மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

ak
அடைக்கலக் காதை


11.தவம் புரிந்தவர்கள் தரும் அடைக்கலம்

ak11

 

தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்,
மிகப்பே ரின்பம் தருமது கேளாய், 150
காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர்- தம்முன் 155
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன்,மாலையன்,தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்,
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்,
சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுது,”ஈங்கு 160
யாதிவன் வரவு?”, என இறையோன் கூறும்

“‘தவம் புரிந்தவர்கள் தரும் அடைக்கலம் அந்த நேரம் சிறியதாகத் தெரிந்தாலும்,பிற்காலத்தில் அது பேரின்பம் தரும்’, அதற்கு உதாரணம் ஒன்றை சொல்கிறேன் கேள் !”,என்று மாதரியிடம் முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக் கூறத் தொடங்கினார் கவுந்தியடிகள்…

“‘படைப்பை’ எனப்படும் தோட்டங்கள் பல காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது.அங்கே மலர்ந்த பூக்கள் கொண்ட அசோக மரத்தின் தனித்த திருநிழலில்,நோன்பிருக்கும் பலரும் ஒன்றுசேர்ந்து அமைத்த ஒளிபொருந்திய ‘சிலாதலம்’ என்னும் கல்லால் செய்த ஆசன மேடை ஒன்று இருக்கும்.அதன்மேல் எழுந்தருளி சமண முனிவர்களான ‘சாரணர்’ அறவுரை கூறுவார்கள்.

அந்நேரம் அவர்கள் முன்,வானவில்லை போல ஒளிரும் மேனியுடன்,’தாரம்’ என்னும் பூமாலையும்,மணிமாலைகளும்,பொன் அணிகளும் பூண்டவனாய்,உலக மக்கள் பலரும் வணங்குகின்ற வானவர் மட்டுமே கண்டு வணங்கும் தெய்வத்தின் வடிவம் உடையவனானத் தேவமகன் ஒருவன் வந்து நின்றான்.அவனுடைய ஒருபாகத்துக் கை,கரிய விரல்களை உடைய குரங்கின் கை போலக் காணப்பட்டது.

அப்போது,சாரணர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ‘சாவகர்’ என்னும் உலக நோன்பிகள் அந்த சமண முனிவரை வணங்கி,’இங்கே நீங்கள் வந்ததன் காரணம் என்ன ?’,எனக் கேட்டார்கள்.

குறிப்பு

 1. படப்பை-தோட்டம்
 2. பிண்டி-அசோக மரம்
 3. பொதுமை-பொதுவுடமை,நன்மை
 4. இலகு-விளங்கும்
 5. சிலாதலம்-கல்லால் செய்த ஆசன மேடை
 6. சாரணர்-சமண முனிவர்
 7. திருவில்-வானவில்
 8. திகழ்தரு-விளங்குகின்ற
 9. தாரன்-மாலை
 10. தமனிய(ம்)-தங்கம்,பொன்
 11. படிமையன்-வடிவம் உடையவன்(படிமை-வடிவம்)
 12. விறல்-வெற்றி
 13. வானவன்-வானில் இருக்கும் தேவர்
 14. சாவகர்-உலக நோன்பிகள்
 15. இறையோன்-கடவுள்

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>