மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

6.குரவையாடத் தொடங்கினார்கள்

aich6

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை,ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை ; 14

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான் ; 15

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்,கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள் ; 16

மாதரி,’குரல்’ நரம்பின் பெயருடையவளை ‘மாயவன்’ என்று அழைத்தாள்.’இளி’ என்று பெயர் இடப்பட்டவளை,வெற்றி மிகுந்த வெள்ளை நிற ‘பலராமன்’ என்றாள்.’துத்த’ நரம்பினை பெயராக கொண்டவளை ‘நப்பின்னை’ என்றாள்.மற்ற நரம்புகளின் பெயர் பெற்ற பெண்களை,முன்பு அவளோடு இருந்த ஆயர் குல பெண்கள் என்றாள்.

மாயவன்(குரல்) என்று அழைக்கபட்டவளை அடுத்து,பின்னையும்(தத்தம்),தாரமும் நின்றார்கள்.பலதேவன்(இளி) என்றழைக்கப்பட்ட பெண்ணை அடுத்து உளரியும் விழையும் நின்றார்கள்.கைக்கிளை என்பவள் பின்னைக்கு இடப்பக்கம் நின்றாள்.ஏழிசைக்குள் முதல் இசை என்பதால் ‘முத்தை’ என்னும் சிறப்புப் பெற்ற தாரம் என்னும் நரம்பின் பெயர் பெற்றவள் வலப்பக்கத்தில் ‘விளரி’ என்பவள் நின்றாள்.

இவ்வாறு ஏழு கன்னிப் பெண்களும் தங்கள் முறைப்படி நின்றார்கள்.நப்பின்னை என்பவள் வளம்பொருந்திய துளசி மாலையை மாயவன் என்னும் கண்ணன் தோளில் சார்த்தினால்.அதன் பின்,கூத்து நூல் கூறும் இயல்பில் இருந்து மாறுபடாத வகையில்,குரவைக் கூத்தாடத் தொடங்கினார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்த ஆயர்மகளான மாதரி,’சிறப்பு மிக்க உலகினை அளந்தவன்,தன் மார்பில் இருக்கும் திருமகளை நோக்காதபடி செய்த வளையல்கள் அணிந்த கைகளையுடைய அந்த நப்பின்னை போலவே இந்த நப்பின்னை என்று அழைக்கபட்டவள் இருக்கிறாளே’,என்று கூறி வியந்தாள்.

குறிப்பு

 1. துழாய்-துளசி
 2. தண்டா-குறையாமல்
 3. வையம்-உலகம்
 4. வளை-வளையல்கள்
 5. முத்தை-முந்தை,முதல் இடம்
 6. நப்பின்னை-கண்ணனின் மனைவி.ராதை என்றும் கூறுவார்கள்.
 7. பெய்(த)-நிறைந்த
 8. கையாள்-கை உடையவள்
 9. ஆயர்-இடையர்,ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்கள்.
 10. ஆயவன்-பலராமன்
 11. விறல்-வெற்றி
 12. வண்-வளவிய,வளமுடைய

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>