சாத்தனார் கண்ட மாதவி – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

வழக்கம்போலப் பூம்புகாரில் இந்திர விழா நடை பெறுகின்றது. முன்பெல்லாம் இந்திர விழாவிலே,ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள அவையிலே மாதவி நல்லாள் நாட்டியமாடுவாள். அவளுக்கு ஒரு
மகள் பிறந்து, ‘மணிமேகலை’ எனப் பெயர் தாங்கிய அந்தக் கட்டிளங்கன்னி நடனக்கலை பயின்று ஆடத் தொடங்கிய பின்னர், மாதவி நாட்டியத் தொழிலிலிருந்து விலகிவிட்டாள். அத்துறையில்தான் பெற்றிருந்த எல்லையற்ற செல்வாக்கை தன் மகள் மணிமேகலைக்கு வழங்கினாள். அதனால், ஆடல் – பாடல் – அழகு என்ற மூன்றில் ஒன்றும் குறையாமல் – மூன்றையும் முழுமையாகப் பெற்றிருந்த மணிமேகலை, மாதவியின் மகள் என்ற செல்வாக்கையும் பயன்படுத்திக்கொண்டு புகழேணியில் ஏறினாள். இந்த நிலையில்தான் மதுரையிலே கோவலன் கொலையுண்டான். மணிமேகலையின் மனக்கோயிலில் மூலவிக்கிரமாகத் திகழ்ந்த கண்ணகியின் வாழ்வு முடிந்தது. ஆம், அவர்கள் பிறந்த நாட்டிலன்று,புகுந்த நாட்டில்! இந்தச் செய்தி கேட்டு ஆறாத் துயரடைந்தாள் ஆடற் கலையரசி மாதவி. பருவப் பெண்ணாக வளர்ந்திருந்த மணிமேகலையும் தன் தந்தையின் முடிவு கேட்டு துக்கத்தில் ஆழ்ந்தாள்.

இந்த நிலையில்தான் இந்திரா விழாவுக்காகப் பூம்புகார் நகரம் விழாக்கோலம் பூண்டு விளங்குகின்றது.நகரமெங்கும்,“வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக” என்னும் வாழ்த்தொலி முழங்குகின்றது. அந்நாளிலும் கோலோச்சுவோருக்கு வாழ்த்துக் கூறும் வழக்கம் குடிமக்களிடமிருந்தது. ஆனால், கொம்புக்கும் செம்புக்கும் அஞ்சிக் கொடுங்கோலை வாழ்த்தும் வழக்கமோ,
மக்களைப் பட்டினியில் ஆழ்த்தும் அரசுக்குப் பல்லாண்டு பாடும் பழக்கமோ அந்நாளில் இருக்கவில்லை.அதனாற்றான், முதலில் “வானம் மும்மாரி பொழிக” எனக் கூறிவிட்டு, “மன்னவன் கோமீநிலை திரியாக்
கோலோன் ஆகுக” என்று உரை பகன்றனர். “ கோள் நிலை திரியா” என்பதன் பொருள், பருவ மழை தவறாமல் பெய்வதனை குறிக்கும். பருவ மழை தவறினாலோ,தேவைக்கு அதிகமாகப் பெய்து வெள்ளப் பெருக்கால் மக்கள் வேதனையுற்றாலோ, அதற்கெல்லாம் மன்னவனின் கொடுங்கோன்மையே காரணமென்று கருதி அவனைப் பழிப்பது அந்நாளைய வழக்கம்.

பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என, பூம்புகாரில் சோழமன்னனுக்கு மக்கள் எழுப்பும் வாழ்த்தொலி வீதிதோறும் முழங்குகின்றது. ஆனால்,இந்திர விழாவிலே எதிர்பாராத ஒரு மாறுதல்! அதாவது,‘மாதவி மகள் மணிமேகலை நடனமாடுவாள்’ என விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால், அரசியலாரும்,அறிஞர்களும், கலைஞர்களும், பொது மக்களும் குழுமினர். ஆனால், உரிய நேரத்தில் மணிமேகலைவரவில்லை. அதிருப்தி அடைந்த மக்கள் மணிமேகலையின் பாட்டியும், மாதவியின் அன்னையுமான சித்திராபதிக்கு ‘அவசரச் செய்தி’ அனுப்புகின்றனர்.“நடன அரங்குக்கு மணிமேகலையைக் கொண்டு வா” என்பதே அந்தச் செய்தியாகும். ஏற்கனவே கோவலன் பிரிவால் வருந்தி மாதவியாள் துறவு கொண்டதே சித்திராபதிக்குப் பிடிக்கவில்லை. இது “குலத்துக்கு அடுக்காத கொடுமை” எனக் குமுறிக் கொண்டிருந்தாள்.“கூத்தாடும் பரத்தைக்குத் துறவு வேறா? என்று பொருமிக்கொண்டிருந்தாள். ஆனால், மாதவிக்கு வயதாகி விட்டதாலும், அவளுடைய மகள் மணிமேகலை அரங்கேறி ஆடத் தொடங்கிவிட்டதாலும், சித்திராபதி ஓரளவு ஆறுதல் கொண்டிருந்தா. ஆனால், மாதவியைப்பின்பற்றி மணிமேகலையும் ஆடற்கலையை வெறுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டபோது, நெஞ்சம்திடுக்கிட்டு நிலை குலைந்து போனாள்.

ஊரார் சும்மாயிருக்கவில்லை. மாதவி துறவு கொண்டபோதே அது குறித்துக் கேலி பேசிய ஊர் மக்கள் இப்போது கன்னிப்பருவத்தினளான மணிமேகலையும் இந்திர விழாவில் ஆட வரவில்லை என்ற
வுடனே பரிகாசம் செய்தனர்.மாதவி துறவு கொண்டதனைப் பழித்தும், மணிமேகலை இந்திர விழாவில் ஆட வராததனை வெறுத்தும் ஊரார் அலர் தூற்றுவதனை தோழி வசந்தமாலை மாதவியிடம் கூறினாள். அதுகேட்டு மாதவி,காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு,போதல் செய்யா உயிரொடு நின்றே,பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து,நல்தொடி நங்காள்! நாணுத் துறந்தேன்.“நல்ல தொடியணிந்த வசந்தமாலையே! என் காதலனாகிய கோவலன் கொலையுண்டதனைக் கேள்வியுற்றும் என் உயிர் உடலைவிட்டு நீங்கா நின்றது.அழகிய இப்பழம்பெரும் நகரத்தார் என்னைப் புகழ்ந்துவந்த பெருமையினை இழந்து, நாணத்தையும் விட்டவளானேன்” என்றாள். பின்னும், கணவனை இழந்த கைம் பெண்டிர் கடைப்பிடிக்கும் மூன்றுவிதமான விரதங்களை எடுத்துக் கூறி, அவற்றினும் சிறந்த நெறியைக் கடைப்பிடித்த கண்ணகியைப் புகழ்ந்து பேசுகின்றாள் மாதவி.காதலர் இறப்பின், கனைஎரி பொத்தி,ஊதுஉலைக் குறுகின் உயிர்த்து, அகத்து அடங்காது,இன்உயிர் ஈவர், ஈயார் ஆயின்,நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்;
நளிஎரி புகாஅர் ஆயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று, உடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர், பரப்பு நீர் ஞாலத்து;அத்திறத் தாளும் அல்லஷீமீ, எம் ஆள்இழை;“கற்புடைப் பெண்டிர், தம் உயிரினும் சிறந்த கணவன் இறந்தால், துயர நெருப்பு மூளப்பட்டதால்,உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப் போல வெப்பத்தால் உயிர்த்து, துன்பம் மனத்தகத்தே அடங்கப் பெறாது, உடனே தமது இனிய உயிரைக் கொடுப்பர்,அங்ஙனம் உயிர் கொடாராயின், நல்ல குளிர்ந்த நீரினையுடைய பொளிணிகையில் ஆடுபவர்போல, நெருப்பிடைக் குளிப்பர், அப்படி, தீயிடைக் குளியாராயின்,மறுபிறப்பில் தன் கணவரோடு சேர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு, கைம்மை நோன்பினைக் கடைப்பிடித்து உடம்பினை வருத்துவர். எம் கண்ணகியோ,அத்தகைய பெண்டிர் வகையிற் சேர்ந்தவளும் அல்லள்.கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்;மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப,கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலைதிண்ணிதின் திருகி, தீ அழல் பொத்தி,காவலன் பேரூர் கனை எரி ஊட்டிய மாபெரும் பத்தனி மகள், மணிமேகலை,அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள் .

“கணவனுக்கு நேர்ந்த கடுந்துயர் பொறாதவளாய்,மணம் நிறைந்த கூந்தல் பிடரியை மறைத்து விரிந்து தாழ்ந்து கிடப்ப, கண்ணீரால் நனைந்த அதிர்த்த அழகிய இளங்கொங்கையை, தன்வலிமையால் திருகி
எடுத்து, அழல் செறிந்த அக்கொங்கையால் பாண்டியனது பேரூராகிய மதுரையைத் தீக்கிரையாக்கிய மிகச் சிறந்த தெய்வக் கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை, இழிந்த தன்மையுடைய
பரத்தமைத் தொழிலில் ஈடுபடமாட்டாஷீமீ” என்று,வசந்த மாலையிடம் கூறினாஷீமீ மாதவி.நாட்டியத்தில வெறுப்புமாதவி, தான் வயிறாரச் சுமந்து பெற்று, பாலூட்டி வளர்த்து, பருவப் பெண்ணாக்கிய மணிமேகலையை,தன் மகள் என்னாது, “மாபெரும் பத்தினி (கண்ணகி) மகள், மணிமேகலை” என்று கூறுவது ஆழ்ந்த பொருளுடையதாகும்.மாதவி, பரத்தையர் குலத்தில் பிறந்தவளாயினும், ஒழுக்கமுடையவள்: இதனை, கோவலன் ஒருவனுக்கே வாழ்க்கைப்பட்டு, அவன் மாண்தும் அவஷீமீ துறவு கொண்டதால் அறிகிறோம். மாதவி இசைபாடும் துண்டு. லளிதக் கலை எதுவும் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்ட வல்லது என்பது பொதுவான கருத்து. அதனால்,மக்களுக்குப் புலனடக்கத்தைப் போதிப்பதிலே நாட்டமுடையவர்களாக விளங்கிய இடைக்கால சமணர்களும் பௌத்தர்களும் நடனக்கலை அளவுக்குமீறி சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததை வெறுத்திருந்தால்,அதில் வியப்பில்லை.புறச் சமயத்தவர்களின் எதிர்ப்பால் நடனக் கலை அழிந்துவிடக் கூடுமென்று அஞ்சிய நம்முடைய முன்னோர், அதனைக் கோயில்களிலே குடியேற்றி,சுவாமி முன்னே நாட்டியமாடச் செய்வதை சமயச் சடங்காக்கினர்.

122014_Mapose_photo (4)

ஆம் ஒரு தலைமுறைக்கு முன்புவரை தமிழ் நாட்டில் நடனக் கணிகையர் கோயில்களைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினர். கோயில் நிலங்களிலிருந்து நடனக் கணிகையர்களுக்கு ‘இனாம்’ நிலங்கள் வழங்கப்பட்டன.அதனால், ‘தேவ தாசிகள்’ என்றொரு புது சாதியே தோன்றி,ஆலயங்களின் பெருமை குறைந்தது. அதுகண்டு,“கோயில்களெல்லாம் தாசி வீடுகளாகி விட்டனவே!” என்று ஒரு சமயம் மனம் நொந்து கூறினார் காந்தியடிகள்.சமூக சீர்திருத்தவாதிகள் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் விளைவாக, தமிழகத்தில், தேவதாசி முறையை ஒழித்துக்கட்ட சட்டம் செய்யப்பட்டது.அதன் விளைவாக, கோயில்களிலும் உற்சவ காலங்களில் சுவாமி வீதிவலம் வரும்போதும் நங்கையர்கள் நடனமாடும் வழக்கம் அடியோடு மறைந்து விட்டது.இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்த சமுதாயப் புரட்சியை, இற்றைக்குப் பதினெட்டு நூற்றாண்டுக்கு முன்பே துவக்கி வைத்தாள் மாதவி. நடனக் கண்ணிகையர் குலமே மறைந்தொழிய வேண்டும் என்ற விருப்பத்தால், தான் துறவு கொண்டதோடு, தன் மகள் மணிமேகலையை மாபத்தினியாம் கண்ணகிக்கு வாரிசாக்கினாள்.

நாட்டியத் தொழிலில் இனி மணிமேகலை ஈடுபட மாட்டாள்” என்று வசந்தமாலையிடம் கூறிய மாதவி, அவளிடம் மேலும் கூறுகின்றாள்.

“ஆங்கனம் அன்றியும், ஆள்-இழை! கேளாய்;
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்;
மறவணம் நீத்த, மாசு அறு கேள்வி
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து:
மாபெரும் துன்பம் கொண்டு, உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந்துயர் கூற,
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்:
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்:
பற்றின் வருவது முன்னது; பின்னது,
அற்றோர் உறுவது; அறிக” என்று அருளி,
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
உள்வவகை இவை கொள் என்று உரவோன் அருளினன்,
மைத்தடங் கண்ணார் தமக்கும், எற்பயந்த
சித்திராபதிக்கும் செப்பு, நீ” என -

“அஃதன்றியும், வசந்தமாலையே, மேலும் கேட்பாயாக! இங்கு – புத்தமதத் துறவியர் உறையுமிடம் புகுந்த யான், பாவங்களைத் துறந்த குற்றமற்ற மெய்யறிவு உடையவரான அறவண அடிகளின் திருவடிமீது
விழுந்து, மிகுந்த துன்பத்துடன் மனங் கலங்கியவளாகி,என் காதலன் கோவலனுக்கு ஏற்பட்ட கொடிய முடிவை யான் கூற – அவர், “உலகில் பிறந்தவர் யாவரும் அடைவது பெருகிய துன்பம், பிறவி யழித்த பெரியோர் அடைவது மிக்க பேரின்பம்; முதற்கண் கூறப்பட்ட பிறப்பு உலக விஷயங்கள் மீது கொண்ட பற்றினால் வருவது; பின்னர் உரைத்த பிறவாமை உலகப் பற்றுக்களை ஒழித்தோர் அடைதற்குரியது அவற்றை நீ அறிவாயாக” என்று,நால்வகையான வாய்மையையும் அருளிச்செய்து காமம்- கொலை-கள்-பொய் – களவு என்னும் ஐந்தனையும் பற்றறத் துறந்தவராகிய அவர் ஐவகைச் சீலங்களையும்
உணர்த்தி, உளிணியும் வழி இவையே, இவற்றைக் கொள்க என்று திண்ணிய அறிவினை உடைய அவ்வடிகள் அருளினர்.இங்ஙனம் வசந்த மாலைக்கு மாதவி சொல்லக் கேட்ட மணிமேகலையாள், தன் தாய் தந்தையரான கண்ணகிக்கும் கோவலனுக்கும் மதுரையில் நிகழ்ந்த இன்னல்களை நினைந்து மனமுருகிக் கண்ணீர் வடித்தாள்.அதனால், புத்த பெருமானுக்கு அணிவிப்பதற்காக அவள் அப்போது தொடுத்துக் கொண்டிருந்த மாலை கண்ணீரால் நனைந்தது. அது கண்ட மாதவி, தன்

செல்வியின் கண்ணீரைத் துடைத்து, அவளது துக்கத்தை மாற்றக் கருதி, “நீ தொடுக்கும் மாலை உன் கண்ணீரால் நனைந்து தூய்மையிழந்த தாதலின், வேறு மாலை தொடுத்தற்கு பூஞ்சோலை சென்று புது மலர் பறித்துவாமகளே” என்றாள்.அதுகேட்டு, மாதவியின் உயிர்த் தோழியான சுதமதி என்பாள் மாதவிக்குக் கூறுவாள்.“பெற்றோர்க்கு நேர்ந்த பெருந்துயர் கேட்டு மனத்துயரடைந்து மணிமேகலை கண்ணீருகுப்பதைக் காணின் காமதேவன் தன் அரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் நிலத்தில் எறிந்து விட்டு நெஞ்சம் நடுங்குவான் என்றால், நம் பாவையை ஆடவர் காண்பாராயின் விட்டு நீங்குவாரோ? நீங்கார். தன்னுடைய இயற்கைத் தன்மை குன்றி பேதுறுவர், பேதுறாத ஆடவர் இருப்பின், அவர் பேடியரல்லரோ? ஆதலால், நம் செல்வியை பூப்பறித்தற்குத் தனியாக அனுப்புதல் தகாது.“சண்பை நகரத்தில் வாழும் கௌசிகன் எனும் அந்தணனுடைய மகளாகிய யான், தனியே செல்வதில் உள்ள கேட்டினை உணராது, அச்சமின்றி ஒரு சோலையில் புகுந்து பூப்பறித்தேன், அச்சமயம், இந்திர விழாவைக்
காண விரும்பிமாருதவேகன் என்னும் வித்தியாதரன் ஒருவன் புகார் நகர் நோக்கி வான வெளியே வந்தான்.அவன் தனித்திருந்த என்னைக் கவர்ந்தெடுத்து மேலே சென்று தன்வயப்படுத்தி, சில நாள் கழித்தபின்,

திரும்பவும் என்னைக் கொண்டுவந்து இந்த நகரத்திலே விட்டுவிட்டுச் சென்றனன் மங்கையர் தனியே செல்வதால் உண்டாகும் கேடு இது.பெண்கள் பூப்பறிப்பதற்கேற்ப பாதுகாப்புடன் அமைந்துள்ளதும், தெய்வீகம் பொருந்தியதுமான உவவனம் ஒன்று இந்நகரில் உண்டு. அவ்வனத்திற்குச் சென்று உன் மகள் பூப்பறிக்கலாம், நானும் துணைக்குச் செல்கிறேன்.”இங்ஙனம் கூறிய சுதமதி மாதவியின் அனுமதி
பெற்று மணிமேகலையை உவவனத்திற்கு அழைத்துச் சென்றாள். இதற்குமேல் செல்வி மணிமேகலையின் கதை மாதவியின் தொடர்பின்றியே செல்கின்றது.

- சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

This entry was posted in மாதவியின் மாண்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>