சிலம்பில் ஈடுபட்டதெப்படி:3-சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

புதிய தமிழகம்:

இளங்கோவும் சாத்தனாரும் சேர்ந்திருந்த போது,‘முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக’ என்று சாத்தனார் கூறக் கேட்கிறோம் பதிகத்திலே!தமிழினமே ஒன்றுபடு என்னும் கோஷத்துடன் தமிழரசுக் கழகத்தைத் தோற்றுவித்து புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட காலத்தில் சிலப்பதிகாரத்தைப் படித்தேன்.அதனாலும் மன்னர்வழி மூவேறு மண்டலங்களாகப் பிரிந்து கிடந்த தமிழகத்தை அடிகள் ஒன்றுபடுத்தியது ஐக்கிய தமிழகம் படைக்க விரும்பிய எனக்கு வழி காட்டியாக இருந்தது. அதனால், சிலம்பை எழுத்தெண்ணிப் படித்தேன் இன்னமும் படித்துக்கொண்டே இருக்கிறேன்.சிலப்பதிகார காப்பியத்தில் தலைமை கோவலனுக்கு அல்ல. சிலப்பதிகார நாயகியான கண்ணகி நம்மைப் போன்றே தந்தையின் விந்துக்கு தாயின் வயிற்றில் பிறந்தமானுடப் பெண்ணே. தெய்வ அவதாரமல்ல. இராமாயண -
பாரதக் காப்பியங்களிலே தெய்வங்கள் மானிடராகவருகின்றனர். சிலம்பிலோ மானிடர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வங்களாகின்றனர்.அதை அறிவியல் வாதிகளும் ஏற்கின்றனர்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.என்னும் குறட்பா வழித்தான் காப்பிய நாயகியை இளங்கோவடிகள் படைத்துள்ளார்.

- 3

சிலம்பில் தலைமை கண்ணகிக்கே!

வடமொழியில் காப்பிய நாயக – நாயகியர் கடவுள் அவதாரமாக இருக்க வேண்டும். இல்லையேல் நால் வருணங்களில் மேல் வருணங்களான அந்தணராகவோ அரசராகவோ இருக்க வேண்டும். இதுதான் இலக்கணவிதி.இந்த விதிக்கு விலக்காக மிகவும் அரிதாக வணிக வருணத்தவராக இருக்கவும் வடமொழி அனுமதிக்கிறது.ஆனால், நான்காம் வருணத்தவன் காப்பிய நாயகனாகவர அனுமதிக்கவில்லை.
விதிக்கு விலக்காக வைத்ததை விதியாக்கி, வணிக வருணத்தவளான கண்ணகியை காப்பிய நாயகியாக்கினார் இளங்கோ.இராமாயண காப்பியத்தில் தாயகத் தன்மை சீதைக்கல்ல; இராமனுக்குத்தான்! இராமன் காப்பிய நாயகனாவதற்காக சீதை சிறைப்பட்டுத் துன்புறுகிறாள் .சிலம்பிலே, காப்பியத் தலைமை கோவலனுக்கல்ல;கண்ணகிக்குத்தான்! கண்ணகி கற்பின் தெய்வமாவதற்காக- மாந்தர் வழிபடுவதற்காக கோவலன் கொலையாகிறான்;

தலைவிக்குத் தலைவன்:

சிலம்பில் கோவலனுக்குள் அந்தஸ்து காப்பியத் தலைவியான கண்ணகிக்கு நாயகன் என்பதுதான்!கண்ணகி இரு நிதிக்கிழவனான மாநாய்கன் மகள்;கோவலன் பெருநிதிக்கிழவன் மாசாத்துவான் மகன்,
ஆயினும் அவர்கள் வறியரான பின்னரே காப்பியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பிழைக்கவே கோவலன் மதுரை செல்கிறான்.சிலம்பின் கருப்பொருள் மதுரைக் காண்டத்தில் தான் இருக்கிறது. புகார்க் காண்டம் முன்னுரைதான் வஞ்சிக்காண்டம் முடிவுரை எனலாம்.நான், பிள்ளைப் பருவ முதற்கொண்டே பாரத தேசம் முழுவதையும் தாய்நாடாகக் கருதும் தேசியவாதியாக இருந்து வருகிறேன். காந்தியடிகள் பால் கொண்ட பக்தியும் இந்த ஒருமைப்பாட்டுணர்வை உறுதிப்படுத்தி வந்துள்ளது.காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபடத்தொடங்கிய பின், ‘வந்தே மாதரம்’ – ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்கத் தொடங்கிய பின் தேசியம் என்பதே எனது மதமாகி விட்டது.பாரதியாரின் தேசியப் பாடல்களைப் படித்தும் காங்கிரஸ் மேடைகளிலும் காங்கிரஸ் ஊர்வலங்களிலும் சகோதரத் தொண்டர்களோடு சேர்ந்து பாடியும் வந்த பின் தேசிய ஒருமைப்பாடு எனது ஊனிலே உணர்விலே உயிரிலே கலந்து நானே அதுவாகி விட்டேன்.ஆகவே, பிற்காலத்தில் தமிழ் இலக்கியங்களிலே
பயிற்சி ஏற்பட்டபோது, எந்த இலக்கியத்தைப் படித்தாலும் அதிலே தேச ஒருமைப்பாட்டுக்கான கருத்துகளைத் தேடுவதையும் திரட்டுவதையும் அவற்றை எழுத்தாலும் பேச்சாலும் பிரசாரம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டு விட்டேன்.

சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

This entry was posted in சிலம்பில் ஈடுபட்டதெப்படி. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>