மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

ak
அடைக்கலக் காதை

 

 

4.கருணை மறவன் கோவலன்

AK4
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்,
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி,
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் 45
பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள;
ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி, 50

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து,பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ!

“முன்பொரு நாள்,ஞான மார்க்கத்திற்கு எல்லை என்னும் பெருமை மிக்க ஒருவர்,தானம் பெறும் தகுதியான எண்ணத்துடன்,தளர்ந்த நடையுடன்,ஊன்றுகோல் ஊன்றியவாறு வந்தார்.வயது முதிர்ச்சியால் வளைந்த முதுகுடன் கூன் விழுந்த அந்த வயதான பிராமணரை,தன் பாகனுக்கு அடங்காமல் பறை போன்ற முழக்கத்துடன் ஓடி வந்த மதம் பிடித்த யானை சினத்துடன் தன் துதிக்கையால் பற்றிக் கொண்டது.

அந்த நேரத்தில் விரைந்து “ஓய்” என்று கூவி அந்த யானையின் செயலைத் தடுத்து,அவரை யானையின் கைகளில் இருந்து விடுவித்தாய்.யானையின் கையில் நீ புகுந்து,அது உன்னை வளைத்து இறுக்கியபோது,அதன் துளைபொருந்திய கையை விலக்கி,அதன் வெண்மையான தந்தங்களைப் பிடித்து அதன் மீது ஏறி,பெரிய கரிய குன்றின் மீது இருக்கும் வித்தியாதரனைப் போல அதன் கழுத்துப் பகுதியில் நீ அமர்ந்து,அந்த மிகுந்த சினம் கொண்ட யானையை அடக்கினாய்.அத்தகைய கருணைமிக்க வீரனே !”,

என்று கோவலன் கருணையையும் வீரத்தையும் எடுத்துக் காட்டிய சம்பவம் ஒன்றை பற்றி மாடலன் கூறினார்.

குறிப்பு

 1. வரம்பு-எல்லை
 2. தகைமை-தகுதி
 3. தண்டுகால்-ஊன்றுகோல்
 4. யாக்கை-உடம்பு
 5. மறையோன்-அந்தணர்,பார்ப்பனர்
 6. பாகு-பாகர்
 7. வெம்மை-சினம்
 8. முடங்கு-வளைவு
 9. விஞ்சையன்-வித்தியாதரன்
 10. பொய்-துளை
 11. வெண்கோட்டு-வெண்மையான தந்தம்
 12. கடக்களிறு-மதம் பிடித்த யானை(கடம்-மதம் களிறு-யானை)
 13. பிடர் -பின் கழுத்து

 

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>