2.உனக்குத் தெரியுமா?
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோ?’ என 20
வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே !நீ யார் ?என்னுடைய தாங்க முடியாத துன்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”,என மதுராபதித் தெய்வத்தை நோக்கி கேட்டாள் கண்ணகி .
குறிப்பு
- வயின்-பக்கம்
- கோட்டி-வளைத்து (கோட்டுதல்-வளைத்தல்)
- ஆர்-பொறுத்தற்கரிய
- அஞர்-துயரம்
- எவ்வம்-துன்பம்
- அறிதியோ-அறிவாயோ
3.கேள் பெண்ணே!
‘ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணி-இழாஅய்!
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்;
கட்டுரை யாட்டியேன்,யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்;பைந்தொடி கேட்டி;
பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் 25
வருந்திப் புலம்புறு நோய்
தோழீ !நீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை;
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை;காதின் 30
மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்,
“அழகான நகைகள் உடையவளே!தாங்க முடியாத உன் மன வருத்தம் எனக்கு தெரியும்.பெரும் சிறப்புடைய மதுரைக்கு உரிய தெய்வம் நான்.என் பெயர் ‘மதுராபதி’.உனக்கு சில உண்மைகளைச் சொல்ல இப்பொது வந்தேன்.நானும் உன் கணவனின் நிலை கண்டு கவலையில் இருக்கிறேன்.பசிய பொன்னால் செய்த வளையல் அணிந்தவளே !கேட்கிறாயா ?
பெரும் தகுதியுடைய பெண்ணே ! என் நெஞ்சம் வருந்தி புலம்பச் செய்த நோயை பற்றிக் கேள் !என் மன்னனான செழியனுக்கு,முன் செய்த செயலின் பயன் வந்த விதத்தைப் பற்றிக் கேள் !உன் கணவனுக்குத் துன்பம் வருமாறு வந்த முன்வினையின் நிலை ஒன்று இருக்கிறது ,பெண்ணே !அதையும் நீ கேள் !
பிராமணர் தன் நாவால் ஓதும் வேதத்தின் ஓசையைத் தவிர,ஒரு பொழுதும் தன் அரண்மனையில் நியாயம் கேட்டு ஒலிக்கும் ஆராய்ச்சி மணியின் நாவல் எழும் ஓசையைக் கேட்டறியாதவன் பாண்டிய மன்னன்!தன் அடி தொழுது பணியும் பகை மன்னர்களும்,தன் குடிமக்களும் பழிதூற்றும் கொடுங்கோலனும் அவன் இல்லை!”,என மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் விளக்கத் தொடங்கினாள்….
குறிப்பு
- ஆர்-பொறுத்தற்கரிய
- அஞர்-துயரம்
- அணி-அழகு
- இழாஅய்-இழையாள்,அணிகலன் அணிந்தவள் (இழை-அணிகலன்)
- கட்டுரை-பொருள் பொதிந்த சொல்
- கவற்சியேன்-கவலையுடன் இருக்கிறேன் (கவற்சி-கவலை)
- பைந்தொடி-பசிய பொன்னால் செய்த வளையல்(தொடி-வளையல்)
- கேட்டி-கேட்பாய்
- தகை-தகுதி
- புலம்புறும்-புலம்புவதற்கு உரிய
- கோமகன்-மன்னன்
- ஊழ்வினை-முன் செய்த வினை
- வந்தக் கடை-வந்தபடி
- தீது-கொலை
- மாதராய்-பெண்ணே
- ஈது-இது
- காதின்-காதுகளால் கேட்பாயாக
- மறை-வேதம்
- யாவதும்-யாதொன்றையும்
- இறைஞ்சா-வணங்காத
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in