மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)

vm   வஞ்சின மாலை

vm4

-“விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே”, என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே, எண்ணிலேன் 25
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி; நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் 30
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய்,முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்;

‘எவ்வளவு சிறந்து விளங்கினாலும் பெண்கள் அறிவு என்பது அறியாமை உடையது’, என நுண்மையான அறிவு உடைய மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணரவில்லை.

“நடக்கப் போகும் நிகழ்வுகளை பற்றி பெரிதும் யோசிக்காமல்,என் சிறுவயது தோழியுடன் வண்டலாடும்போது,“ஒளிமயமான வளையல் அணிந்தவளே!நான் ஒரு மகளும்,நீ ஒரு மகனும் பெற்றால் உன் மகனே என் மகளுக்குக் கணவன் ஆகவேண்டும்”,என்று தோழியிடம் கூறினேன்.அன்று நான் கூறிய சொற்கள் உண்மையென எண்ணி,என் உறுதிமொழியை நினைவுபடுத்தி அவள் பெண் கேட்டு வந்தாள்.அதைக் கேட்டதும் துன்பத்தால்,நான் மன நோய்க்கு ஆளாயிருக்கிறேன்.நான் செல்வம் அனைத்தும் இழந்தவள் போல் தோன்றுகிறது!”,என்று தன் தந்தையிடம் தாய் கூறியதை மகள் கேட்டாள்.

தாயின் சத்தியத்தை நிறைவேற்றுவதற்காகத் தானாகவே முன்வந்து புதுப் புடவையை உடுத்திக்கொண்டு,கூந்தலை சீவி முடித்துக் கொண்டு, மணப்பெண்ணாய் உருவெடுத்தாள்.தன் தாய் கூறிய வார்த்தைகளைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அவனையே மணந்தாள்,பொன்னால் செய்த பொம்மை போலப் பொலிவுடன் விளங்கிய அந்தப் பெண் !

குறிப்பு

 1. விழுமிய-வளமான
 2. பேதைமை-அறியாமை
 3. நுண்ணறிவினோர்-நுண்ணறிவினோர்-நுண்மையான அறிவு உடையவர்கள்
 4. ஒண்டொடி-ஒளிவீசும் வளையலை அணிந்த பெண்(ஒண்- பிரகாசம் தொடி-வளையல் )
 5. பெறில்-பெற்றாள்
 6. கொழுநன்-கணவன்
 7. யான்-நான்
 8. விழுமம்-துன்பம்
 9. திருவிலேற்கு-செல்வம் இல்லாத (திரு-செல்வம்)
 10. கோடி-புதுத் துணி
 11. கலிங்கம்-புடவை
 12. குழல்-கூந்தல்
 13. ஆடகம்-பொன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>