வழக்குரை காதை
3.கண்ணகி அரண்மனை வாசல் அடைந்தாள்
‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! 25
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-
வாயிலோன்,‘வாழி!எம் கொற்கை வேந்தே,வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ,வாழி! 30
செழிய,வாழி! தென்னவ,வாழி!
பழியொடு படராப் பஞ்சவ,வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்; 35
அறுவர்க்கு இளைய நங்கை,இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு,சூர் உடைக்
கானகம் உகந்த காளி,தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும்,அல்லள்;
செற்றனள் போலும்;செயிர்த்தனள் போலும்; 40
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-
கோப்பெருந்தேவி மன்னரிடம் தான் கண்ட கெட்டக் கனவைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்த சமயம்,கண்ணகி அரண்மனை வாசலை அடைந்தாள்.
வந்தவள் அங்கு நின்றிருந்த காவலனை நோக்கி,
“வாசலில் காவல் காப்பவனே! வாசலில் காவல் காப்பவனே! அறிவு அற்றுப் போய்,அறநினைவு இல்லாத,அரச நீதி தவறிய பாண்டிய மன்னனின் அரண்மனை வாசலில் காவல் காப்பவனே !
இணையற்ற பரல்களை உடைய அரிய ஜோடிச் சிலம்புகளுள் ஒன்றை மட்டும் கையில் ஏந்திய,கணவனை இழந்த பெண் ஒருத்தி நம் அரண்மனை வெளி வாசலில் வந்து நிற்கிறாள் என உன் மன்னனிடம் போய் சொல்லு’,என்று கூறினாள்.
”எங்கள் கொற்கை நகரத்தின் அரசே வாழ்க !தெற்கு திசையின் பொதிகை மலைக்கு உரிமை உடையவனே வாழ்க ! செழியனே வாழ்க ! தென்னவனே வாழ்க !பழிச்சொற்கள் தரும் காரியங்கள் செய்யாத பஞ்சவனே வாழி!
பொங்கி வழிகின்ற இரத்தம் அடங்காத,வெட்டப்பட்டதால் புண்ணாக இருக்கின்ற மகிடாசுரனின் பின்கழுத்தோடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தில் நின்று,தன் அகன்ற கைகளில் வெற்றிவேல் ஏந்திய இளம் பூங்கொடியான கொற்றவை போல் இருக்கிறாள்.ஆனால் கொற்றவை அல்ல!
ஏழு கன்னியருள் இளையவளான பிடாரி போல் இருக்கிறாள்,ஆனால் அவள் பிடாரியும் அல்ல!
சிவனை நடமாடச் செய்து,அந்த ஆடலைக் கண்ட பத்ரகாளி போல் இருக்கிறாள்,ஆனால் அவள் பத்ரகாளியும் அல்ல!
பயமுறுத்தும் காட்டை விரும்பி வாழும் காளி போல் இருக்கிறாள்,ஆனால் அவள் காளியும் அல்ல!
தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைக் கிழித்த துர்க்கை போல் இருக்கிறாள்,ஆனால் அவள் துர்க்கையும் அல்ல!
தன் உள்ளத்தில் பழியுணர்ச்சி கொண்டவள் போல மிகுந்த கோபத்துடன் தோன்றுகிறாள்.பொன்னால் செய்த,அழகிய வேலைப்பாடமைந்த சிலம்பு ஒன்றைக் கையில் ஏந்தியவளாக இருக்கிறாள் !கணவனை இழந்தவளாம் ! நம் அரண்மனை வாசலில் வந்து நிற்கிறாள்.’,என்று மன்னனிடம் போய் தெரிவித்தான் காவலன்.
குறிப்பு
- வாயி லோயே-வாசலில் காவல் காப்பவனே
- அறிவறை போகிய-அறிவு அறவே இல்லாத (போகிய-இல்லாத)
- அறைபோதல்-கீழறுத்தல்,கெட்டழிதல்
- பொறியறு-அறம் அற்ற (பொறி-அறம்)
- இறைமுறை-அரசமுறை
- இணையரி-இணையான அரிதான(அரி-அரிது)
- கையள்-கை உடையவள்
- கொற்கை-சிறந்த முத்துகள் கிடைக்கும் பாண்டிய நாட்டின் கடற்கரைப் பட்டினம்
- தென்னம்-தெற்கு
- பொருப்பு-மலை
- தென்னவன்-பாண்டியன்
- செழிய-செழியன்
- பஞ்சவன்-பாண்டியன்
- அடர்த்து-நெருங்கிய
- குருதி-இரத்தம்
- பசுந்துணி-புதிய புண்
- பிடர்த்தலை-புறங்கழுத்து
- மடக்கொடி-இளம் பூங்கொடி
- தடக்கை-பெரிய கை
- அறுவர்க்கு-ஆறு பேர்களுக்கு
- அணங்கு-பத்திரகாளி
- சூர்-அச்சம்
- கானகம்-காடு
- தாருகன்-அரக்கன்
- செற்றம்-கறுவு,பகை,கோபம்
- செயிர்ப்பு-வெகுளி,சினம்,பகை
- பேர்-பெரிய,அகன்ற
- உரம்-மார்பு
- கடையகம்-வாசல் முன்
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in
நல்ல விளக்கம். இலங்கை வானொலியில் நெல்லை கண்ணன் உரை கேட்டேன். உங்கள் விளக்கம் பிரசாதம். நன்றி.
நன்றி -மீனாட்சி தேவராஜ்