புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

9.நாட்டின் வளத்தை உணர்த்தும் ஒலிகள்

lotusrain

கரியவன் புகையினும்,புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும்,கிழாரும்,வீங்குஇசை ஏத்தமும் 110

ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல்,கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும்,கனைகுரல் நாரையும்,
செங்கால் அன்னமும்,பைங்கால் கொக்கும், 115
கானக் கோழியும்,நீர்நிறக் காக்கையும்,
உள்ளும்,ஊரலும்,புள்ளும்,புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்,
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்-

சனி வானில் புகைவது,தூமகேது தோன்றுவது,விரிந்த கதிர்களையுடைய சுக்கிரன் தென்திசை செல்வது ஆகியவை கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள்.இந்தக் கெட்ட சகுணங்கள் தோன்றினாலும்,காற்றானது குடுகு மலை உச்சியில் மோதி,கடுங்குரல் இடி முழங்கி,கருமுற்றி,’மழை’ என்னும் வளம் நாட்டில் என்றும் சுரக்கும்.

இதனால் பெரும் வெள்ளத்துடன் வரும் காவிரிப் புதுநீர்,குடகு மலையில் விளைந்து குவிந்த பல பண்டங்களுடன் வந்து,பெரிய கரையைக் குத்தியிடிக்கும் கடலின் வளம் பொருந்திய பொருட்களை எதிர்கொண்டு,கடலை வந்து சேரும்.அப்போது மடைகளில் இருந்த பலகைகள் மேல்,நீர் அடித்ததால் எழுகின்ற சத்தம் எங்கும் ஒலிக்கும்.இந்த ஒலியைத் தவிர,தேவை ஏற்படாததால்,ஆம்பி,கிழார்,உரத்து ஒலிக்கும் ஏற்றம்,பிழா போன்ற நீர் இறைக்கும் கருவிகளின் ஒலி நாட்டில் கேட்காது.

இதுபோன்ற வயல்களில்,கரும்பும் செந்நெல்லும் செழித்து வளர்ந்துள்ள நிலத்தையுடைய நீர் நிலைகளில்,பசுமையுடனும் பொலிவுடனும் தாமரைகள் பூத்து நிற்கும்.அங்கு,சம்பக்கோழி;கனைக்கும் குரலுடைய நாரை;சிவந்த காலுடைய அன்னப்பறவை;பசிய கால்களைக் கொண்ட கொக்கு;கானாங் கோழி;நீரில் நீந்தும் காக்கை;உள்ளான்;குளுவை;பறவை;பெருநாரை ஆகிய நீர்நிலைப்பறவைகள் வெற்றி பெறவல்ல அரசர்கள் போரிடும் இடம் போல,ஒன்றுகூடி உரத்த குரலில் பலவகை ஓசை எழுப்பின.

குறிப்பு
—————–

 1. கரியவன்-சனி
 2. வெள்ளி-சுக்கிரன்
 3. புலம்-திசை
 4. கால்-காற்று
 5. பொரு- மோது
 6. நிவப்பு-உச்சி
 7. பெயல்-மழை
 8. சூல்-கரு
 9. தாரம்-பண்டம்
 10. கடுவரல்-விரைந்து வருதல்
 11. கயவாய்-பெரிய வாய்
 12. வாய்த்தலை-தொடங்கும் இடம்
 13. ஓ-மதகு நீர் தாங்கும் பலகை
 14. ஆம்பி-பன்றிப்பத்தர்,நீர்ச்சால்,நீர் இறைக்கும் சால்
 15. கிழார்-பூட்டைப் பொறி, நீர் இறைக்கும் கருவி
 16. ஏத்தம்-ஏற்றம்,நீர் இறைத்தல்
 17. பிழா-இடா,நீர் இறை கூடை
 18. மருங்கு-இடம்
 19. பழனம்-வேளாண் நிலம்
 20. கம்புட்கோழி-சம்பங் கோழி,காட்டுக் கோழி
 21. ஊரல்-குளுவை
 22. புதா-பெருநாரை
 23. முனையிடம்-போர்க்களம்
 24. ஓதை-ஓசை

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>