10.காதலர்
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்,
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம்,பரிந்தன பரந்த
தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் 125
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்
சந்தனம் தடவிய இளமையான நிமிர்ந்த அழகிய முலைகளையும்,கருமையான பெரிய கண்களையும் உடைய பெண்கள்,தங்கள் காதலர்களுடன் கூடி இருந்தார்கள்.செப்பாலான பூந்தொட்டிகளில் இதழ் விரித்த பூக்களின் நல்ல மணம் கமழும் அவர்களின் கருமையான கூந்தலில் சூடிய மாலைகளில் இருந்து உதிர்த்த பூந்தாதுகளும்,குங்குமக் குழம்பு பூசிய மார்பில் உள்ள முத்தாரமும் உதிர்ந்து,செயலற்று தூய மென்மையான படுக்கையில் பரவிக் கிடந்தன.அதில் தன்னை நெருங்கிய துணைவனின் அழகைக் கூடப் பார்க்க முடியாமல்,காமம் எனும் கள்ளுண்டு ஆடுவதையும் மறந்து அவர்கள் தீயில் மயங்கி கிடந்தார்கள்.
குறிப்பு
- சாந்தம்-சந்தனம்
- வனம்-அழகு
- தடங்கண்ணார்-பெரிய கண்கள் உடையவர் (தடம்-பெரிய)
- செப்பு-மலரும் அரும்புகள் வைக்கும் பூஞ்செப்பு
- பொதி-நிறைந்த
- நறுவிரை-நறுமணம் (விரை-மணம்)
- பூந்துகள்-பூந்தாது
- பிணையல்-மாலை
- நாறிரு-நறுமணம் தங்கிய (நாறு-மணம் இரு-தங்கு)
- முச்சி-தலையுச்சி, கொண்டை
- துறுமலர்-நெருங்கிய மலர் (துறு-நெருங்கிய)
- கொங்கை-மார்பு முலை
- முன்றில்-முற்றம்
- பைங்காழ்-பைங்காழ்-பசுமையான முத்து வடம் (பைம்-பசுமை காழ்-வடம்)
- பரிந்தன-சிந்தி,அவிழ்ந்து
- தூ-தூய
- மென்-மெல்லிய
- சேக்கை-படுக்கை
- துனிப்பதம்-நெருங்கிய காதலன் அழகு (துனி-நெருங்கிய பதம்-அழகு)
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in