மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

apklogoஅழற்படு காதை

2.அனைவரும் கலங்கினார்கள்apk2

ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர்,
காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு
கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்

காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்;
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15

புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ எனும் அமைச்சர் குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓலையில் எழுதுபவர்கள்,அரசன் தங்கி இருக்கும் அரண்மனையில் வேலை செய்பவர்கள்,சின்ன வளையல்கள் அணிந்த பணிப் பெண்கள் ஆகிய அனைவரும் அதிர்ச்சியில் பேச்சு வரமால் ஓவியமாய் வரைந்தவர்களைப் போல என்ன செய்வது என்று அறியாமல் நின்றார்கள்.

யானையைக்கட்டுபடுத்த உதவும் அங்குசம் உடைய ‘காழோர்’ எனும் யானைப்பாகர்,’வாதுவர்’ எனும் குதிரை ஓட்டுபவர்,கடினமான தேரை ஓட்டிச் செல்லும் தேர்ப்பாகர்,வீரவாள் ஏந்தும் வீரர் ஆகியோர் அரசரின் அரண்மனை வாசலில் தீயைக் கண்டதும் திகைத்து,அங்கிருந்து விரைந்து சென்றார்கள்.

குறிப்பு

 1. ஆசான்-புரோகிதர்
 2. பெருங்கணி-தலைமைச் சோதிடன்
 3. அறக்களத்து அந்தணர்-அறக்களத்தின் தலைவன்
 4. காவிதி-வரியிலார்,வரி விதிப்பவர்கள்
 5. மந்திரக் கணக்கர்-மந்திர ஓலை எழுதுபவர்,அமைச்சர் குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓலையில் எழுதுபவர்.
 6. கோயில்-அரசனின் இல்லமான அரண்மனை (கோ-அரசன் இல்-இல்லம்)
 7. மாக்கள்-மக்கள்
 8. குறுந்தொடி-சின்ன வளையல் (தொடி-வளையல்)
 9. அவிந்து-அடங்கி
 10. காழோர்-அங்குசம் உடைய யானைப்பாகர்
  (காழ்-குத்துக்கோல்,அங்குசம்,யானையைக்கட்டுபடுத்த உதவும் பாகனின் இரும்பிலானக் கருவி )
 11. வாதுவர்-குதிரை பாகர்
 12. கடுந்தேர்-கடுமையான தேர்(கடு-கடுமை)
 13. ஊருநர்-ஓட்டுபவர்
 14. வாய்-வாய்ந்த
 15. மறவர்-வீரர்
 16. கோ மகன்-மன்னன்
 17. கொற்ற(ம்)-வெற்றி
 18. வாயில்-வாசல்
 19. மிடை-நெருக்கம்

3.ஆதிப் பூதம்

நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு, 35
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்

பசுமையான ஒளி வீசும் ‘நித்திலம்’ எனும் முத்து வடங்கள் அணிந்த,’ஆகவனீயம்,காருகபத்தியம்,தக்கிணாக்கினி’,என்ற மூன்று வகையான தீ வளர்த்து யாகம் செய்வதை காக்கும் முத்தீ வாழ்க்கையை உரிய முறையில் வழுவாமல் பேணி வந்த ஆதிப்பூதத்தின் அதிபதி கடவுளும் வெளியேறினார்.

குறிப்பு

 1. நித்திலம்-முத்து
 2. பைம்-பசுமை
 3. பூண்-பூண்டு
 4. அவிர்-பிரகாசம்
 5. வழாஅ-வழுவாத
 6. முத்தீ வாழ்க்கை-ஆகவனீயம்,காருகபத்தியம்,தக்கிணாக்கினி எனும் மூன்று விதமான தீ வளர்த்து யாகம் செய்வதைக் காக்கும் வாழ்க்கை.

  ஆகவனீயம்-தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப்படும் தீ.
  தட்சிணாக்கினி-தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவில் குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.
  காருகபத்தியம்-ஆகவனீயத்தை அடுத்து,வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>