மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

purancheri

புறஞ்சேரி இறுத்த காதை

 

 

7.மாதவியின் மடல்

pk7

உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டியது,ஆதலின் கைவிட லீயான், 85
ஏட்டகம் விரித்து,ஆங்கு எய்திய துணர்வோன்,

‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்,
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்,
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது, 90
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்,
பொய்தீர் காட்சிப் புரையோய்,போற்றி!’
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து,
‘தன்தீது இலள்’ எனத் தளர்ச்சி நீங்கி,
‘என்தீது’ என்றே எய்திய துணர்ந்தாங்- 95

தன் சுருண்ட கூந்தலைக் கொண்டு தான் அனுப்பிய மடலில் மண் முத்திரை இட்டிருந்தாள் மாதவி.அதன் மணம்,அவளுடன் கூடி வாழ்ந்த காலத்தில்,அவள் கூந்தலில் பூசிய நெய்யின் மணத்தை கோவலனுக்கு நினைவு படுத்தியது.அதனால்,அவனால் அந்த வாசத்தை விட்டு விலக முடியவில்லை.பின் அதனுள் அடங்கிய அவள் கருத்துகளை அறிய வேண்டி,முத்திரையை அகற்றி அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான்.

“அடிகளே! உங்கள் திருவடிகளை நீங்கள் இருக்கும் திசை நோக்கி பணிகின்றேன்.நான் கூறுபவை தெளிவில்லாத சொற்கள் தான்.இருந்தாலும் நீங்கள் மனமிரங்கி அதைக் கேட்டருள வேண்டும்.வயதான தந்தை,தாய் இருவருக்கும் தொண்டு செய்வதை மறந்தீர்கள் ! உயர்ந்த குலமகளான கண்ணகியோடு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாதவாறு ஊரைவிட்டு போய் விட்டீர்கள்! இப்படி நீங்கள் செய்ததற்கு,நான் என்ன தவறு செய்தேன்? இதை உணராமல் என்னுள்ளம் செயலற்றுப் போகின்றது! இந்தக் குழப்பத்தை நீங்கள் போக்க வேண்டும்.குற்றமில்லாத அறிவையுடைய உயர்ந்தவரே!உங்களை நான் போற்றுகின்றேன்!

இதற்கு நான்தான் காரணம் என்றால்,’என் சொல் குற்றமற்ற சொல்’ என்று எண்ணி அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.”,

என்று அந்த மடலில் மாதவி தன் எண்ணங்களை உணர்த்தி இருந்தாள்.

மாதவி எழுதிய உயர்ந்த சொற்களின் மூலம் கோவலன் அவள் பண்பை உணர்ந்தான்.”மாதவி ஒரு குற்றமும் அற்றவள்;இது எல்லாம் என் தீவினையால் நடந்தவை” என்று கோவலன் தன் உள்ளத்தில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பெற்றான்.

குறிப்பு

  1. குறுநெறி-வளைந்த சுருண்ட கூந்தல்,அணுக்கமான நெருப்பு(அணுக வசதியாக செய்யப்பட்ட அலங்காரம்)
  2. உறை-கூடி
  3. கிளவி-சொல்
  4. குரவர்-மூத்தோர்,தந்தை
  5. இரவிடை-நடு இரவு
  6. கையறுதல்-செயல் அற்ற நிலை
  7. புரையோய்-மேலானவர்,உயர்ந்தவர்(புரை-உயர்வு)

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>