6.வேளாண் பூதம்
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்
கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக்
கழுவிய மணி போன்ற பிரகாசமான அழகு மேனியும்,ஒளி வண்ணமான கருமை நிறம் கொண்ட உடையும்,விவசாயத்தில் வெற்றி பெரும் வண்ணம் அதற்குத் தேவையான கருவிகளும் பண்பும் பொருந்தி,பாடுபவர்கள் புகழ்ந்து பாடும்படி பல அறத்துறைகளிலும் அதன் கடைசிவரை சென்று,ஆரவாரம் மிகுந்த கூடல் நகரான மதுரையில் பலி பெறுகின்ற பூதங்களின் தலைவனான வேளாண் பூதமும் வெளியேறினார்.
குறிப்பு
- புரையும்-போன்ற
- மண்ணுதல்-கழுவுதல்
- திருமணி-அழகான மணி (திரு-அழகு)
- ஒள்(ளிய)-ஒளி பொருந்திய
- காழகம்-கருமை
- கலிகெழு-ஆரவாரம் பொருந்திய(கலி-ஆரவாரம்,கெழு-பொருந்திய)
- கூடல்-மதுரை
- ஆடல்-வெல்லுதல்
- போகி-சென்று
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின்
யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்
“பாண்டிய மன்னன்,நீதி தவறிய காலத்தில்,மதுரையை நெருப்பு உண்ணும் என்று எங்களுக்கு முன்பே தெரியும்.அதனால் நாங்கள் இந்த இடத்தை விட்டு போய் விடுவது இயல்பு அல்லவா ?”,என்று தன் மார்பின் மூலம் வெற்றி கண்ட நங்கையான கண்ணகியின் முன்னர்,நால் வகையான பூதங்களும்,வேறு இடங்களை நோக்கி வெளியேறி சென்று விட்டார்கள்.
குறிப்பு
- கோ-அரசன்
- திறன்-செய்கை
- கொங்கை-மார்பு
- கொற்றம்-வெற்றி
- பால்-பிரிவு
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in