மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 13)

vettuvavari

வேட்டுவ வரி

13.பலிக் கொடை

வம்பலர் பல்கி,வழியும் வளம்பட,
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்-
சங்கரி,அந்தரி,நீலி,சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! 20

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு,
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்-
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ,ஒருவரும்
உண்ணாத நஞ்ச உண்டு,இருந்து,அருள் செய்குவாய்! 21

பொருள்கொண்டு புண்செயி னல்லதை,யார்க்கும்
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்-
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்! 22

“சங்கரி! அந்தரி! நிலி!சடைமுடியில் சிவந்த கண்கள் கொண்டவளே!பாம்பினை பிறைச் சந்திரனோடு சூடுபவளே!

பாலைவழியில் செல்வோரின் எண்ணிக்கை பெருகி,அவர்களிடம் நாங்கள் வழிப்பறி செய்யும் பொருளும் வளம்பெற வேண்டுகிறோம்.நேர்த்திக் கடனாய்,அம்பு பொருந்திய வலிமையான வில்லினை ஏந்தும் எயினரான நாங்கள் வழங்கும் பலியை ஏற்றுக் கொள்வாயாக!

விண்ணோரான தேவர் அமுதுண்ட போதும் அவர்கள் காலம் முடியும்போது மரணம் எய்துவர்.ஆனால் நீயோ எவருமே உண்ண விரும்பாத நஞ்சினை உண்டும் நிலைத்திருந்து அருள் செய்வாய்!‘துண்’ என்று கேட்பவர் நடுங்கும்படி ஒலியெழுப்புகின்ற துடி முழக்கத்தோடு,பகைவர் உறங்கும் காலத்தில் அவர்கள் ஊரினைக் கொள்ளையிடும் கண்ணோட்டம் இல்லாத எயினரான நாங்கள் இடுகின்ற பலிக்கடனை,நீ உண்பாயாக !

மருத மரங்களின் இடையே நடந்து,உன் மாமனாகிய கம்சன் செய்த வஞ்சகத்தால் உருண்டு உன்மேலே ஏறவந்த சக்கரத்தை உதைத்து அருள் செய்தவளே !வழியில் செல்பவரிடம் உள்ள பொருளைப் பறித்துக்கொண்டு,அவர்களின் உடம்பை புண் செய்யும் செயலைத் தவிர,எவரிடத்தும் கருணை காட்டாத எயினரான நாங்கள் வழங்கும் பலியை நீ ஏற்றுக் கொள்வாயாக!”,

என்று வேட்டுவர்கள் கொற்றவையைப் போற்றி,அவர்கள் தந்த பலியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார்கள்.

குறிப்பு

  1. வம்பலர் – புதிதாய் வருபவர்
  2. பல்கி-பெருகி
  3. அம்புடை-அம்பு பொருந்திய
  4. அரவு-பாம்பு
  5. துண்-விரைவாக,நடுங்கும்படி எழுகின்ற ஒலி
  6. துஞ்சு-துயில்
  7. சகடம்-சக்கரம்
  8. எறிதரு-வாள் எறிந்து கொலை செய்தல்

14.பாண்டிய மன்னன் வெட்சி மாலை சூடுக

vvblog12b

மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன்,பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட,
வெட்சி சூடுக-விறல்வெய் யோனே! 23

“வேதங்களின் முதல்வரான,சிவனின் தம்பி அகத்தியன் எழுந்தருளியதால் சிறப்புப் பெற்றது,உயர்ந்த குன்றுகள் உடைய பொதிகை மலை.அம்மலையை உடையவனும்,வெற்றியை விரும்புபவனும் ஆன பாண்டிய மன்னன்,பகைவருடைய போர்முனை,பசுக் கூட்டத்தை மீட்க வரும் அவர்கள் தொழில் இவை பாழ்படும் வண்ணம் ‘வெட்சி’ என்னும் வெற்றி மாலை சூடவேண்டும்!”,

என கொற்றவை வழிப்பாட்டின் முடிவில் தங்கள் பாண்டிய மன்னன் வெற்றி பெற வேண்டியும் பாடினார்கள்.

குறிப்பு

  1. பொறை-குன்று
  2. கரந்தை-பசுக் கூட்டத்தை மீட்பது

வேட்டுவ வரி முடிந்தது .

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>