புகார்க் காண்டம்-மங்கல வாழ்த்துப் பாடல் (எளிய விளக்கம்:பகுதி 3)

5.கண்ணகி,கோவலன் திருமணம்
(கண்ணகி கோவலன் திருமண நாள் அறிவித்தல்,திருமண சடங்குகள்)

marriage1

அவரை,
இருபெருங் குரவரும்,ஒருபெரு நாளால்,
மணஅணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.

அவ்வழி,   45
முரசுஇயம்பின;முருகுஅதிர்ந்தன;
முறைஎழுந்தன பணிலம்;வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன;
அகலுள்மங்கல அணிஎழுந்தது,
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து,
நீல விதானத்து,நித்திலப்பூம் பந்தர்க்கீழ்,
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் 50
சாலி ஒருமீன் தகையாளைக்,கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்பு என்னை!

கண்ணகிக்கும்,கோவலனுக்கும் நல்லதொரு திருநாளில் திருமணம் செய்திட பெற்றோர் முடிவு செய்தனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் அம்பாரி மேல் அழகிய அணிமணிகள் பூண்ட மகளிர் அமர்ந்து,புகார் நகரெங்கும் உள்ளவர்க்கு இந்தத் திருமணச் செய்தியினை அறிவித்தனர்.

திருமண நாளும் வந்தது.அவ்விடத்திலே முரசுகள் முழங்கின;மத்தளங்கள் அதிர்ந்தன;சங்குகள் முறையே ஒலி முழங்கின.அரசன் நகர்வலம் வருகையில் எழுகின்ற எண்ணற்ற வெண்கொற்றக் குடைகள் போல,இந்த மனவிழாவிலும் ஊர்வலமாக எழுந்தன.புகார் நகரெங்கும் விழாக்கோலம் பூண்டது.

மாலை தொங்கிய வைரமணித்தூண் மண்டபத்தில்,நீலவிதானம் கட்டிய அழகிய முத்துப் பந்தலின் கீழ் மணமக்கள் அமர்ந்தார்கள்.வானத்தில் தவழ்கின்ற நிலவு,ரோகிணி நட்சத்திரத்தை சேரும் நன்னாளில்,வயதுமுதிர்ந்த அந்தணன் வேதநூல் முறையின்படி திருமணச் சடங்குகளைச் செய்தார்.வானத்தில் இருகின்ற அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை கோவலன் திருமணம் புரிந்திட,மணமக்கள் தீயினை வலம் வந்த அந்தக் காட்சியைக் கண்டோர் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும்.

குறிப்பு
————

1.குரவர்-தாய்,தந்தை
2.பணிலம்-சங்கு
3.நித்தில-முத்து

6.அமளி ஏற்றினர்
(மகளிர்,மணமக்களை வாழ்த்தி படுக்கையில் ஏற்றினர்)

kaipidithal
விரையினர், மலரினர்,விளங்கு மேனியர்,
உரையினர்,பாட்டினர்,ஒசிந்த நோக்கினர், 55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர்,கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர்,முகிழ்த்த மூரலர்,
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60

‘காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக!’ எனஏத்திச் சின்மலர் கொடுதூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார்

நறுமண விரைகளுடன் சிலர்;நறுமலர்களுடன் சிலர்;அழகாகப் புனைந்துகொண்டு சிலர்;பேசிக்கொண்டு சிலர்;பாடிக்கொண்டு சிலர்;வெட்கத்தால் ஓரக்கண் பார்வை பார்த்தவாறு சிலர்;இவ்வாறு மகளிர் பலரும் கூடி நின்றனர்.சிலர் சாந்தினை கையில் ஏந்தி வந்தனர்;மனப்புகையினோடு வந்தனர் சிலர்;மலர்மாலையோடு வந்தனர் சிலர்.இப்படியாக மென்மையான இளமுலை கொண்ட மாந்தர்கள் பலரும் திரண்டு வந்தனர்.அவர்களை அடுத்து,நறுமணப் பொடி இடித்துக் கொண்டு வந்தனர் சிலர்;கையிலே விளக்குடன் சிலர்;நல்ல அணிகலன்களோடு சிலர்;முளைக்குடமுடன் சிலரும் வந்தனர்.

மலர் சூடிய தழைத்த கூந்தல் உடைய பெண்கள் பலரும்,அழகிய பொற்கொடிகள் போல,மெல்ல மெல்ல அசைந்து வந்து,

‘கண்ணகி தன் காதலனாகிய கோவலனை கண்ணிலும் மனத்திலும்
பிரியாமல் வாழ வேண்டும்!

கோவலன்,தன் காதலியாகிய கண்ணகியை இறுக்கி அணைத்த கைகள்
விலகாமல் வாழ வேண்டும்!

மணமக்கள் எந்த தீங்குமின்றி,
நெடுங்காலம் வாழ வேண்டும்! ‘,

என்று பொன்பொழிகளுடன்,பூமலர்கள் தூவி வாழ்த்தினர்.அதன் பிறகு அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மலர் நிறைந்த படுக்கையில் ஏற்றி மகிழ்ந்தனர்.

குறிப்பு
————
1.ஒசிந்த நோக்கினர்-ஓரக்கண் பார்வை
2.சுண்ணம்-பொடி
3.அமளி-படுக்கை

7.சோழனை வாழ்த்தினர்
(பூம்புகாரை ஆட்சி செய்த சோழனை வாழ்த்தும் பகுதி )

karikalan

-தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை 65

உப்பாலைப் பொன்கோட்டு உழையதா,எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே. 69

போரில் மேம்பட்டு விளங்கும் கோபம் மிகுந்த வேலினை உடையவன் சோழன்.தன் வெற்றிக்கு அறிகுறியாய் இமயத்தின் இப்பக்கம்,அவனுடைய புலிக்கொடியை பறக்கச் செய்தவன்.அவன் பொன் முடிகளையுடைய இமயத்தின் அப்பாலான வடபக்கத்திலும் சென்று,புலிச்சின்னத்தைப் பொறித்தவன்.இவ்வாறு,இந்நாட்டின் எப்பக்கமும் தான் ஒருவனாய்,தன் சிறந்த ஆட்சிச் சக்கரம் எவ்விடத்தும் செல்லுமாறு செய்த அவன் உயர்க,எனத் தம் மன்னனையும்,அதன்பின் அம்மங்கல மகளிர்கள் வாழ்த்தினர் .

குறிப்பு
————
1.செம்பியன்-சோழன்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>