மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 12)

vettuvavari

வேட்டுவ வரி

12.பலியை ஏற்றுக் கொள்வாய்

vvblog11

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்;
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது,
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே! 17

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு
மணியுரு வினை!நின மலரடி தொழுதேம்;
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது;
நிணனுகு குருதி;கொள் நிகரடு விலையே! 18

துடியொடு,சிறுபறை,வயிரொடு துவைசெய,
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்;
அடுபுலி யனையவர்; குமரிநின் அடிதொடு
படுகடன் இது;உகு பலிமுக மடையே! 19

“கதிரவனின் வெப்பம் உயிர்களை வருத்தாத வண்ணம்,அவனுடனேயே வானில் சுழன்று திரியும் முனிவர்கள்,அமரர்கள் ஆகியோருடைய துயர் தீருமாறு அருள்புரிய வேண்டும் என உன் திருவடிகள் இரண்டையும் தொழுதோம்!பகைவர்களை வெற்றிகொள்ளும் வீர மறவர்களாகிய நாங்கள்,எங்களது வெற்றிக்கு விலையாக,எங்கள் கழுத்தில் இருந்து வழியும் இரத்தத்தைத் தானமாகத் தருகிறோம்!இதனை ஏற்றுக் கொள்வாயாக!

அழகிய முடிசூடிய அமரரான தேவர்கள்,தங்கள் அரசனாகிய இந்திரனுடன் வந்து வணங்குகின்ற நீலநிறம் போன்ற நிறத்தை உடைய உன் மலரடிகளைத் தொழுகிறோம்.திரண்ட பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்த மறவர்களாகிய நாங்கள் எங்கள் வெற்றிக்கு விலையாகக் கொழுப்புடன் கலந்து சிந்துகின்ற குருதிப் பலியைத் தந்தோம்.ஏற்றுக் கொள்வாயாக!

துடியுடன்,சிறுபறையும்,கொம்பும் சேர்த்து,பெரும் முழக்கம் செய்பவர்கள் மறவர்கள்.நடு இரவில் எதிரில் வருபவர்களை வெல்லுகின்ற புலிபோல் வலிமையுடைய மறவர்களாகிய நாங்கள்,குமரியாகிய உன் பாதங்களை வணங்கி நின்றோம்.அங்ஙனம் நாங்கள் பெற்ற வெற்றிக்கு ஈடாகத் தரும் நேர்த்திக்கடனே, எங்கள் கழுத்தில் இருந்து சிந்துகின்ற இரத்தமாகும்! ஏற்றுக் கொள்வாய் !”

என்று வேட்டுவர்கள் தங்கள் பலியை ஏற்றுக்கொள்ளுமாறு கொற்றவையை வேண்டினார்கள்

குறிப்பு

 1. இடர்-துன்பம்
 2. அடல்-வெற்றி
 3. மிடற்று-கழுத்து
 4. விறல்-வெற்றி
 5. நிணன்(நிணம்)-கொழுப்பு
 6. அடு-அடுதல்,வெல்லுதல்,கொல்லுதல்
 7. படு-பொருந்திய
 8. முகமடை-மிடறு,கழுத்து
 9. இதுபலி-இக்கடன்
 10. துவைத்தல்-முழங்குதல்
 11. வயிர்-கொம்பு

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>