புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

7.மாதவி வாடினாள்
vblog7

அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப-

‘மாலை வாரார் ஆயினும் மாண்இழை! 115
காலைகாண் குவம்’ எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி-தான்-என்.

அழகிய பொன் தோடு அணிந்தத் திருமுகத்தில்,அழகிய நகைகள் அணிந்த மாதவி அனுப்பிய மடலைக் கோவலன் வாங்க மறுத்ததால் வருந்தினாள் வசந்தமாலை.வாடிய மனதுடன்,இதழ் விரிந்த மாலையணிந்த மாதவியிடம் விரைந்துச் சென்று,கோவலன் மடலை வாங்க மறுத்த செய்தியைக் கூறினாள்.

வசந்த மாலை உரைத்த செய்தியைக் கேட்ட மாதவி,’பெருமைப் பொருந்திய அணிகலன்கள் அணிந்தவளே!இம்மாலையிலே அவர் உன்னுடன் வாராமல் போனாலும்,நாளைக் காலையிலாவது அவரை இங்கே நாம் காணபோம்’,எனக் கூறினாள்.பின் செயலற்ற மனத்தோடு,தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது,அழகிய மலர் போன்ற நீண்டக் கண்களையுடைய மாதவி,சிறுபொழுதும் இமைகள் மூடாதுப் பிரிவுத் துயரால் வாடினாள்.

குறிப்பு
—————–

 1. தோடு-இதழ்
 2. அலர்-விரிந்த
 3. துனைந்து-விரைந்து
 4. மாண்-மாட்சிமை
 5. இழை-அணிகலன்
 6. கையறு- செயலற்ற
 7. அமளி-படுக்கை
 8. மிசை-மேல்

வெண்பா

செந்தா மரைவிரியத்,தேமாங் கொழுந்து ஒழுக,
மைந்தார் அசோகம் மடல்அவிழக்–கொந்தார்
இளவேனில் வந்ததால்;என் ஆம்கொல்;இன்று
வளவேல்நற் கண்ணி மனம்? 1

‘ஊடினீர் எல்லாம்,உருஇலான்-தன் ஆணை!
கூடுமின்’ என்று குயில் சாற்ற – நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பாணிக்கு அலந்தாய்! காண்.

செந்தாமரை மலர்கள் இதழ் விரிந்தன.மாமரங்களில் தளிர்கள் அழகொழுகத் துளிர்த்தது.அழகிய பொழுதில் அசோகமும் இதழ் விரித்தது.பூங்கொத்துக்கள் எல்லாத் திசையும் நிறைந்திருக்கும் இளவேனில் காலமும் வந்தது.கூர்வேலினைப் போன்ற கண்களையுடைய மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால் இனி என்னென்ன துன்பங்களுக்கு ஆளாகுமோ?

‘ஊடிப் பிரிந்து வாழும் உள்ளங்களே!காமதேவனின் கட்டளையின்படி நீங்கள் எல்லாரும் கூடி வாழுங்கள்!’,எனக் குயில்கள் அறிவித்தன.மாதவியின் கானல்வரிக் கேட்டு ஊடி நிற்கும் கோவலனே!உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த அவளின் மெல்லிய மலர்ப் போன்றப் முகத்தை இந்த இளவேனில் காலத்தில் நீயும் சென்று காண்பாயாக! என்று கோவலனுக்கு உரைப்பது போல் குயில்கள் கூவிக்கொண்டிருந்தன.

குறிப்பு
—————–

 1. மைந்து-அழகு
 2. ஆர்-பொருந்திய,நிறைந்த
 3. கொந்து-கொத்து
 4. வேனல்-வேனில்

வேனிற் காதை முற்றிற்று.

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

Comments are closed.