மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

purancheri

புறஞ்சேரி இறுத்த காதை

 
 
 

9.பாணரோடு ஆடி பாடிய கோவலன்

pk9

மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்து,ஆங்கு,
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து, 105
செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்,
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து,
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி,
வரன்முறை வந்த மூவகைத் தானத்து, 110
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்,
பாடற் பாணி அளைஇ,அவரொடு-
‘கூடற் காவதம் கூறுமின் நீர்’ எனக்

களங்கமில்லாத கற்புக்கரசியாக விளங்கும் தன் மனைவி கண்ணகியோடு,எந்த தவறான நோக்கமும் இல்லாமல் அறத்தை போதிக்கும் கொள்கையுடைய கவுந்தியடிகளிடம் கோவலன் சென்றான்.அந்த இடத்தில்,போர்க்கோலம் பூண்ட துர்க்கையின் வெற்றியைப் பாடியாடும் பாணர் கூட்டத்தோடு உரிமையுடன் சேர்ந்து கோவலனும் பாடியாடத் தொடங்கினான்.

செந்நிறமான கோடுகள் கொண்ட செங்கோட்டு யாழில் இருந்த ‘தந்திரிகம்’,'திவவு’ என்னும் பகுதிகள் உறுதியாக இருக்குமாறு திறமையுடன் கட்டினான்.’ஒற்று’ உறுப்பைக் கொண்ட யாழ் என்பதால்,’பற்று’ என்னும் சுதியோடு அதைச் சேர்த்து இசை கூட்டினான்.உழை என்னும் இசையைக் குரலாகவும்,கைக்கிளை என்னும் இசையைத் தாரமாகவும் நரம்புகளை நிறுத்தினான்.

வரலாறு கூறும் ‘வலிவு,மெலிவு,சமன்’ என்னும் பாட இயலும் மூன்று முறைகளிலும்,துள்ளிப் பாயும் மானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவையின் புகழ்பாடும் பண்ணை,ஆசான் திறம் என்னும் பண்ணின் இயல்பு பொருந்துமாறு இயக்கி, அவற்றைச் செவியால் கேட்டுணர்ந்து ,பாணரோடு இசைத்து மகிழ்ந்தான் கோவலன்.

அதன் பின்,’மதுரைக்கு இங்கிருந்து இன்னும் எத்தனை காததூரம் உள்ளது?’ என்று பாணரிடம் வினவினான்.

குறிப்பு

 1. ஆசில்-களங்கமில்லாத(ஆசு-குற்றம்,தவறு)
 2. அறவி-அறத்தை போற்றுபவர்
 3. ஆடு-வெற்றி.
 4. அந்தரி-அந்தரத்தில் இருப்பவள்
 5. பாங்குற-நட்புடன் (பாங்கு-நட்பு)
 6. வரன்முறை-வரலாறு
 7. காவதம்(காதம்)-தூரத்தின் அளவு , சுமார் 10 மைல் தூரம்
 8. அளைஇ-கலந்து
 9. ஆசான் திறம்-பாலையாழ் என்னும் பெரும் பண்ணின் ஒரு திறம்.

யாழ்

யாழ் என்பது ஒரு நரம்புக் கருவி.வீணை. தம்புரா ஆகியவற்றில் இருப்பது போல் இதன் இசை ஒலிபெருக்கி “தணக்கு” என்ற மரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது.சத்தத்தைப் பெருக்கிக் காட்டும் யாழில் இது படகு வடிவில் இருக்கும்.யாழில் உள்ள நரம்புகளின் கணக்கின் படி யாழ் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பேரியாழ்- 21 நரம்புகளைக் கணக்கில் கொண்டது
மகர யாழ்-17 நரம்புகளைக் கணக்கில் கொண்டது
சகோட யாழ்-16 அல்லது 14 நரம்புகளைக் கணக்கில் கொண்டது
செங்கோட்டு யாழ்-7 நரம்புகளைக் கணக்கில் கொண்டது

அவை இருந்த நிலத்தால்,யாழை நான்கு வகையாக வழங்கினார்கள்.
குறிஞ்சி யாழ்
முல்லை யாழ்
மருத யாழ்
பாலை யாழ்

மேலும் யாழின் வடிவத்தாலும் அவை ‘வில்யாழ்’,'சீறியாழ்’,பேரியாழ்’ என்று அழைக்கப்பட்டன.வேறு பல பெயர்களில் உள்ள யாழ்களும் உள்ளன.

செங்கோட்டு யாழ்

செந்நிறமான கோடுகள் பெற்றதால் இதை செங்கோட்டு யாழ் என்று அழைத்து இருக்கலாம்.கோடு,திவவு,ஒற்று,தந்திரிகரம், நரம்பு,பற்று என்னும் ஆறு பகுதிகள் கொண்டது செங்கோட்டு யாழ்.

 • தந்திரிகரம்-நரம்பின் நீளம்
 • திவவு-இதை வார்க்கட்டு என்பர்.முறுக்கிய வளையல் போல் இருக்கும்,யாழின்கோட்டிலுள்ள நரம்புக் கட்டு.thivavu
 • ஒற்று-தாளத்திற்காக அமைந்த ஒரு உறுப்பு.யாழ் பகுதிகளான நரம்பு,பத்திரி ஆகியவை தங்குமிடம் என்றும் கூறுவர்.
 • பற்று-சுதி

ஏழுவகை தமிழிசை

ஏழுவகையான தமிழிசைகள் முன்னர் இருந்தன.அவை,

 • குரல்-கழுத்தில் இருந்து பிறக்கும்,வண்டின் ஒலி போன்றது. (கர்நாடக இசையின் ‘ச’)
 • துத்தம்-நாவிலிருந்து பிறக்கும்,கிளியின் கொஞ்சல் ஒலி போன்றது.(கர்நாடக இசையின் ‘ரி’)
 • கைக்கிளை-மேல்வாயில் இருந்து பிறக்கும்,குதிரையின் கனைத்தல் ஒலி போன்றது போன்றது.(கர்நாடக இசையின் ‘க’)
 • உழை-தலையில் இருந்து பிறக்கும்,யானையின் பிளிறல் ஒலி போன்றது(கர்நாடக இசையின் ‘ம’)
 • இளி-நெற்றியில் இருந்து பிறக்கும்,தவளையின் கத்தல் ஒலி போன்றது (கர்நாடக இசையின் ‘ப’)
 • விளரி-நெஞ்சில் இருந்து பிறக்கும்,பசுவின் கதறல் ஒலி போன்றது(கர்நாடக இசையின் ‘த’)
 • தாரம்-மூக்கில் இருந்து பிறக்கும்,ஆட்டின் கத்தல் ஒலி போன்றது(கர்நாடக இசையின் ‘நி’)

மூவகைத் தானம்

பாடலை பாட இயலும் முறைகள் மூன்றாகும்:

வலிவு – எல்லாவற்றிலும் அதிக (வலிந்த) ஓசையுடையது.
மெலிவு – எல்லாச் சுரங்களிலும் மெலிந்த ஓசையுடையது.
சமன் – வலிவு மெலிவு மின்றிச் சமத்துவமான ஓசையுடையது.

 

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>