மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

uklogo
ஊர்காண் காதை

10.குளிர்க் காலம்
UK10A

நூலோர் சிறப்பின்,
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்-

சிற்ப நூலை நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட,மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்,மடம் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்ட பெண்கள்,அகில் விறகைக் கொண்டு மூட்டிய தீயருகே அமர்ந்தார்கள்.

இவர்கள், நறுமணம் கமழும் சாந்து பூசிய மார்புடைய தங்கள் காதலர்களுடன் கூடி குளிர் காய விரும்பி,சின்ன ஜன்னல்களையும் குளிர்க்காலத்தில் அடைத்து விடுவார்கள்.

குறிப்பு

 1. முகில்-மேகம்
 2. தோய்தல்-தழுவுதல்
 3. மடவரல்-மடப்பம்(மடம்) பொருந்திய
 4. நம்பியர்-காதலன்
 5. அகலம்-மார்பு
 6. கூதிர்-குளிர்

11.முன்பனிக் காலம்
UK10B

வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி,
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர,
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு,வெண்மழை
அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் 105

விரிந்த கதிர்களையுடைய உடைய சூரியன்,தெற்கு திசையில் எழுவதினால்,வெண்மையான மேகம் அரிதாகத் தோன்றுவது முன்பனிக்காலம்.அந்த வேளையில்,செழிப்பான வீடுகளில் வசிக்கும் பெண்களும்,ஆண் மகன்களும் இளநிலா முற்றத்தில் நின்று,இளவெயிலை விரும்பி அனுபவிப்பார்கள்.

குறிப்பு

 1. மைந்தர்-ஆண் மகன்
 2. முன்றில்-முன் பகுதி,முற்றம்
 3. மண்டிலம்-சூரியன்
 4. ஏர்பு-எழுந்து
 5. அச்சிரக் காலை-முன்பனிக் காலம்(அச்சிரம்-முன்பனி,காலை-காலம்)

12.பின்பனிக் காலம்

UK10C
ஆங்க தன்றியும்,’ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலும்,துகிலும்,ஆரமும்,வாசமும்,
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 110
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்?

அந்த முன்பனிக் காலம் மட்டும் இல்லாமல்,மிகப்பெரிய கடல் பரப்பில் அமைந்த கப்பல்களால்,’தொண்டி’ என்னும் இடத்தை ஆண்ட சோழ அரசர் திறையாகக் கொடுத்த அகில்,துகில் என்னும் பட்டு,சந்தனம்,நறுமணப் பொருள்கள்,கற்பூரம் ஆகிவற்றின் வாசனையை ஒன்றாய்ச் சுமந்து வந்த கீழ்த்திசைக் காற்று,பாண்டிய மன்னனின் கூடல் நகருக்குள் புகுந்து,காமனின் கொடிய வில்லானது வெற்றிவிழாக் காணும் பங்குனி மாதத்துடன் பொருந்திவரும் பின்பனிக்காலத்தின் அரசன் எங்கு இருக்கிறார் ?

குறிப்பு

 1. இரும்-பெரிய
 2. நாவாய்-பழங்காலத்தில் கப்பலைக் குறிக்கும் சொல்.
 3. ஈட்டம்-திரள்,கூட்டம்
 4. தொகு-ஒன்று சேர்த்து
 5. ஆரம்-சந்தனம்
 6. துகில்-பட்டு
 7. கோமான்-அரசன்
 8. கொண்டல்-கீழ்த்திசைக் காற்று
 9. வெங்கண்-கொடிய கண்
 10. முயக்கத்து-தழுவிய

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>