மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

kklogo
கொலைக்களக் காதை

 

 

2.ஐயை உறவானாள்
kk2
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி,
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்,
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் 10
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி;
பொன்னிற் பொதிந்தேன், புனைபூங் கோதை,
என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது,
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி, 15
ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்

“நோதக வுண்டோ, நும்மக னார்க்கினி?
சாவக நோன்பிக ளடிக ளாதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் 20
நெடியா தளிமின்,நீர்” எனக் கூற

 

நெருக்கமாக வளையல்கள் அணிந்த ஆயர்குலப் பெண்கள் சிலர் கூடி,நறுமணம் கமழும் கோதை என்னும் மாலை சூடியக் கண்ணகியை புதிய நீரில் குளிப்பாட்டினார்கள்.’கூடல் நகரமான மதுரையில் இருந்த பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் பொன்னால் செய்த நகையின் அரிய மதிப்பை அழிப்பதற்கு நீங்கள் இங்கே உங்களின் இயற்கை அழகோடு வந்திருக்கிறீர்கள்!’,எனக் கண்ணகியின் இயற்கை அழகைக் கண்டு வியந்தாள் மாதரி.

“இதோ!என் மகள் ஐயையைப் பாருங்கள்!நீங்கள் கட்டளையிடுவதை அவள் உங்கள் பணிப்பெண்ணாக ஏற்றுச் செய்வாள்’,என்று ஐயையை கண்ணகியிடம் அறிமுகம் செய்தாள்.

உடனே ஐயையிடம்,’பொன்னைப் பொத்தி பாதுகாப்பது போல உன்னைப் போற்றிக் காப்பேன்.அழகிய பூங்கோதையை உடைய நங்கையே,நீ இந்த வீட்டிலேயே இரு!’,என்று கைகூப்பி வணங்கினாள் கண்ணகி.

இவ்வாறு மாதவம் செய்த கவுந்தியடிகள் கண்ணகியை எண்ணி அடைந்த துன்பத்தை நீக்கும் வண்ணம்,கண்ணகிக்கு எந்தத் துன்பமும் நேராமல் அவளை வசதியாகத் தங்க வைத்தாள் மாதரி.

கண்ணகியின் உள்ளம்,மாதரி என்னும் அன்னையின் அன்பினால் நெகிழ்ந்தது.”உன் கணவனுக்கு இனி எந்த கவலையும் இல்லை’,என்று மாதரி கண்ணகியை தேற்றினாள்.பின் அருகில் இருந்த ஆயர்களைப் பார்த்து, அவர்கள் இல்லறத்திலிருந்தே தவம் புரியும் பண்பு உடையவர்கள்.கண்ணகி தன் நாத்தனாரான ஐயையுடன் சேர்ந்து,சூரியன் மறைவதற்குள் உணவு சமைப்பதற்கு வேண்டிய பாத்திரங்களை,காலம் தாழ்த்தாமல் அவளுக்கு சீக்கிரம் தாருங்கள்”,எனக் கட்டளையிட்டாள் .

குறிப்பு

 1. ஆய்ச்சியர்-ஆடு, மாடு மேய்க்கும் இடையர்குலப் பெண்கள்
 2. கோதை-மாலை
 3. செய்யாக் கோலம்-ஒப்பனை செய்யாத இயற்கை அழகு
 4. நறு-நறுமணம்
 5. ஆடகம்-பொன்
 6. நாணீர்-நாள் நீர்,புதிய நீர்
 7. கூடல்-மதுரையை குறிக்கும்
 8. பைம்-பசுமை
 9. பூண்-அணிகலன்
 10. அருவிலை-அரிய விளையுடைய
 11. அடித்தொழிலாட்டி- உடன் இருந்து குற்றேவல் பணி புரியும் பெண்
 12. புனை-அழகு
 13. ஏதம்-குற்றம்
 14. வழித்துயர்-வந்த துன்பம்
 15. இடந்தலைப் படுத்தினள்-இடத்தில் சேர்த்தாள்(தலைப்படுத்தல்-கூட்டுதல்)
 16. சாவகநோன்பி – துறவரம் போகாமல் விரதம் இருப்பவர்கள்
 17. நாத்தூண்-நாத்தனார்
 18. அடிசில்-உணவு
 19. நற்கலம்-புதுக்கலம்
 20. நாள்வழிப் படூஉம்-சூரியன் மறையும் முன்னர்
 21. அளிமின் -அளியுங்கள்
 22. நெடியாது-காலம் தாழ்த்தாமல்

 

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>