மணிமேகலையின் பிறப்பு – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

கோவலனுக்கு மாதவியிடத்து ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘மணிமேகலை’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். அப்பெயர் கோவலனுடைய குலதெய்வத்தினுடையதாகும். ஆம். கோவலனின் குலக்கொடியாகி விட்டாள் மாதவி. அதனால் அவனுடைய குல தெய்வத்தின் மீதும் உரிமை கொண்டாடி, அதன் பெயரைத் தன் குழந்தைக்கு வைத்தாள். கண்ணகியை மணந்தபின் சில ஆண்டுகள் அவளோடு கோவலன் வாழ்ந்தும் குழந்தைப்பேற்றினைப் பெற்றானில்லை.அதனால், மாதவியிடத்துப் பிறந்த பெண்மகவை,வடுநீங்கு சிறப்புடைய தன் குலக்கொடியாகவே கருதி,குலத் தெளிய்வத்தின் பெயர் சூட்டினான்.மாதவி தன் மகளுக்குப் பெயரிடும் நிகழ்ச்சியை,ஒரு பெருவிழாவாகவே கொண்டாடினாள். மாநிதிக் கிழவன் மாசாத்துவானின் ‘மருமகள்’ அல்லவா? ஆயிரத்துக்கு மேற்பட்ட கணிகையர் கூடி மாதவி மகளுக்குப் பெயரிட்டு ‘மணிமேகலை வாழ்க!’ என வாழ்த்தினர். இதனை, “அணிமேகலையார் ஆயிரம் கணிகையர் மணிமேகலையென வாழ்த்தினர்” என்ற வரிகளில் நமக்கு அறிவிக்கிறார் இளங்கோவடிகள்.கோவலனுடைய குலதெய்வத்தின் பெயரைப் பெற்றதால், ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்துவானின் பேர்த்தியாகிவிட்டாள் மணிமேகலை.

manimegalai

தீ வலம் வந்து மாங்கலியம் சூட்டி மணந்த தரும பத்தினியாகவே மாதவியைக் கோவலன் கருதினான் என்பதை உணர்த்த ‘மங்கல மடந்தை’ என்று கூறி,தான்மட்டும் தனித்திருந்து தானம் தராமல், அவளோடு சேர்ந்திருந்து மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவிற்கு வந்தவர்களுக்கெல்லாம் தன் கைநிறையச் செம்பொற்காசுகளை மழைபோலப் பொழிந்தான் கோவலன் என்கிறார் இளங்கோ. விலைமகளாகப் பிறந்த மாதவி,ஒழுக்கத்தாலும் உயர்குணத்தாலும் குலமகளாகி விட்டாள்!சோழன் அரசவையிலே நாட்டியக் கலையை அரங்கேற்றிய நாளிலேயே, தன் கலை வாழ்க்கை ஆரம்பமான தலைநாளிலேயே ஒரு தலைவனைப் பெற்றுத் தனி வாழ்க்கை தொடங்கினாள் மாதவி. ஆம். கலையரசியாகிய தனக்கேற்ற கலையரசனை – மாசாத்துவான் மகன் கோவலனைக் காதலனாகப் பெற்றாள் மாதவி.

அவனுடன் பல்லாண்டுகள் வாழ்க்கை நடத்தி,ஒரு பெண் மகவையும் பெற்றாள். பூம்புகார்க் கலைச்செல்வி. தன் மகளுக்குப் பெயரிடும் விழாவைத் தான் பிறந்த கணிகையர் குலத்தின் வரலாறு காணாத அளவில் ஒரு பெருவிழாவாகவே நடத்தினாள். அழகிய மேகலாபரணம் அணிந்த நடனக் கணிகையர் ஆயிரவர் கூடி, மாதவியின் மகளை ஒரு நல்ல ஓரையில் தொட்டிலிட்டு, ‘மணிமேகலை’ எனப் பெயரும் வைத்து‘வாழ்க! வாழ்க! வென வாழ்த்தினர்.பெண்மகவு பிறந்த பெருமகிழ்ச்சியிலே திளைத்த மாதவியும் கோவலனும் ஒருங்கேயிருந்து விழாவுக்கு வந்தவர்களுகெல்லாம் பொன்னை வாரி வாரி வழங்கினர். இதனை, அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் ‘மணிமேகலை’ என வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையில் பொழிய – சிலம்பு 15 : 38-41. என்னும் வரிகளில் அறிவிக்கின்றார் இளகோவடிகள்.

- சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

This entry was posted in மணிமேகலை, மாதவியின் மாண்பு. Bookmark the permalink.

One Response to மணிமேகலையின் பிறப்பு – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

  1. rakesh sai says:

    super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>