மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

ak

அடைக்கலக் காதை

 

15. மதுரை நுழைவாசலின் பாதுகாப்புகள்

 

ak15
மிளையும்,கிடங்கும்,வளைவிற் பொறியும்,
கருவிர லூகமும்,கல்லுமிழ் கவணும்,
பரிவுறு வெந்நெயும்,பாகடு குழிசியும்,
காய்பொன் உலையும்,கல்லிடு கூடையும், 210
தூண்டிலும்,தொடக்கும்,ஆண்டலை அடுப்பும்,
கவையும்,கழுவும்,புதையும்,புழையும்,
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்,
சென்றெறி சிரலும்,பன்றியும் பணையும்,
எழுவும்,சீப்பும்,முழுவிறற் கணையமும்,215
கோலும்,குந்தமும்,வேலும்,பிறவும்,
ஞாயிலும் சிறந்து

நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்து,தன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை-கொள்கையிற் புணர்ந்தென்.

காவல் காடும்,அகழியும்,வளைந்த இயந்திர வில்லும்,கரிய விரல் கொண்ட குரங்கு போன்ற உருவத்தில் வந்தவரைக் கடிக்கும் பொறிகளும்,கல்வீசும் கவண் என்னும் கருவியும்,மதில் ஏறி வர முயலும் பகைவர் மீது ஊற்றச் சூடாக வைக்கப்பட்டிருந்த வெண்மையான நெய்யும்,செம்பை உருக்கி பகைவர் மேல் தெளிக்கும் பாத்திரமும்,இரும்பைக் காய்ச்ச வைக்கப்பட்ட உலைகளும்,கல் வைக்கப்பட்ட கூடைகளும்,அகழியைத் தாண்டி மதில் மேல் ஏறவருபவர்களைப் பிடிக்கும் தூண்டில் வடிவக் கருவிகளும்,எதிரியின் கழுத்தை முறிக்கும் சங்கிலிகளும்,ஆணின் தலை போல் உருவம் அமைக்கப்பட்ட அடுப்புகளும்,அகழியில் ஏறுபவர்களின் இரண்டு கால்களை இரண்டு கவட்டைகளில் கட்டித் தொங்கவிட்டுத் தண்டனை வழங்கும் கவையும்,தண்டனை வழங்க நிறுத்திப்பட்ட கழுகு மரமும்,வரும் எதிரிகள் அறியாமல் விழுந்து சாகும்படி பொய்யாக அமைக்கப்பட்ட புதைக்குழிகளும்,உள்ளே நுழைந்தவர் வெளியில் போக முடியாமல் செய்யும் புழைவாசலும்,எதிர்ப்பவர் தலையைத் திருகி எறியும் பொறிகளும்,மதில் உச்சிக்கு வருபவரின் கையைக் குத்தும் ஊசிப் பொறிகளும்,பகைவர் மேல் பாய்ந்து கண்ணைக் கொத்தும் மீன் கொத்திப் பறவை பொறிகளும்,மதில் உச்சியை ஏறினவர்களின் உடலைக் கிழிக்கும் இரும்பால் செய்த பன்றிப் பொறியும்,பகைவரை அடிப்பதற்கு மூங்கில் வடிவாகப் பண்ணி வைக்கப்பட்ட பொறிகளும்,கோட்டைக்கு ஆதரவாகப் போடப்பட்ட பெரிய மரக்கட்டைகள்,கதவின் தாழ்கள்,கதவுக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட மிக வலிமை வாய்ந்த கணைய மரங்கள்,அடிக்கும் கோல்,குந்தம் என்னும் ஈட்டி,வேல்,அரசர்களின் பொருட்களைப் பாதுகாக்கும் மதில்கள்,இன்னும் சில கருவிகளும் அமைந்திருந்தன.

நாள் முழுவதும் கோட்டை வாசலில்,பகைவரை வென்றதன் அடையாளமாக உயர்ந்த கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

இப்படி பலதரப்பட்ட பொறிகள் அமைந்த மதுரை கோட்டையின் வாசலைக் கடந்து,மாதரி,இடைக்குலப்பெண்கள் பலரும் புடைசூழக்,கோவலன் கண்ணகியுடன் தன்னுடைய வீடு சென்று சேர்ந்தாள்.

குறிப்பு

 1. மிளை-காடு
 2. கிடங்கு-அகழி
 3. பொறி-இயந்திரம்
 4. ஊகம்-குரங்கு
 5. கவண்-கல் எறியப் பயன்படும் கருவி
 6. பரிவுறு-அன்புடன் சேர்ந்து (பரிவு-அன்பு)
 7. உறு-துன்பம்
 8. குழிசி-மண்ணால் செய்த குடம்
 9. அடு-காய்ச்சு
 10. பாகு-செப்புக் குழம்பு
 11. பொன்-இரும்பு
 12. இடு-வை
 13. தொடக்கு-சங்கிலி,கழுத்தில் மாட்டும் சங்கிலி
 14. ஆண்டலை-ஆணின் தலை,ஆண் தலை போன்ற தலையுடைய ஒரு வகை பறவை
 15. கழுவு-கழுக்கோல்,கழுகு மரம்
 16. புதை-அம்பு,புதைக்குழி
 17. புழை-ஏவறை,மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு,புழைவாயில்
 18. ஐயவித் துலாம்-தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி.
 19. சிரல்-சிச்சிலி,மீன்கொத்திப்பறவை
 20. பணை-முரசு
 21. எழுவு-கோட்டைக்கு ஆதரவாகப் போடப்படும் பெரிய மரக்கட்டைகள்
 22. சீப்பு-கதவின் தாழ்
 23. கணையம்-கணைய மரம்
 24. விறல்-வலிமை
 25. கோல்-ஏறிகோல்,அடிக்கும் கோல்,விட்டேறு
 26. குந்தம்-சிறுசவளம்,ஈட்டி
 27. ஞாயில்-அரசர்களின் பொருட்களை பாதுகாக்கும் மதில்கள்,கிடங்குகள்
 28. நுடங்கும்-அசையும்
 29. கழிந்து-கடந்து
 30. ஆல்-ஆசை

அடைக்கலக் காதை முடிந்தது .

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>