4.கவுந்தியடிகளின் அறிவுரை
கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு 25
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்!
“மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்” என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; 30
தீது உடை வெவ் வினை உருத்தகாலை,
பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்;
ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை,
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், 35
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் 40
கண்டனர் ஆகி,கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு,
ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால், இறந்தோர் பலரால்;
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின்: 45
“முன்பு தவம் என்னும் அறத்திலிருந்து தவறிய காரணத்தால்,காதல் மனைவி கண்ணகியோடு தனியாகப் பெரும் துன்பம் அடைந்தவனே!வினை வலிமையானது,அதன் பயனை தவறாது நமக்குக் கொடுத்து விடும்,என்பதை உணர்ந்து பாவச் செய்களைக் கைவிடுவாயாக!
அறநெறியில் வாழ்பவர்கள்,தங்களின் வாயாகிய பறையை,நா என்னும் குறுந்தடி கொண்டு அடித்து எடுத்துக் கூறினாலும்,மன உறுதியில்லாத மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தீமை உடைய கடுமையான வினையானது தனது துன்பத்தின் பயனைத் தந்து நிற்கும்போது,அறியாமை காரணமாக இவர்கள் பெரிதும் வருந்தி மயக்கம் அடைவார்கள்.ஆனால்,நம்மால் போக்க இயலாத வினையின் பயனை அனுபவிக்கும் பொழுது,கற்று அறிந்த அறிவுடையவர்கள் ஒரு நாளும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்!
பெண்களைப் பிரியும் போது ஏற்படும் துயரமும்,அவர்களைச் சேரும் போது ஏற்படும் துன்பமும்,உருவிலாளன் என்னும் மன்மதன் வருத்தும் துன்பமும்,சுருண்டக் கூந்தல் கொண்ட பெண்களைச் சேர்ந்து வாழ்பவர்க்கு என்றும் இயல்பு ஆன ஒன்று.ஆனால்,ஒப்பற்ற தனிவாழ்க்கை வாழும் உறுதி உடையவர்களுக்கு இவை அனைத்தும் ஒருபோதும் இல்லை!
இந்த உலகில் பெண்களுக்கு உணவும் மட்டுமே முக்கியமான பொருள் என்று கருதும் அறிவற்றவர்,அளவற்ற துன்பத்தையே முடிவில் காண்பார்கள்.காமத்தை மட்டுமே பற்றிக்கொண்டு,காதலில் மூழ்கி,கரைசேர முடியாத துன்பத்தை அடைவார்கள்.இன்று மட்டுமல்ல,இதற்குமுன் இறந்தவர்களிலும் இந்த நிலையில் இருந்தவர்கள் பலராவர்.இந்த அவல நிலை,தொன்றுதொட்டு வருகின்ற பழைமையுடையது!…”
என்று கவுந்தியடிகள்,கோவலன் கேள்விக்கு பதில் அளிக்கத் தொடங்கினார்.
குறிப்பு
- மருங்கு-பக்கம்
- தீர்தல்-ஒழிதல்
- நீங்குமின்-விட்டு விடுங்கள்
- உழந்தோய்-வருந்தினாய்
- மறத்துறை-வீர நெறி,பாவ நெறி
- வல்வினை -வலிமையான வினை
- அறத்துறை-தரும வழி
- மாக்கள்-மக்கள்
- கடிப்பு -குறுந்தடி
- கந்து-காரணம்
- பேது-மயக்கம்
- காலை-காலம்
- யாப்பறை-அறிவில்லாதன்,உறுதியற்றவன்(யாப்பு-உறுதி)
- உருத்தல்-தோன்றிப் பயனளித்தல்
- வெவ்வினை-கொடிய வினை
- உடை-உடைய
- கந்துஆப்-காரணமாக
- பேதைமை-அறியாமை
- வெம்மை-வெப்பம்,கடுமை,உக்கிரம்
- ஒய்யா-போக்க முடியாத
- கையாறு-செயலறிவு
- புணர்தல்-கூடுதல்
- உருவிலாளன் -காமன்
- ஒறுக்கும்-அழிக்கும்,தண்டிக்கும்
- புரி-சுருண்ட
- குழல்-கூந்தல்
- ஒரு-ஒப்பற்ற
- உரவோர்-ஊக்கம் உடையவர்
- உண்டி-உணவு
- உறூஉம்-மிகுவிக்கும்
- கடவுளர்-முனிவர்கள்
- உழந்து-வருந்தி
- இடும்பை-துன்பம்
- ஏமம்-காவல்,கரை
- வரூஉம்-வருகின்ற
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in