துன்ப மாலை
3.கோவலன் இறந்த செய்தி கேட்ட கண்ணகியின் நிலை
சொன்னது:
‘அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் 25
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே.
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே,
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!’
எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த் 30
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
‘எங்கணாஅ!’ என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;
‘அரசன் வாழும் அரண்மனையில் இருந்த அழகான சிலம்பை சத்தமே இல்லாமல் திருடிய கள்வன் இவன் தான் என்று கருதி,சத்தமாய் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த ஊர் காவலர்கள்,உன் கணவனான கோவலனைக் கொலை செய்து விட்டார்கள்!’ ,என்றாள்.
அவள் அப்படிச் சொல்லியதைக் கேட்ட கண்ணகி,துன்பம் தாங்காமல் பொங்கி எழுந்தாள்.கதிர்கள் பொழியும் திங்கள்,தன்னை சூழ்ந்துள்ள கரிய மேகங்களுடன் பெரிய நிலத்தின் மீது வீழ்வதைப் போல,தரையில் விழுந்தால்.சிவந்த கண்கள் மேலும் சிவக்கும்படி அழுதாள்.தன் கணவனை,”என் கண்ணா!நீ இப்போது என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கே இருக்கிறாய்?’,என்று புலம்பி அழைத்தபடி ஏங்கி மயங்கினாள்.
குறிப்பு
- கோயில்-தலைவனின் இல்லம்(கோ-அரசன்,தலைவன் இல்-இல்லம்)
- அணியார்-அழகு பொருந்திய (அணி-அழகு ஆர்-பொருந்திய )
- ஞெகிழம்-சிலம்பு
- குரை-ஒலி
- கழல்-முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி
- மாக்கள்-மக்கள்
- சேண்-பெரிய,உயரமான
- சிவப்ப-சிவக்க
- கேள்வன்-கணவன்
- மாழ்கு-மயங்கு
- எங்கணாஅ(எங்கணா)-என் கண்ணா
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in