மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

ak
அடைக்கலக் காதை

 
 
 

12.குரங்கை பாதுகாப்பாய்!

ak12

“எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி 165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து.
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி, 170

எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை,
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து,’நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத் தீ’, என

சமண முனிவரான சாரணர் அங்கே வந்ததன் காரணத்தைக் கூறத் தொடங்கினார்…..

முன்பு ஒரு காலம்,’எட்டி’ என்னும் பட்டத்தை அரசரிடம் பெற்ற ‘சாயலன்’ என்னும் வணிகன் ஒருவன் இருந்தான்.பட்டினி இருந்து நோன்பு மேற்கொள்ளும் பலருக்கு உணவளித்து உபசரித்து வந்தான்.இப்படி பலரும் வந்து உணவு அருந்தும் அவன் வீட்டிற்கு,ஒரு நாள் பெரும் தவம் புரிந்த முனிவர் ஒருவரும் வந்து உணவு உண்டார்.

மேலான தவத்தால் சிறப்புப் பெற்ற அவரிடம்,சாயலனின் இல்லத்தரசியான அவன் மனைவி,தன் தீவினைகள் அழிய வேண்டி வாழ்த்துமாறு அவன் எதிரில் வேண்டினாள்.அந்தச் சமயம்,அந்த ஊரில் இருந்த குரங்கு ஒன்றை மக்கள் விரட்டியதால்,பயம் கொண்டு சாயலன் வீட்டிற்குள் புகுந்தது.அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற பெரும் தவம் செய்தவரான முனிவரின் திருவடிகளை வணங்கியது.மிகுந்த பசியில் இருந்ததால்,முனிவர் உண்டபின் மிஞ்சிய எச்சில் உணவையும்,அவர் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு தன் பசியைப் போக்கி கொண்டது.

இன்பமடைந்த குரங்கு,முனிவர் முன் சென்று நின்று தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம் அவர் முகத்தை நோக்கியபடி இருந்தது.குரங்கின் இந்தச் செய்கையை விரும்பிய தவறாத அறக்கொள்கையுடைய முனிவர்,சாயலன் மனைவியை நோக்கி,”இல்லத்தரசியே ! இந்தக் குரங்கை உன் குழந்தைப் போலப் போற்றிப் பாதுகாப்பாயாக !”, என்று ஆணையிட்டார்.

குறிப்பு

 1. தானச் சிறப்பு-தானத்தால் பெற்ற சிறப்பு
 2. எட்டி-வணிகர்க்கு அரசரளிக்கும் சிறப்புப்பெயர்
 3. ஓர்-ஒப்பற்ற,பெரிய
 4. கிழத்தி-உரியவள்
 5. ஏதம்-தீமை
 6. அமயம்-காலம்,பொழுது,சமயம்
 7. பாற்படு-ஒழுங்கடைதல்
 8. மிச்சில்-எச்சில்,எஞ்சிய பொருள்
 9. தண்டா-நீங்காத
 10. வேட்கை-விருப்பம்
 11. செவ்வி-தன்மை
 12. நயந்து-விரும்பி
 13. ஓம்பு -பாதுகாத்தல்

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>