கண்ணகியின் முடிவு ! – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

கோவலன், கண்ணகியைக் கைப்பிடித்து மதுரை நகருக்குள் நுழைந்தபின் அங்கு மாதரி என்னும் ஆயர்குலப் பெண்ணிடம் அவளை அடைக்கலம் தந்து,சிலம்பு விற்கச் செல்கின்றான். சென்றவிடத்தில்,அரசியின் சிலம்பைக் கவர்ந்த அரண்மனைப் பொற் கொல்லன் ஒருவன் எதிர்ப்பட, அவனிடம் தான் கொண்டு சென்ற கண்ணகியின் காற்சிலம்பைக் காட்டி,விற்றுத் தருமாறு கேட்கின்றான். பொற்கொல்லன் தன்னுடைய களவை மறைக்க கோவலனைக் கள்வனாக்கி, மதுரை மன்னனிடம் அவன்மீது பொய்க்குற்றம் சாட்டுகிறான். ஆராய்ந்தறியாத மன்னன், பொற்கொல்லனின் பொய்யுரையை நம்பி, கோவலனை கொலைத் தண்டனைக்குள்ளாக்குகின்றான். தன் கணவன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி, ஆறாப் பெருந்துயர் கொண்டு, கொலைக்களம் செல்கின்றாள்.அங்கு தலை வேறு உடல் வேறாக வெண்டுண்டு கிடந்த கணவனைக் கண்டு அழுது புலம்பியபின், கொடுங்கோல் அரசை அழிப்பதாகச் சூளுரைத்து, மன்னன் மாளிகையை அணுகுகிறாள்.

Elangovadigal

அங்கு, வாயிற் காவலன் வழிகாட்ட, அரசவை சென்று மன்னனிடம் வழக்குரைத்து, தன் கணவன் குற்றமற்றவன் என்பதனை மன்னன் உணரும்படிச் செய்கின்றாள். தான் செங்கோல் முறையினின்று பிறழ்ந்ததனை உணர்ந்த மதுரை மன்னன் நெடுஞ்செழியன் உயிர் விடுகின்றான். அரசியும் உயிர் நீத்தாள்.ஆவேசம் கொண்ட கண்ணகி மதுரைப் பதியை மும்முறை வலம் வந்தபின், தன் வலது கையால் இடது கொங்கையைத் திருகி எடுத்து நான் மாடக் கூடல்மீது விட்டெறிந்து, அதனைத் தீக்கிரையாக்கி, பின்னர்,விண்ணுலகத் தேவர்களுக்கு விருந்தானாள்.இதற்குப்பின், மீண்டும் மாதவியைப் பற்றிய கதைதொடர்கிறது. இளங்கோ யாத்த சிலப்பதிகாரத்திலன்று,மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிய ‘மணிமேகலை’ யிலே!

- சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

This entry was posted in மாதவியின் மாண்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>