மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

காடு காண் காதை

***********************************************

தென்திசை நோக்கி சென்ற கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகிய மூவரும்,வழியில் மாங்காட்டு மறையோனைச் சந்தித்தனர்.வழியின் இயல்புகளை அவனிடம் கேட்டு அறிந்தனர்.கானுறை தெய்வம் வசந்தமாலையின் வடிவிலே தோன்றி,அவர்கள் மதுரை செல்வதைத் தடுக்க முயல்கிறது.ஆயினும்,அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் மேலும் நடந்து,ஐயையாளின் கோயிலை சென்று அடைகின்றனர் .

1.மண்டபத்தை அடைந்தனர்
jain

திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து,
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் 5

அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்து,ஆங்கு-
அன்று,அவருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று, 10

வைகறை யாமத்து வாரணங் கழிந்து,
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற,
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி

‘சந்திராதித்தியம்,நித்தியவினோதம்,சகலபாசனம்’ ஆகியவை அருகக்கடவுளுக்கு உரிய மூன்று குடைகள்.அவை,மூன்று நிலவுகளை ஒன்றாக அடுக்கி வைத்தது போல அமைந்திருந்தன.அதன் கீழ் மாலையாக மலர்ந்து தொங்கும் அரச மரத்தின் நிழலின் முன்,சிவந்த கதிர்களையுடைய சூரியனின் ஒளியைப் போலப் பிரகாசமாக அருகதேவன் எழுந்தருளியிருந்தார்.

தனக்கென்று ஓர் ஆதி இல்லாத அருகனை,கவுந்தியடிகள்,கோவலன்,கண்ணகி ஆகிய மூவரும் வணங்கித் தொழுதனர்.பின்னர்,திருவரங்கத்தில் இருந்த அகன்றச் சோலையில்,தவப்பள்ளியில் தங்கியிருந்த அருகசமயத்து முனிவர்களுக்கெல்லாம்,சாரணர் தமக்கு அருளி உரைத்த,தகுதியுடைய அறமொழிகளைக் கவுந்தியடிகள் எடுத்துரைத்தார்.அன்று,அம்முனிவர்கள் தங்கியிருந்த அவ்விடத்திலேயே மூவரும் தங்கினர்.

மறுநாள்,தென்திசை நோக்கிச் செல்ல விரும்பி,வைகைறைச் சாமவேலையிலேயே உறையூரைக் கடந்து நடக்கலாயினர்.

சூரியன் கிழக்குத்திசையில் இருந்து எழுந்தருளி,வானுயர்ந்து,தனது வெப்பத்தைப் பரப்பினான்.மூவரும் செல்லும் வழியில்,நீர்வளம் பொருந்திய வயல்களும்,குளங்களும் நிறைந்த பூஞ்சோலை ஒன்றில்,வழிப்போக்கர்கள் தங்கும் மண்டபம் ஒன்று இருந்தது.நடந்து வந்த களைப்பால்,இளைப்பாற விரும்பி மூவரும் அதற்குள் சென்றனர்.

குறிப்பு
—————–

 1. முக்குடை-சந்திராதித்தியம்(முத்துக்குடை),நித்தியவினோதம்(இரத்தினக் குடை),சகலபாசனம்(பொற்குடை)
 2.  தாழ்-தொங்கும்
 3. பிண்டி-அசோகமரம்
 4. நிக்கந்தன்-கந்தன்,அருகன்
 5. அந்தில்-அவ்விடம்
 6. அகன்பொழில்-விசாலமான சோலை
 7. தகை சால்-தகுதி அமைந்த,அழகுமிக்க
 8. அரங்கம்-திருவரங்கம்.
 9. மருங்கில்-பக்கத்தில்
 10. வாரணம்-உறையூர்
 11. வெய்யவன்-சூரியன்,ஞாயிறு
 12. குணதிசை-கிழக்குத்திசை
 13. வாவி-குளம்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>