மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

aichlogo

ஆய்ச்சியர் குரவை

 

8.கண்ணனின் அழகிய குழலோசை


aich8

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ !

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ !

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ ! 21

வஞ்சத்தால் வந்து நின்ற கன்றை,குறுந்தடியாகக் கொண்டு,விளாமரத்தின் கனிகளை உதிர்த்தவன் மாயவனான கண்ணன்.இன்று,அவன் நம் பசுக்கள் இருக்கும் ‘ஆன்’ என்னும் இடத்திற்குள் வந்தால்,அவன் தன் வாயால் ஊதும் கொன்றைக் குழலின் இனிய இசையைக் கேட்போம் அல்லவா தோழி!

பாம்பினைக் கயிறாகக் கொண்டு,பாற்கடலைக் கடைந்த கண்ணன்,இன்றைய பொழுது நம் பசுக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு வந்தார் என்றால்,அவர் இசைக்கும் அழகிய ஆம்பல் குழலோசையை நாமும் கேட்டுபோமா தோழி!

நமது கொல்லையைச் சார்ந்த இடத்தில்,முன்பு வஞ்சத்தால் வந்து நின்ற குருந்தமரத்தை முறித்தெறிந்தவன் கண்ணன்.நம் வழிபாட்டின் பயனால்,இன்று பகல் வேளையில் நம் பசுக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு அவன் வந்தால்,அவன் ஊதும் முல்லைக் குழலின் இனிய ஓசையை நாமும் கேட்போம் அல்லவா தோழி!

aich9

தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம் ;22

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம
அறுவை யொளித்தான் அயர அயரும
நறுமென் சாயல் முகமென் கோயாம் ;23

வஞ்சஞ் செய்தான் தொழுதனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம் ; 24

தையல் கலையும் வளையும் இழந்தே
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தாள் வடிவென் கோயாம் ; 25

யமுனைத் துறையில் கண்ணனுடன் விளையாடும் பின்னையின் அழகையும் நிறத்தையும் இனி நாம் பாடுவோம்….

ஒடிந்து போகுமோ எனப் பார்ப்பவர் எண்ணும் வகையில்,தன் மென்மையான இடையை அசைத்து அசைத்து நடந்து வருபவளின் ஆடையை ஒளித்து வைத்தக் கொண்ட கண்ணனின் அழகை புகழ்வோமா?

வெட்கத்தால் உடல் நடுங்கி மயங்கி நிற்கும் அழகிய மென்மையான சாயலுடைய அவளின் முகத்தோற்றத்தை எவ்வாறு நாம் புகழ்வோம் ?

கண்ணன்,யமுனை ஆற்றில் விளையாடும்போது வஞ்சித்துப் பின்னையின் நெஞ்சைக் கவர்ந்தான்.அவளின் உள்ளத்தின் அழகை நாம் எப்படிச் சொல்லுவது ? ‘நெஞ்சம் கவர்ந்தவளின் அழகையும் வளையல்களையும் ஒன்றாகக் கவர்ந்து நின்ற கண்ணனின் அழகுதான் இது!’,என்று கூறுவோமா?

அந்தப் பெண்,தன் வளையலையும்,ஆடையையும் அவன் வஞ்சத்தால் இழந்தாள்.தன் வெட்கத்தையும்,தன் கையால் முகத்தை மறைத்துக் கொண்ட அவள் முகத்தின் தன்மையைப் புகழ்வோமா! அவ்வாறு, கைகளால் முகத்தை மறைத்து நின்ற அழகில் மயங்கிக் காதலுற்று உழன்ற கண்ணனின் அழகை எப்படிப் புகழ்வது!!

குறிப்பு

 1. குணில்-குறுந்தடி
 2. மாயவன்-கண்ணன்
 3. ஆனுள்-பசுக்கள் இருக்கும் இடத்திற்குள் (ஆன்-பசுக்கள் இருக்குமிடம்)
 4. வருமேல்-வந்தால்
 5. தீங்குழல்-இனிய குழல் (தீம்-இனிய)
 6. அம்-அழகு
 7. கேளாமோ-கேட்போமா
 8. ஒசித்த-அழித்த
 9. எல்லை-பகற்பொழுது
 10. தொழுனை-யமுனை
 11. துறைவன்-நெய்தனிலத் தலைவன்.
 12. பின்னை-நப்பின்னை
 13. யாம்-நாம்
 14. பாடுகேம்-பாடுவோம்
 15. அணிநிறம்-அழகிய நிறம் (அணி-அழகு )
 16. இறும்-முரியும்
 17. நுடங்கி-அசைந்து
 18. அறுவை-தூய்மையான ஆடை
 19. என்கோ யாம்-என்று நாம் சொல்வோமா
 20. நிறை-இங்கு அழகு என்பதை குறிக்கும்
 21. அழுங்கி-இறங்கி
 22. மையல்-மயக்கம்
 23. கலை-ஆடை
 24. தையல்-பெண்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>