மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

purancheri

புறஞ்சேரி இறுத்த காதை

 

 

6.மாதவியின் துயர்

pk6

வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள்,படர்நோ யுற்று,
நெடுநிலை மாடத் திடைநிலத்து-ஆங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்,70
வீழ்துய ருற்றோள்,விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்,
இருந்துயர் உற்றோள்,’இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கு’,என,மலர்க்கையின் எழுதிக்,
‘கண்மணி யனையாற்குக் காட்டுக’ என்றே 75
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்,
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து,
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்,
வழிமருங் கிருந்து மாசற உரைத்து-ஆங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி,80
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட

“வசந்தமாலை மூலம் உன்னைப் பற்றிய செய்திகளை மாதவி தெரிந்துக் கொண்டாள்.அதைக் கேட்டவுடன் மாதவி மேனியில் பசலை படர்ந்து,உன் நினைவுகளால் ஏங்கி நோயுற்றாள்.உயர்ந்த அடுக்குகள் கொண்ட மாளிகையின் நடுமாடத்தில் இருந்த ஒரு பள்ளியறைக் கட்டிலில்,உன் நினைவுகளோடு படுத்த படுக்கையாகி விட்டாள்.மாதவி படும் பெரும் வேதனையை அறிந்து,வருத்தம் அடைந்ததால் நான் அவளைக் காணச் சென்றேன்.

மிகுந்த துயரத்துடன் இருந்த அவள்,‘உன் இரண்டு பாதங்களையும் வணங்குகிறேன்.எனக்கு வரப்போகும் துயரத்தை நீக்க வேண்டும்’ என்று என்னிடம் வேண்டினாள்.தன் மலர்க்கையால் ஓர் ஓலையை எழுதி,’என் கண்ணின் கருமணி போன்றவனுக்கு இதைக் காட்டு’ என்று சொல்லி,மண் முத்திரையிட்டு,என் கையில் தந்தாள்.அவள் தந்த அந்த ஓலையை எடுத்துக்கொண்டு பல வழிகளில் அலைந்து திரிந்து,இப்போதுதான் நான் உன்னைக் கண்டேன்”, என்று கௌசிகன் கோவலனிடம் நடந்த நிகழ்வுகளைக் கூறினான்.

அதன் பின்,அழிந்த உள்ளமும் பிரிவு துயரம் என்னும் நோய் உற்ற,மலர்ந்த பூக்களைச் சூடி,பின்னிய கூந்தலையுடைய,பூங்கொடியான மாதவி அனுப்பிய மடலைக் கோவலன் கையில் கொடுத்தான் கௌசிகன்.

குறிப்பு

 1. பசந்த-வடிதல்,ஒழுகுதல்
 2. படர்நோய்-படரும் நோய்
 3. படை-உறக்கம்
 4. வீழ்துயர்-விருப்பத்தால் வரும் துயர்
 5. விழுமம்-துன்பம்
 6. தாழ்துயர்-ஆழ்ந்த துயர்
 7. இணையடி-இரண்டு பாதங்கள்(அடி-பாதம்)
 8. இருந்துயர்-மிகுந்த துன்பம்(இரு-மிகுதி)
 9. முடங்கல்-கடிதம்
 10. ஈத்த-கொடுத்த
 11. இடைநெறி-நடுவழி
 12. நெடுநிலை-உயர்ந்த அடுக்கு
 13. தீத்திறம்-தீய செயல்
 14. தேயம்-நாடு
 15. மருங்கு-பக்கம்
 16. அஞராட்டி-நோய் உற்றவள்
 17. போது-பூக்களின் நிலைகளை “அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்” என ஐந்து வகை படுத்தினார்கள்.
  மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் வகுத்தனர்.

  • அரும்பு-பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது.
  • போது-பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும்.அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல்,கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை போல பொதிந்து கிடக்கும்.இந்த நிலை “போது” எனப்படும்.
  • மலர்-மல் என்பதற்கு வளம் என்னும் பொருள் உண்டு. எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்படும்.
  • வீ-உதிர்ந்து கீழே விழும் பூ வீ என்று குறிக்கப்படும்.
  • செம்மல்-வாடிய மலர் செம்மல் எனப்படும்.
  • அலர்-மலர்ந்த பின்பு,தேன் நீங்கி மகரந்தம் கெட்டு வாடிப்போன,அலர்ந்து போன பூ அலர் எனப்படும்.
 18. அவிழ்-மலர்தல்
 19. புரி-பின்னிய
 20. குழல்-கூந்தல்

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>