சிலம்பில் ஈடுபட்டதெப்படி:1-சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

“அன்னையின் தூண்டுதலால் அம்மானை இலக்கியம் படித்தேன்”

என் இளமைப் பருவத்திலே அன்னையின் தூண்டுதலால் புகழேந்திப் புலவர் பெயராலுள்ள கோவலன் கதை என்னும் அம்மானை இலக்கியத்தைப் படித்தேன். வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் திரும்பத் திரும்பப் படித்தேன்.

‘முன் கண்ணகி’யாக………

நான் எட்டு வயது சிறுவனாக இருந்தபோது என்னொத்த சிறுவர் சிலர் சேர்ந்து சங்கரதாசர் எழுதிய கோவலன் நாடகத்தை நடிக்க சபை அமைத்து பயிற்சிக்குப்பின் நடத்தவும் செய்தனர். அப்போதெல்லாம் கோவலன் நாடகத்தில் ‘முன் கண்ணகி’ – ‘பின் கண்ணகி’ என இரு வேறு கண்ணகிகள் தோன்றுவார்கள். சிலப்பதிகாரத்திற்கு பலவகையிலும் வேறுபட்ட அந்த நாடகத்திலே கண்ணகிக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடைபெறும்.அதனால், எனக்கு ‘முன் கண்ணகி’ பாத்திரம் தரப்பட்டது.புகழேந்திப் புலவரின் கோவலன் கதையைப் படித்ததும்,சங்கரதாசர் சுவாமிகளின் கோவலன் நாடகத்திலே முன் கண்ணகியாக நடித்ததும் சிலப்பதிகாரத்தோடு இறைவன் எனக்கு பிள்ளைப் பருவத்திலேயே ஏற்படுத்தித் தந்த தொடர்பு போலும்:

நாடகமும் பார்த்தேன்!

அதன் பின்னர் பருவமடைந்தவர்கள் நாடகக் கம்பெனிகள் நடத்திய கோவலன் நாடகத்தையும் பல முறை பார்த்தேன். அந்த நாடகத்திலே நான் பார்த்த,‘கோவலன் கதை’யோடு நான் பிள்ளைப் பருவத்தில் நடித்த- பருவமடைந்த பின் பார்த்த கோவலன் நாடகத்தோடு இளங்கோ படைத்த சிலப்பதிகார காப்பியத்தை ஒப்பிட்டுப்பார்க்க எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. சிலப்பதிகாரம் என்ற ஒரு காப்பியம் இருப்பதை நான் அறிந்திராத காலமது.

காலம் சிலம்பை உணர்த்தியது:

பிற்காலத்தில் சிலப்பதிகாரத்தைப் படித்த பின்னர் புகழேந்தியின் கதையும் சங்கரதாசரின் நாடகமும் இளங்கோவின் காப்பியத்தை ஒட்டியதாக இல்லையென்பதை – பண்பாட்டில் முரண்பட்டிருப்பதை உணர்ந்தேன். ஆனால்,அந்தக் காலத்தில் புகழேந்தியின் கதைக்கும் சங்கரதாசரின் நாடகத்துக்கும் தமிழ் மக்களிடையே நல்ல செல்வாக்கிருந்தது. அது காலத்தின் கோலம்!

ஆனால், நான் சிலப்பதிகாரத்தின் செந்நெறிகளைப் பரப்பிய பின் புகழேந்தியின் கோவலன் கதையும் சங்கர தாசரின் கோவலன் நாடகமும் மக்களிடையில் மதிப்பற்றுப் போயின. இளங்கோவின் கண்ணகியே மக்கள் மனங்களில் இடம் பெற்று விட்டாள். இதை எனக்கு முன் புலவர் பெருமக்களே செய்திருக்க வேண்டும். அவர்கள் சாமான்யர்களுக்கு நெடுந்தொலைவிலிருந்தார்களாதலால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை! அப்படி ஒரு கடமை தங்களுக்கிருப்பதை உணருஞ்சக்திகூட அவர்களுக்கு இருக்கவில்லை.

b1

சிறையில் சிவப்பதிகார வகுப்பு:

சிறையில் சிலம்பைப் படித்த போதே சக அரசியல் கைதிகள் சிலருக்கு வகுப்பு நடத்தினேன். அதுவரை மக்களிடையில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘கதை’க்கும் ‘நாடக’த்துக்கும் சிலப்பதிகாரம் வெகு தொலைவிலிருக்கின்றதென்பதை வகுப்பு நடத்தி வந்தபோதுதான் மிகத் தெளிவாக உணர்ந்தேன்.நான், 1943 நவம்பரில் சிறையிலிருந்து மீண்டதும் என் உறவினர் குடும்பத் திருமணம் ஒன்றிற்கு நானும் என் மனைவி இராசேசுவரியும் செல்ல வேண்டியிருந்தது.ஆனால் சிறையிலிருந்து மீண்டும் எனது உடல் மிகமிக இளைத்துப் போய் இருந்ததால் பார்ப்பவர்கள் என் வாழ்வு நாள் கணக்கில் இருப்பதாகக் கருதி என் மனைவியிடம் அனுதாபங் காட்டுவார்கள். அவருடைய சகோதர சகோதரிகளோ, ‘ஜெயிலுக்குப் போகக் கூடிய காங்கிரஸ்காரனைக் கட்டிக் கொள்ளாதே’ என்று அப்போதே சொன்னோமே கேட்டியா? என்று சொல்லி அவளைப் பயமுறுத்தினார்கள்.அதனால் என் மனைவியுடன் சேர்ந்து உறவினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல அஞ்சுவேன். ஏதேனும் சமாதானம் சொல்லி என் மனைவியை மட்டும் அனுப்பி விடுவேன்.

மனைவி கற்பித்தது:

என் மனைவியின் தாய் வீடு சம்பந்தப்பட்ட மங்கல நிகழ்ச்சி யன்றுக்கு நான் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது. தவிர்க்கக் கூடாத நிகழ்ச்சி. அப்படியிருந்தும்,‘நான் வரவில்லை’ என்று என் மனைவியிடம் சொன்னேன்.‘அவள் நானும் வந்தாக வேண்டும்’ என்று பிடிவாதம் காட்டினாள்.அப்போது நான் சிறையிலேயே செத்திருந்தால் என்று ஆரம்பித்து ஏதோ சொல்ல இருந்ததேன். அதற்குள் அவள், நீ சிறையில் மாண்டிருந்தால் நான் கண்ணகி போன்று இந்த அரசை எதிர்த்துப் போரிட்டு நான் சிறைப்பட்டு செத்திருப்பேன் என்று முகத்தில் சினத்தைக் காட்டி சொன்னாள்.இது நிகழ்ந்தபோது பிட்ரிடிஷ் ஆட்சி வெளியேற
வில்லை. அது வெளியேறும் நம்பிக்கை கூட உதயமாகவில்லை. அதனால், என் மனைவியின் வீரவாசகம் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை எனக்கு உணர்த்தியது.

- சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

This entry was posted in சிலம்பில் ஈடுபட்டதெப்படி. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>