மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

apklogoஅழற்படு காதை

4.அரசு பூதம்
apk3

பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்;
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்,
முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி
உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு,
எனவிவை பிடித்த கையின னாகி. 55
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி,
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்

கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு,
நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் 60

சிவந்த பவளம் போல ஒளிவீசும் மேனியுடையவன்,ஆழமான கடல் சூழ்ந்த இந்த உலகை ஆட்சி செய்து வருபவன்,தனது இனிதான வெற்றி முரசுடன்,வெண்குடை,கவரி,நீளமான கொடி,புகழ் வாய்ந்த அங்குசம்,வடித்த வேல்,குதிரையை அடக்கும் கயிறு,ஆகியவற்றைக் கையில் ஏந்தியவன்.அளவிட முடியாத சிறப்புடைய பகை அரசர்களை எல்லாம் புறம் கொண்டு ஓடச் செய்து,மண் உலகம் முழுவதையும் தன் கையில் கொண்டு, செங்கோல் செலுத்தி வந்தவன்.கொடிய தொழில்களை எல்லாம் நீக்கி,நீதியை எங்கும் நிலைநிறுத்தி,தன் புகழ் என்றும் நிலைத்து நிற்குமாறு செய்தவன்.

இவ்வாறு நில உலகையெல்லாம் காத்து வருகின்ற,பலரும் புகழ்ந்து பேசும் சிறப்பையுடைய திருமாலை போன்ற,அரசு பூதமாகிய அரிய ஆற்றல்களை உடைய கடவுளும் மதுரையை விட்டு வெளியேறினார்.

குறிப்பு

 1. செஞ்சுடர்-சிவப்பு நிற ஒளிக்கதிர்
 2. ஞாலம்-உலகம்
 3. உரைசால்-புகழ்
 4. அகம்-உட்புறம்
 5. ஓச்சி-செலுத்தி
 6. கடிந்து-விலக்கி
 7. கொற்றம்-அரச நீதி
 8. நால்நிலம்-நிலவுலகம்
 9. புரக்கும்-காக்கும்
 10. அரும்-அரிய
 11. திறல்-வலிமை
 12. வடிகயிறு-குதிரையை அடக்கும் கயிறு
 13. நடும்புகழ்-அழியாப்புகழ்
 14. அரைசு-அரசு

5.வாணிக பூதம்

செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்,
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி,
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;

உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்

சிவந்த பசும்பொன் போன்ற மேனி வண்ணத்தையும்,பெரும் சிறப்பை உடைய வெற்றிவேல் மன்னனின் அரசமுடி ஒன்றை தவிர மற்றவற்றை எல்லாம் அணிந்தவனும்,வாணிக மரபினால் இந்த உலகை காத்துக் கலப்பையும்,தராசும் கையில் ஏந்தி விளங்குபவனும்,விவசாயமும் செய்து உலகிற்கு உதவும் பழுதற்ற வாழ்க்கையை உடையவனும்,ஒளியுடைய தலையின் மீது இளம்பிறையைச் சூடிய இறைவனின் திருமேனியைப் போன்ற ஒப்பற்ற வடிவம் உடையவனுமான,வாணிக பூதம் எனும் மிகப் பெரிய கடவுளும் மதுரையை விட்டு வெளியேறினார்.

குறிப்பு

 1. செந்நிறம்-சிவப்பு நிறம்
 2. புரை-போன்ற
 3. மறவேல்-வீரம் பொருந்திய வேல் (மறம்-வீரம்)
 4. அரைசு-அரசு
 5. நீள்-பெரிய
 6. ஓம்பி-காத்து
 7. நாஞ்சில்-கலப்பை
 8. துலாம்-துலாக்கோல்,தராசு
 9. கிளர்-மேலெழுதல்
 10. சென்னி-தலை
 11. வியன்-மிகுந்த,அகன்ற
 12. கிளர்-விளங்கும்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>