சிலம்பில் ஈடுபட்டதெப்படி:2-சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்:

அதன்பின், இளங்கோவின் சிலப்பதிகாரக் கதையை படித்தவர்களிடையிலும் பாமரர்களிடையிலும் பரப்பும் பிரசாரப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆவலும் எனக்குப் பிறந்தது. எனது நினைவிலுள்ளபடி
எனது முதல் பேச்சு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் அமைந்தது. அப்போது பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அந்தப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். அவரால் அழைக்கப்பட்டுத்தான் அங்கு சென்று நான் பேசினேன். ஒரு சிறிய வகுப்பறையில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. அநேகமாக பல்கலைப் புலவர்கள் அதிகமாக வந்திருந்தனர். ஆனால்,எனது பேச்சுக்கிருந்த வரவேற்பு புலவர்கள் ரசித்த முறை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடலாமென்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

கண்ணகியின் வரலாற்றைச் சொல்லியே தமிழ்ப்பெண்களை தேச விடுதலைப் போரில் ஈடுபடுத்த முடியுமென்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. சிலப்பதிகாரம் ஒரு அரசியல் புரட்சிக் காவியம் என்பதை ஐயமற அறிந்தேன்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் நான் தில்லை இளங்கோ கழகத்திலும் சிலப்பதிகாரம் பற்றி முதன் முதலாகப் பேசினேன்.

முதல் நூல்:

அந்தப் பேச்சை ‘சிலப்பதிகாரமும் தமிழரும்’ என்னும் தலைப்புடன் யான் நடத்திய ‘தமிழ் முரசு’ மாத இதழில் வெளியிட்டேன். அதன்பின் அதே பெயரில் இன்ப நிலையத்தாரால் 1948-ல் நூலாகவும் வெளியிடப்பட்டது.எனது பேச்சு ‘தமிழ் முரசில்’ வெளியானதுமே அப்போதைய சென்னை மாகாண அரசு அதைத் தடை செய்யவும் பிரசுராலயத்திடமுள்ள பிரதிகளைப் பறிமுதல் செய்யவும் ஆலோசனை நடத்தியதாக தக்கார் வாயிலாக அறிந்தேன். ஆனால், அதற்குள் மத்தியில் நேருஜி தலைமையில் இடைக்கால அரசு ஏற்பட்டு விட்டதால் எனக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை.சிலம்பதிகாரம் படைத்த, ஆசிரியர் இளங்கோவடிகள் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய அனைத்துச் சமயங்களையும் சமமாகக் கருதினார். இந்த வகையில் அவர்தான் தேசிய ஒருமைப்பாடடிற்கு முதலில் வழி காட்டினார்.
புறச்சமயங்களை அவர் விரும்பி ஏற்றார். எதையும் வெறுத்து ஒதுக்கவில்லை. தம் சமயம் இன்னதென அவர் கூறவில்லை; அவரை சமணர் என்று சொல்வோருண்டு.அவர் தம் அண்ணன் செங்குட்டுவன் சைவனென்று அடிகள் வெளிப்படையாகக் கூறியிருப்பதால், தம்பியின் சமயமும் அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று அனுமானித்துக் கூறியிருக்கிறார் டாக்டர் உ.வே. சாமிநாதஐயர், ஆனால், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களைப் பக்தி பூர்வமாக அடிகள் பாடியிருப்பதைப் பார்த்தால் அவரை வைணவரென்றும் கருத வாய்ப்பிருக்கிறது.

3

சர்வசமய சமரசம்:
——————–
இளங்கோ தம்முடைய சமயத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள விரும்பினால் சிலப்பதிகார காப்பியத்திற்கும் சமய வண்ணம் பூசப்பட்டு விடுமென்று ஐயுற்றே காப்பியத்தில் மறைந்து கொள்ளுகிறார். பெரும் புலவர்கள் பலர் அடிகளை சமணர் எனக் கருதி அவர் படைத்த காப்பியத்தை சமண நூற்கள் பட்டியலிலே சேர்த்து வைத்துள்ளனர்.ஆதிசங்கரர் வேதமதப் பிரிவுகளான அறுவகை சமயங்களையும் ஒன்றுபடுத்துவதற்கு முயன்று ஷண்மக ஸ்தாபகர் என்ற பட்டமும் பெற்றுள்ளார். ஆனால்,சங்கருக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தவரான இளங்கோவடிகள் சமணம், பௌத்தம் ஆகிய இரண்டையும்
சேர்த்து இந்திய மதங்களை மக்கள் சமமாக மதித்து போற்ற வழிகாட்டினார்.சங்கரர் காலத்து அறுவகைச் சமயங்கள் – சைவ(சிவனை வழிபடுவது), வைணவம் (திருமாலை வழிபடுவது), காணாபத்யம் (கணபதியை வழிபடுவது) கௌமாரம் (குமரக் கடவுளை வழிபடுவது) சாக்தம் (சக்தியைவழிபடுவது), ஐந்திரேயம் (இந்திரனை வழிபடுவது) எனப்பட்டன.

சங்கரர் சாதிக்காதது:
——————-
சங்கரர் காலத்தில் சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களும் வலுப்பெற்றிருந்தன. இந்தியாவின் சில பிரதேசங்களில் சமணரும் பௌத்தரும் ஆட்சி புரிவோராகவும் இருந்தனர். அப்படியிருந்தும் அவ்விரண்டும்
வேத சமயத்துக்குப் புறச்சமயங்கள் எனக் கருதி அவற்றைப் புறக்கணித்து விட்டார் சங்கரர்.இளங்கோடிவகள் சேர இளவரசராதலால் – சமணரும் பௌத்தரும் சேர நாட்டின் குடிமக்களாதலால் அவர்களை
ஒதுக்காமல் சமணமும் பௌத்தமும் இந்து மதத்தின் பிரிவுகளல்லவென்றாலும் இந்திய மதங்களாதலால் சிலப்பதிகாரத்தில் வேதமதத்திற்குரிய மதிப்பைத் தந்துசமணத்திற்கு கவுந்தியடிகளையும் பௌத்தத்திற்கென கூலவாணிகள் சாத்தனாரையும் பாத்திரங்களாக்கி சிலம்பில் சேர்த்து விட்டார்.ஆனால், சிலம்பில் கணபதியை மூர்த்தியாகக் கொண்ட காணாபத்ய மதத்தைச் சேர்த்து வைக்கவில்லை. காரணம்,இளங்கோவடிகள் காலத்தில் கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் இல்லாததுதான். அது தமிழர் வாழ்வில் பிற்காலத்தில் புகுந்ததுதானே!

ஐந்திரரேய சமயத்திற்கு இந்திர விழவூரெடுத்த காதையைப் படைத்து புகார் நகரத்தார் அனைவரும் -அனைத்து சமயத்தினரும் – கொண்டாடுவதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.சக்தி வழிபாட்டுக்கென கொற்றவை வழிபாட்டை இசைப் பாட்டாகவும், குமரன் வழிபாட்டிற்கென இசைப்பட்டாக குன்றக் குரவையையும் வைணவர் திருமால் வழிபாடு நடத்துவதையும் இசைப்பாட்டாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இம்மூன்றும் கூட்டு வழிபாடாகவும் அமைந்துள்ளது. சிவனை வழிபடுவதற்கென தனிப்பாடலோ தனிக்காதையோ அடிகள் படைக்கவில்லை.காரணம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக இளங்கோ கருதியதுதான். ஆயினும் புகாரில் சிவன் கோயில் இருந்ததனை நாடுகாண் காதையில் கூறியுள்ளார். ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்னும் வாசகத்தாலும் சிவபெருமானை நினைப்பூட்டுகிறார்.சமணப் பள்ளியும் பௌத்த மடமும் புகாரிலிருந்ததையும் வேதமதக் கடவுளர் கோயில்களுடன் சேர்த்து சமண – பௌத்த மடங்களையும் வலம் வந்து வழிபட்டு கோவலனும் கண்ணகியும் புகார் நகரிலிருந்து வெளியேறுவதாகக் கூறுகிறார்.
இந்த சமய ஒருமைப்பாடு காரணமாகவும் சிலப்பதிகாரம் என் சிந்தனையைக் கவர்ந்தது.இந்திய ஒருமைப்பாட்டையேயன்றி, அதற்கு அடிப்படையாக மூவேந்தர்களாண்ட சேர – சோழ – பாண்டிய மண்டலங்களையும் தம் காப்பியத்தில் அடிகள் ஒன்றுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

- சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

This entry was posted in சிலம்பில் ஈடுபட்டதெப்படி. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>