மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

apklogoஅழற்படு காதை

13.நடனமாடும் பெண்களின் வருத்தம்

apk8

எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற,
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்,
தண்ணுமை முழவம்,தாழ்தரு தீங்குழல், 140
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு,
‘எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ?
இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145
ஊர்தீ யூட்டிய ஒருமகள் ‘,என்ன

எட்டில் நான்கு மடங்கு முப்பத்திரண்டு ஆகும்.அந்த முப்பத்திரண்டில் இரெண்டு மடங்கான அறுபத்து நான்கு வகையான பெரிய கலைகளையும் பயின்று,பண்களின் இயல்புகள் நிறைந்த,இசைஞானம் உடைய பெண்கள் இருந்த வீதியிலும் நெருப்புப் பற்றிக் கொண்டது

மத்தளம்,முரசு,தாழ்ந்த ஒலியோடு விளங்கும் இனிய குழல் ஆகியவற்றுடன் பண்ணின் வகைகளை இசைக்கும் பண்ணுதல் நிரம்பிய யாழிசையையும்,ஆடும் அரங்கத்தையும் அவர்கள் இழந்தார்கள்.

‘எந்த நாட்டைச் சேர்ந்தவள் இவள் ?யார் பெற்ற மகளோ இவள் ?இந்த நாட்டில்,இந்த ஊரில் தன் கணவனை இழந்து,தெளிவில்லாத மன்னனைச் சிலம்பினால் வென்று,இந்த ஊருக்கு தீ மூட்டிய இந்தப் பெண் யார் ?’,என நடனமாடும் பெண்கள் அஞ்சி வியந்தார்கள்.

குறிப்பு

 1. எண்ணான்கு-முப்பத்திரண்டு(எண்-எட்டு )
 2. இரட்டி-இரு மடங்கு
 3. இருங்கலை-பெரிய கலை (இரு-பெரிய)
 4. மடந்தையர்-பெண்கள்
 5. பயங்கெழு-பயன் மிக்க ( பயம்-பயன்,பலன் கெழு-பொருந்திய,மிக்க )
 6. தண்ணுமை-மத்தளம்
 7. முழவம்-முரசு
 8. தாழ்தரு தீங்குழல்-தாழ்ந்த ஒலியோடு விளங்கும் இனிய குழல் (தீம்-இனிய)
 9. கிளை-வகை
 10. பயிரும்-இசைக்கும் (பயிர்தல்-இசைத்தல்)
 11. தேரா-ஆராயாத

14.மாலை ஓய்ந்தது

அந்தி விழவும் ஆரண ஓதையும்,
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்,
மனைவிளக் குறுத்தலும்,மாலை அயர்தலும்,
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர் 150

மாலைப் பொழுதில் நடைபெறும் விழாக்களும்,வேதங்களை ஓதுகின்ற ஒலியும்,சிவந்த தீயில் ஓமம் வளர்தலும்,கோயில்களில் தெய்வங்களை போற்றும் வழிபாடுகளும்,மாலையில் வீட்டின் முன் விளக்கு ஏற்றுவதும்,மாலை நேரத்தில் விளையாடி சோர்வதும்,மாலையில் முழங்கும் முரசொலியும்,ஆகிய எல்லாம் மதுரையில் அன்று நிகழாமல் அழிந்தது.

குறிப்பு

 1. அந்தி விழவு-மாலை விழா (அந்தி-மாலை விழவு-விழா)
 2. ஆரணம்-வேதம்
 3. ஓதை-முழக்கம்
 4. வேட்டல்-வேள்வி செய்தல்,ஓமம் வளர்த்தல்
 5. பரவல்-வாழ்த்து
 6. விளக்குறுத்தல்-விளக்கு ஏற்றுதல்(உறுத்தல்-அதிகரித்தல்,ஏற்றுதல்)
 7. அயர்தல்-சோர்வு

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>