மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

vklogo

வழக்குரை காதை

 

 

 

2.அரசியின் வருகை

vk2

ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்:

கூனும், குறளும்,ஊமும்,கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

கண்ணாடியும்,கலன்களும் ஏந்திய சிலர் வந்தார்கள்.ஒளிவீசும் அணிகலன்கள் தாங்கிய நூல் இழைப் போன்ற இடையையுடைய அழகிய பெண்கள் சிலர் வந்தனர்.புதிய நூலாடையும்,பட்டாடையம் ஏந்தியவர்கள் சிலர் வந்தார்கள்.கொழுந்து வெற்றிலை செப்பினை ஏந்தியபடி சிலர் வந்தனர்.வண்ணப்பொடிகள்,சுண்ணம்,கத்தூரிக் குழம்பு ஆகியவற்றை ஏந்திய சிலரும் வந்தார்கள்.இரண்டிரண்டு பூக்களால் கோக்கப்பட்ட கண்ணி மாலையும்,நெருக்கமாகக் கட்டப்பட்ட பிணையல் எனும் பூமாலையும்,சாமரையும்,அகிற்புகை எனும் நறுமணப் புகையும் எடுத்துக் கொண்டு சிலர் வந்தனர்.கூன் விழுந்தவர்கள்,உயரத்தில் குள்ளமாக இருந்தவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் போன்றவர்களுடன்,பணி புரியும் பெண்கள் புடைசூழ்ந்து அரசியுடன் வந்தார்கள்.

நரை கலந்த கூந்தலுடைய வயதான பெண்கள் பலரும்,”கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் காக்கும் பாண்டிய மன்னனின் பெருந்தேவி வாழ்க !”,எனப் புகழ்மொழிகளால் வாழ்த்தி நடந்து வந்தார்கள்.சேவை புரியும் பெண்களும் ,காவல் புரியும் மகளிரும்,அடிதோறும் வாழ்த்தி நின்றனர்.

இவ்வாறு தன் பரிவாரங்களுடன் வந்த கோப்பெருந்தேவி பாண்டியனிடம் சென்றாள்.தன் கெட்ட கனவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும்,தன் நாயகனான பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.திருமகளான லட்சுமி விரும்பும் மார்பினை உடைய பாண்டிய மன்னன்,சிங்க உருவம் தாங்கிய படுக்கையில் வீற்றிருந்தவாறு அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

குறிப்பு

 1. ஆடி-கண்ணாடி.
 2. கோடி-புதிய ஆடை
 3. அவிர்தல்-பிரகாசித்தல்
 4. இழையினர்-நூல் இழை போன்ற இடையுடையப் பெண்
 5. திரையல்-வெற்றிலை
 6. மான்மதம்-கஸ்தூரி,கத்தூரி
 7. கண்ணி-இரண்டிரண்டு பூக்களால் கோக்கப்பட்ட மாலை
 8. பிணையல்-நெருக்கமாகக் கட்டப்பட்ட பூமாலை
 9. கவரி-சாமரை
 10. கூனம்-கூனர்,கூன் விழுந்தவர்கள்
 11. குறளர்-குள்ளர்,குள்ளமானவர்கள்
 12. ஊமம்-ஊமர்,ஊமை
 13. செறிந்து-நெருங்கி
 14. விரைஇய-கலந்த
 15. ஈண்டு நீர்-கடல்
 16. ஆயம்-சுற்றம்,நண்பர்கள்
 17. அடியீடு-அடி எடுத்து வைக்கும் பொழுது
 18. ஏத்த-போற்ற
 19. பரசி-புகழ்ந்து
 20. திறம்-தன்மை
 21. அரிமான்-சிங்கம்
 22. அமளி-படுக்கை
 23. மிசை-மீது
 24. திரு-திருமகள்
 25. வீழ்-விரும்பும்
 26. தென்னர்-பாண்டியர்
 27. கோ-தலைவன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>