மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

ak
அடைக்கலக் காதை

 

8.இசக்கி அம்மன் வழிபாடு

AK8
“அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக், 110
காதலி- தன்னொடு கதிர்செல் வதன்முன்,
மாட மதுரை மாநகர் புகு” என,
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை-

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய 115
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்,
ஆயர் முதுமகள்,மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்

துறவறம் மேற்கொண்டு வாழும் முனிவர்களைத் தவிர,உன்னை போலக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்குப் புறநகரில் இருக்கும் இந்த இருப்பிடம் பொருந்தாது.மதுரை நகரில் அரசரை சார்ந்து வாழும் வணிகர்கள்,உன் பெருமையறிந்து உன்னை ஏற்றுக் கொள்வார்கள்.அதனால்,நீ இனிமேல் இந்த இடத்தில் இருக்க வேண்டாம்.சூரியனின் கதிர்கள் மேற்கில் மறையும்முன்,உன் காதலியான கண்ணகியோடு மாடங்கள் நிறைந்த மதுரை என்னும் பெரிய நகருக்குள் சென்று விடு!”,என்று,மாதவத்தாட்டியான கவுந்தியடிகளும்,பெரும் வேதங்களின் தலைவனான மாடல மறையோனும் கோவலனுக்கு அறிவுரை கூறினார்கள். .

அறம் செய்வதைப் பெரிதும் விரும்புகின்ற அறம் செய்பவர்கள் நிறைந்துள்ள பழமை வாய்ந்த அந்தப் புறநகர் பகுதியில்,பூப்போன்ற பசுமையான அருட்பார்வை உடைய கண்களைப் பெற்ற ‘இயக்கி’(இசக்கி) என்னும் பெண் தெய்வம் குடியிருந்தாள்.அவளுக்கு ஆயர்கள் “பால்மடை” என்னும் பால் சோறு படைத்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.அவர்களுள் வயதான “மாதரி” என்னும் பெண்,கவந்தியடிகளைக் கண்டுதும்,அவர் திருவடிகளைத் தொட்டு வணங்கினாள்.

குறிப்பு

 1. அறத்துறை-தரும வழி
 2. மாக்கட்கு-மக்களை கொண்டது
 3. புறச்சிறை இருக்கை-ஊரின் வெளியே அமைந்துள்ள பள்ளி
 4. அரைசர்-அரசர்
 5. பின்னோர்-அரசரை சார்ந்து வாழ்ந்ததால் வணிகரை பின்னோர் என்றனர்
 6. அகநகர்-நகரின் மையப் பகுதி
 7. இருப்பு-குடியிருப்பு
 8. மாதவத்தாட்டி-கவுந்தியடிகளை குறிக்கும்
 9. மாமறை-பெரிய வேதம்
 10. முதல்வன்-தலைவன்
 11. காலை-நேரம்,பொழுது
 12. புரி-விரும்பிய
 13. அறவோர்-முனிவர்கள்
 14. புறஞ்சிறை-புறநகர்
 15. மூதூர்-பழமை பொருந்திய ஊர்
 16. இயக்கி-இசக்கி
 17. பால்மடை-பால் சோறு (மடை-சோறு)
 18. ஆயர்-இடையர்,ஆடு,பசு,எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்
 19. முதுமகள்-வயது முதிர்ந்த பெண்
 20. இயக்கி-இசக்கி

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>