனம் மாறி என்னுடன் இணைந்திருக்காமல்,புறத்தே நின்று ஆடிய ‘புற வரி’ என்னும் அவள் நடிப்பினையும் அறிவேன்

(கிளர் வரி)

பூமாலையும்,குழலும்,பூந்தாதுக்கள் சேர்ந்த கூந்தல் அலங்காரமும்,ஒற்றை வட முத்து மாலையும்,அழகிய மார்புகளும்,இவைகளின் சுமையால் வருந்துகின்ற மின்னல் போன்ற இடையும்,அழகிய நெற்றியும் உடையவள் மாதவி.அவள்,என்னருகே வாராது,வாயில் புறம் வந்து நிற்பாள்.என் ஆசையை ஏவல் மகளிர் வாயிலாகக் குறிப்பால் செய்தியாக உணர்த்திய போதும்,வேறு பொருள் கொண்டவள் போல அழகிய கூந்தலும் தளர்ந்த மேனியும் உடைய அவள் நடிப்பாலே,அதுதான் அவள் நடித்த ‘கிளர்வரி’.

(தேர்ச்சி வரி)

முன்பு நான் அவளைப் பிரிந்து வாழ்ந்தபோது,என் பிரிவால் வருந்தியவளாக,எனது சுற்றத்தார் முன்,தான் மிகவும் துயரப்படுபவள் போல் பாவனைச் செய்து,துயரங்களை எல்லாம் ஆராய்ந்துக் கூறி நடித்தாளே,அந்தத் தேர்ச்சிவரியையும் கண்டேன்.

(காட்சி வரி)

வண்டுகள் வந்து ஊதி மலரவைக்கும் பூங்கோதையை உடையவள்,மாலைப் பொழுதிலே மயங்கி,நான் பிரிந்தச் செய்தியைக் கண்ணில் படுகின்ற எல்லோரிடமும் சொல்லிப் புலம்பி,அவர்கள் அனுதாபத்தைப் பெற நடிக்கும் காட்சிவரியையும் கண்டேன்.

(எடுத்துக்கோள்வரி)

என் பிரிவால் வாடுபவள் போல்,அடுத்துடுத்து என் சுற்றத்தார் முன் அவள் மயங்கிய பொய் மயக்கமும்,அவர்களிடம் தன் துயரை எடுத்துக் கூறி,தீர்த்துவைக்க வேண்டும்,’எடுத்துக்கோள்வரி’ என்னும் அவள் நடிப்பினையும் அறியாத ஒருவன் அல்ல நான்.

பெண்ணே,அவள் ஆடல் மகள்! அதனால் தான் என் மேல் காதல் உடையவள் போல இயல்பாய் நடித்தாள்.அவள் நடித்த நாடங்கள் எல்லாம் அவள் தகுதிக்குப் பொறுத்தமானவையே!

இவ்வாறெல்லாம் மாதவியை இகழ்ந்தக் கோவலன்,அவள் அனுப்பிய மடலைப் பெற மறுத்துவிட்டான்.

குறிப்பு
—————–

 1. சிலை-வில்
 2. வாள்-ஒளி
 3. மதைஇய-அழகிய,வலிய
 4. பாகு-தேன் பாகு
 5. பொதி-நிறைவு,செறிந்து
 6. புயல்-முகில்
 7. நாகு-இளமை
 8. நகை-புன்முறுவல்
 9. நிலம்-அழகு
 10. சிலதியர்-பணிப்பெண்கள்
 11. நுசுப்பு-இடை
 12. சிறுகுறுந் தொழிலியர்-பணிப்பெண்கள்
 13. உறு-நெருக்கம்
 14. கிளை-சுற்றம்
 15. ஆயிழை-பெண்
 16. குழல்,அளகம்,கொண்டை,பனிச்சை,துஞ்சை என்று கூந்தலை ஐந்து பிரிவுகளாக சங்க கால மகளிர் பின்னிக் கொண்டனர்.இதனை ‘ஐம்பால் கூந்தல்‘ என்பர்.

வரிக்கூத்து

koothu

ஒருவர் பிறந்த நிலத்தின் தன்மை,அவர்கள் செய்யும் தொழிலின் தன்மை ஒட்டி நடிப்பது வரிக்கூத்து.அவை எட்டு வகைப்படும்.

 • கண்கூடு வரி-தான் காதல் கொண்டு ஏற்றக் காதலன்,அவள் மனை வாழ்வில் என்ன பலன் தருவான்,என்ற எண்ணம் இல்லாமல் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் அவனை மகிழ்விப்பதே தருமம் என்று வாழ்வது.
 • காண் வரி-தலைமகன் விரும்பிய பொழுது தாழாமல் வந்து அவனை மகிழ்விப்பதும் அவன் போவெனப் பணித்த பொழுது அவ்விடம் விட்டு அகல்வதால் அவனை மகிழ்விப்பதுமாகிய ஒரு ஒழுக்கம்.
 • உள் வரி-வேறு உருவம் பூண்டு நடிப்பது .
 • புற வரி-அனைத்து மகிழ விரும்பும் காதலனை நெருங்காமல் விலகிச் சென்று அவனது காதல் வேட்கையை மிகுவிக்கும் விளையாட்டு.
 • கிளர் வரி-ஊடிப் பிரிந்த காதலனைச் சேர்த்து வைக்கச் சிலதியர் அவர்களுக்கு இடை நின்று முயல்வதும்,அப்பொழுது காதலி, அணைய விழையும் காதலனின் மொழியில் அவன் கருதாத குறிப்பைக் கற்பித்துக் கொண்டு ஊடி அகல்வது.
 • தேர்ச்சி வரி-தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில்,பிரிவினால் உண்டாகும் துயர் மிகுதியை, அவளது சுற்றத்தாரிடம் தலைவி கூறிக் கூறி வருந்துவது.
 • காட்சி வரி-தலைவன் பிரிவால் உண்டான துயர் மிகுதியால்,காதலி பித்துப் பிடித்தவளைப் போல்,கண்ணில் படுபவர்களிடம் தன் துன்பத்தை கூறி புலம்புவது.
 • எடுத்துக்கோள் வரி-பிரிவால் வருந்தும் காதலி செயலற்று மயங்கி விழுதலும்,அருகிருந்த சேடியர் அவளைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவிப்பதும்.

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>