மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

APK9கட்டுரை காதை

6.பராசரன்
kak4

இன்னுங் கேட்டி !நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55

திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை,
அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள்,
புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்;
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்,
தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60

வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன்,
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு,
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்,
காடும் நாடும் ஊரும் போகி, 65
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு,

நான் சொல்லும் உண்மையை நீ மேலும் கேள் !..’,என மதுராபதித் தெய்வம் மேலும் தொடர்ந்தாள் …

‘புறாவிற்காகத் தன் சதையை அறுத்து,தராசில் வைத்த சிபி மன்னன்,பசுவிற்காகத் தன் மகனையே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆகியோரின் மரபில் வந்து,அறநெறியில் செலுத்தப்படும் செங்கோலையும்,வீர மரபில் செலுத்தப்படும் நீண்ட வாளையும் உடையவர்கள் சோழர்கள்.அவர்களின் நீர் வளமுடைய வயல்கள் நிறைந்த,மிகுந்த விளைச்சல் உடைய நல்ல நகரம் புகார்.அங்கு அறிவில் சிறந்த பராசரன் எனும் பிராமணர் ஒருவர் இருந்தார்.

திருந்திய வேலேந்திய பெரிய கையையும்,நிலையான செல்வத்தைப் பெற்ற நாளோலக்கம் எனும் கொலு மண்டப இருக்கையையும்,தன்னோடு குலவி வரும் வேல்படையையும் கொண்டவர் உதியன் சேரலாதன் எனும் சேர மன்னன்.இவர் பாரதப் போரில் பாண்டவர் கவுரவர் ஆகிய இரு படைகளுக்கும் நிறைவான உணவு அளித்த வள்ளல்.இவரின் கொடைச் சிறப்பைப் பற்றி பராசரன் கேள்விப்பட்டார்.

வளமான தமிழ்மறைகளில் வல்லவரான பாலைக் கவுதமனார் எனும் பிராமணருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய,உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய அந்தச் சேர மன்னனைக் காணவேண்டும் என்று எண்ணினார்.காடு,நாடு,ஊர் என அனைத்தையும் கடந்து,உயர்ந்த நிலையுடைய பொதியமலையும் பின்னால் கிடைக்கும்படி வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்…’

குறிப்பு

 1. கேட்டி-கேட்பாயாக
 2. வாய்-மெய்
 3. அறன்-அறம்
 4. அறி-அறிந்த
 5. மறநெறி-வீர வழி(மறம்-வீரம் நெறி-வழி)
 6. நெடுவாள்-நீண்ட வாள்
 7. புறவு-புறா
 8. கறவை-மாடு கன்று
 9. பூம்-பொலிவு
 10. புனல்-நீர்
 11. பழன(ம்)-வயல்
 12. விளையுள்-விளைபொருள்,விளைச்சல்
 13. வலவை-வல்லமை
 14. தடக்கை-பெரிய கை
 15. பெருநாளிருக்கை-மன்னரின் நாளோலக்கம்(கொலு மண்டபம்) இருக்கை
 16. குலவு-விளங்கும்
 17. திறன்-இயல்பு
 18. வண்-வளமை
 19. மறையோர்-அந்தணர்,பிராமணர்
 20. திண்-திடமான
 21. திறல்-ஆற்றல்
 22. காண்கு-காண்பேன்
 23. போகி-கடந்து
 24. மலையம்-பொதிய மலை

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>