வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்,
சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து,
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்து-ஆங்கு 135
இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்,
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்,
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன, 140
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்,
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்,
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்,
செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் 145
கூடார வண்டி,பல்லக்கு,மணிகள் இழைத்த கால்கள் உடைய கட்டில் ஆகியவற்றுடன் ‘உய்யானம்’ என்னும் சோலைகளில் மன்னர்களுடன் விளையாடி மகிழும் உரிமை,கவரிமான் மயிரால் செய்த சாமரை,பொன்னால் செய்த வெற்றிலைப்பெட்டி,கூர்மையான முனையுடைய வாள் ஆகியவற்றை அரசன் பரத்தையருக்கு பரிசாகக் கொடுத்தான்.அப்படி பெற்ற செல்வம் என்றும் மாறாத வாழ்கையை உடையவரான,பொன் வளை அணிந்த அரசப் பரத்தையர் அன்றாடம் புதுமணம் புரிந்து மகிழ்ந்தார்கள்.
உடலில் புள்ளிகளையுடைய பாடல் இசைக்கும் வண்டுகள்,ஒரே இடத்தில் மட்டும் இருப்பது இல்லை.பெண்களின் மாலைகளை நாடி அதனை நோக்கி செல்லும் இயல்பு கொண்டவை.அரசப் பரத்தையர்,பணிப்பெண்கள் ஏந்திய செம்பொன் கிண்ணங்களில் இருக்கும் இனிய கள்ளின் தெளிவைப் பருகி மயங்குவர்.அவ்வாறு அவர்கள் மயக்கத்தால் விழி மூடும்போது,பூவின் இதழுக்குள் தன் இனமான வண்டுதான் மறைகின்றதோ என்றெண்ணி,வண்டுகள் அக்கண்களைத் தழுவ வரும்.அவற்றை விரட்ட எண்ணும் அம்மாதர்கள் வண்டுகள் இல்லாத இடத்தில் மலர்மாலை வீசி அவற்றை விரட்ட எண்ணுவார்கள்.பின் தன் அறியாமை அறிந்து,அவர்களின் சிவந்த இலவம்பூ இதழ் போன்ற சிவந்த வாயில் இளமுத்து போன்ற புன்னகை தோன்றும்.
தன் காதலனுடன் சண்டையிட்ட காலத்தில்,அவனுக்கு மயங்காத அந்த நீலமலர் போன்ற கண்களையுடைய மகளிர் கூறும் சொற்கள் மிகவும் கொடியது.எட்டு வகையான இடத்திலிருந்தும் நாவால் கூறப்படாத,காண்பவர் சிரிக்கும் வண்ணம் அவள் பேச்சுக்கள் அமைந்திருந்தது.அழகிய செங்கழுநீர் மலரின் அரும்பு மலர்வதைப் போல,அவளின் சிவந்த கயல் மீன் போன்ற நீண்ட கண்கள்,தன் கடைக்கண்ணால் சிவந்து செய்த பூசலும் அதிகமாகும்.கொல்லும் வில் போன்ற புருவங்களின் வளைவுகள் உள்நோக்கி வளைந்தன.திலகம் அணிந்த சின்ன நெற்றியில்,சிறு வியர்வைகள் அரும்பின.
தாங்கள் கொண்ட சண்டை தீரும் நேரத்தை எதிர்பார்த்து,செழுமையான குடியில் பிறந்த வணிகச் செல்வந்தர்களோடு,நாட்டை ஆட்சி செய்து காத்து நிற்கும் அரசர்களும் மகிழ்ந்திருக்கின்ற காமக் கிழத்தியர் வீதிகளையும் கோவலன் கண்டான்.
குறிப்பு
- வையம்-கூடார வண்டி
- சிவிகை-பல்லக்கு
- அமளி-படுக்கை
- உய்யானம் -அரசர்கள் விளையாடும் நந்தவனம்
- கவரி-மான்
- தமனியம்-பொன்
- அடைப்பை-வெற்றிலைப் பாக்கு வைக்கும் பை
- நுனை-முனை
- கோமான்-அரசன்
- பொற்றொடி-பொன் வளை
- மடந்தையர்-பெண்கள்
- சிலதியர்-பணிப்பெண்கள்
- வள்ளம்-கிண்ணம்
- தீந்தேறல்-தித்தித்த மது(தேறல்-மது,கள்)
- மாந்தினர்-நன்றாக குடித்து
- கடிந்து-கண்டித்து
- வறிது-பொருந்தாத
- புல்லுதல்-தழுவுதல்
- செவ்வாய்-சிவந்த வாய்(இதழ்)
- காவி-நீலமலர்
- எட்டுக்கு-எண்வகை இடம்(தலை,மிடறு,நெஞ்சு,பல்,இதழ்,நா,மூக்கு,அண்ணம்)
- வறிதிடம்-பொருந்தாத இடம்
- புலவி-ஊடல்
- நகைபடு-நகைச்சுவை தரும்
- கிளவி-மொழி,பேச்சு
- கண்ணார்-கண்களை உடைய
- செங்கயல்-சிவந்த கயல் மீன்
- கொழுங்கடை-அழகிய கடைக்கண்
- நுதல்-நெற்றி
- வியர்-வியர்வை
- செவ்வி-காலம்
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in