மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

vklogo

வழக்குரை காதை

 

 

 

4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில்

vk4

‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என-

வாயில் வந்து, கோயில் காட்ட, 45
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய்!
யாரையோ நீ? மடக்கொடியோய்!’ என-

‘தேரா மன்னா!செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, 50
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர், 55
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி,ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் 60
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

“நீ விவரித்த அந்தப் பெண் இங்கே வரட்டும்,நீ அவளை அழைத்து வா”,என்று மன்னன் காவலரிடம் கூறினான்.

காவலன் திரும்பி வந்து,கண்ணகிக்கு அரண்மனையில் மன்னன் இருக்கும் இடத்தைக் காட்டினான்.கண்ணகியும் மன்னனை நெருங்கி சென்றாள்.கண்ணகியைப் பார்த்து மன்னன்,“நீர் ஒழுகும் கண்களுடன் என் முன்னே வந்திருப்பவளே !இளம் கொடி போன்றவளே,நீ யார்?”என்று கேட்டான்.

“ஆராய்ந்து பார்க்கும் திறமை இல்லாத மன்னவனே!உன்னிடம் நான் சொல்லுவதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.

இகழமுடியாத சிறப்பு வாய்ந்த தேவர்களும் வியக்குமாறு,புறா ஒன்றுக்கு நேர்ந்த துன்பம் போக்கிய சிபி மன்னனும்,அவன் மட்டுமில்லை,தன் அரண்மனை வாசலில் கட்டியுள்ள மணியின் நடுவில் உள்ள நா அசைய,அந்த ஒலியை எழுப்பிய பசுவின் கண்களில் இருந்து வழிந்த நீர் தன் நெஞ்சைச் சுட்டதால்,பெறுவதற்கு அரிய தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழனும்,ஆட்சி செய்த பெரும்புகழ் வாய்ந்த பூம்புகார் எனது ஊராகும்.

அந்த ஊரில்,குற்றமற்ற சிறப்புடைய புகழ் பெற்ற,பெருமை வாய்ந்த பெரிய குடியைச் சேர்ந்த மாசாத்துவான் என்னும் வணிகனின் மகனாய் பிறந்து,முன் செய்த வினை துரத்தியதால்,வீரக்கழலைக் கட்டிய மன்னனே!பொருள் ஈட்டி வாழ விரும்பி,உன் மதுரை நகரை அடைந்து என் காற்சிலம்பை விற்க வந்தபோது உன்னால் கொல்லப்பட்ட கோவலனின் மனைவி நான்!

என் பெயர் கண்ணகி ” என்று கோபத்துடன் கூறினாள்.

குறிப்பு

 1. ஈங்கு-இங்கு
 2. கோயில்-மன்னனின் இல்லம் அதாவது அரண்மனை (கோ-தலைவன் இல்-இல்லம்)
 3. குறுகினள்-நெருங்கினாள்
 4. சென்றுழி-சென்ற வழி
 5. வார்-ஒழுகு
 6. மடக்கொடி-இளங்கொடி
 7. தேரா-ஆராயாத
 8. செப்புவது-சொல்லத் தகுவது (செப்பு-சொல்)
 9. எள்ளறு-இகழ்ச்சி இல்லாத (எள்-இகழ்ச்சி அறு-இல்லாத)
 10. இமையவர்-தேவர்
 11. வியப்ப-வியக்க
 12. புள்-பறவை
 13. கடைமணி-அரண்மனை வாயில்மணி
 14. புன்கண்–துன்பம்
 15. ஆ-பசு
 16. உகு-சிந்து,சொரி
 17. ஆழி-தேர்ச்சக்கரம்
 18. பதி-ஊர்
 19. ஏசா-பழியில்லா
 20. இசை-கொடையால் வரும் புகழ்
 21. ஊழ்வினை-முன் செய்த வினை
 22. சூழ்-சுற்றி
 23. கழல்-ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
 24. பகர்தல்-விற்றல்,கொடுத்தல்
 25. அறும்பெறல்-பெறுதற்கரியப் பெற்ற
 26. பெருங்குடி-பெரிய குடி,வணிகர் பிரிவு மூன்றில் ஒன்று

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

 1. suryagnaneswar says:

  I thank you very much to renew the domain as soon as I informed you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>