மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

7.கண்ணனைப் பாடலாம்

aich7

அவர்தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்–முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணியென் றாள் ; 17

எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா–உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள் ; 18

இவ்வாறு அந்தக் கன்னிப் பெண்கள்,முதலில் சமநிலையில் நின்று,பின் வட்டமான வடிவில் நண்டின் வடிவத்தில் கைகளைக் கோத்துக் கொண்டு நின்று,கூத்தாட்டத்தின் தாள உறுப்புகளை ஆராய்ந்தார்கள்.அவர்களுள் மாயவன்(குரல்) என்ற பெயர் உடைய பூங்கொடி போன்றவள்,தமது கிளையாகிய பின்னை(துத்தம்) என்று பெயர் கொண்டவளைப் பார்த்து,“விசாலமான வீட்டின் பின்புறத்தில் இருந்த குருத்த மரத்தை வஞ்சத்தால் முறித்த நம் கண்ணனைப் பற்றி முல்லைப் பண் இசைத்துப் பாடுவோம்,வாருங்கள் ”,என்றாள்.

அவள் கூறியதைப் போலப் பின் முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்கினார்கள்.அப்படி பாடும் பொழுது,குரல் என்னும் பெயர் கொண்டவளின் ராகம் மந்தமாக இருக்க,இளி என்னும் பெயர் கொண்டவளின் ராகம் சமமாக இருக்க,துத்தம் என்னும் பெயர் கொண்டவளின் ராகம் சற்றே வலிமையாக முறைப்படி ஒலித்தன.

விளரி என்னும் பெயர் கொண்டவள் வலிமையில்லாத மந்தமான ராகமான துத்தம் என்பவளுக்குச் சுருதி பாடத் தொடங்கினாள்.அவளுக்கு நட்பான துத்த சுவரத்தையும்,பின்னை பிராட்டியையும் குறித்து நின்றவளும் அவளைத் தொடர்ந்து பாடத் தொடங்கினாள்.

குறிப்பு

 1. செந்நிலை-செம்மையான நிலை ,நேரான நிலை,சம நிலை
 2. மண்டிலம்-வட்டம்
 3. கடகம்-நண்டு
 4. கற்கடகக்கை-நண்டு உருவம் உண்டாகும் மாதிரி கையை மடக்குதல்.அதாவது நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலும் கோத்தல்.
 5. ஆடற்சீர்-ஆடுவதற்கான தாள உறுப்பு
 6. கொல்லை-வீட்டின் பின்புறம்
 7. புனம்-நிலம்
 8. தீம்-இனிய
 9. எனா-என்று கூறி
 10. குருந்து-குருந்த மரம்
 11. ஒசித்தான்-முறித்தான்
 12. பாடுதும்-பாடுவோம்
 13. வரன்முறை-மரபினால் வந்த முறை
 14. உரன்-வலி
 15. இலா-இல்லாத
 16. பின்றை-பின்னர்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>