மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

uklogo
ஊர்காண் காதை

13.இளவேனிற் காலம்
UK11A

கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து 115
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்?”என்று,
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலை-

பூமாலையைப் போலக் கொத்தாக மலரும் ‘குருக்கத்தி’ என்னும் மாதவி,தன் அழகிய கொடியைப் படரவும்,இளஞ்சோலையும்,நந்தவனமும் நறுமண மலர்களை ஏந்தவும்,பாண்டிய மன்னின் பொதிய மலையின் தென்றலோடு,மன்னனின் கூடல் என்னும் மதுரை நகரில் புகுந்து,நாம் விரும்பும் துணைகளைத் தழுவி இன்புறவைக்கும் இளவேனில் அரசன் எங்குள்ளான்?

பூங்கொடி போன்ற உருவத்தைக் கொண்ட பெண்கள்,தங்களின் மேல் உரிமையுடைய காதலர்களோடு கூடியிருந்து,தங்கள் வருத்தம் நீக்கிய முதுவேனிற் காலத்தில்,அந்தப் பருவங்கள் பற்றியெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

குறிப்பு

 1. கோதை-மாலை
 2. மாதவி-குருக்கத்தி மலர்
 3. கடி-நறுமணம்
 4. காவு-சோலை
 5. கானம்-நந்தவனம்
 6. தென்னவன்-பாண்டியன்
 7. கூடல்-மதுரையை குறிக்கும்
 8. தழூஉம்-தழுவும்
 9. யாண்டு-எங்கு
 10. கொழுநர்-காதலர்,கணவர்
 11. படர்-துன்பம்
 12. உளன்-உள்ளான்

14.வேனிற்காலத்தின் கடைசி நாள்
UK11B

கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க 120
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்,
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர,
ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்-125

தன் கன்றுகளை விரும்பும் பெண்யானைகள் கூட்டத்தோடு,அவற்றைக் காக்கும் ஆண்யானைகளும் நடுங்குமாறு,மலைகள் நிறைந்த நல்ல நாட்டில்,வெயில் சுட்டெரித்தது.காடுகள் முழுதும் தீப்பிடிக்கும் வண்ணம் நெருப்பை மூட்டி,கோடைக்காற்றுடன் வந்து புகுந்து,கூடல் நகரை ஆட்சி செய்யும் வேனில் வேந்தன் அங்கிருந்து வேறு இடம் தேடிச்செல்ல முயல்கின்ற வேனில் காலத்தின் இறுதி நாள்களும் வந்தன.

குறிப்பு

 1. அமர்-விரும்பிய
 2. ஆயம்- சுற்றம்,கூட்டம்
 3. களிற்று-ஆண் யானை
 4. என்றூழ்-வெப்பம்
 5. கெழு-பொருந்திய
 6. பொத்தி-மூட்டி
 7. கனை-மிக்க,செறிந்த
 8. உறு-மிக்க
 9. ஓசனிக்கின்ற-செல்ல முயல்கின்ற

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>